தலைக்கு மேல் கத்தி

By ந.வினோத் குமார்

ஹிரோஷிமா நாள்: ஆகஸ்ட் 6

‘அணு அணுவாய்ச் சாகக் காதல் ஒரு சிறந்த வழி' என்பார் கவிஞர் அறிவுமதி. ஆனால், இந்தப் பூமி மொத்தமும் ஒரேயடியாகச் சாக ஒற்றை அணுகுண்டுபோதும் என்பது அதிர்ச்சியான, அதேநேரம் உண்மையான செய்தி!

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி உலகம் முழுக்க, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் காரணமாக ‘ஹிரோஷிமா தினம்' அனுசரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ‘இந்தியாவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது' என்று வெளியாகி இருக்கும் செய்தி, நம்மை இன்னும் பீதிக்கு உள்ளாக்குகிறது. உலகில் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக மேலும் சில தகவல்கள்:

அணு ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ‘ஸ்டாக்ஹோம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்', ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க இருக்கும் அணு ஆயுதங்களின் நிலை குறித்து அறிக்கை வெளியிடுகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘உலகம் முழுவதும் அணு ஆயுதங்களின் இருப்பு குறைந்து வருகிறது. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு 90-ல் இருந்து 110 ஆகவும், பாகிஸ்தானில் 100-ல் இருந்து 120 ஆகவும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகளில் மொத்தம் 16,350 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் ரஷ்யாவிடம் மட்டும் 8 ஆயிரம் ஆயுதங்கள் உள்ளன.

இங்கிலாந்திடம் 'ட்ரைடென்ட்' எனும் வகை அணு ஆயுதம் உள்ளது. நான்கு நீர்மூழ்கி கப்பல்களில், ஒவ்வொரு கப்பலிலும் 16 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைப் போன்று ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் இடத்தில் அணுகுண்டு வெடித்தால், அதை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட மின்னணு எச்சரிக்கை இயந்திரங்கள் மூலமாக மட்டுமே அறிந்துகொள்ள முடியும். ஆனால், நம்மிடையே இருக்கும் மற்ற மின்னணு இயந்திரங்களைப் போலவே, மேற்கண்ட எச்சரிக்கை இயந்திரமும் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆக, ஒருவேளை அணுகுண்டு வெடிக்கும்போது, அந்த எச்சரிக்கை இயந்திரம் பழுதடைந்து செயல்படாமல் போனால், மீண்டும் திருத்தவே முடியாத விபரீதங்களை நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே ஆக வேண்டும் என்பது யதார்த்தம்.

அணு ஆயுதங்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலகத்தில் எந்த மூலையிலும் தகுந்த மருத்துவ வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் எங்கேனும் வெறும் 100 அணு ஆயுதங்களைக்கொண்டு ஏதேனும் அணு யுத்தம் நிகழ்ந்தால், அதன் காரணமாகப் பருவநிலை மற்றும் வேளாண்மை ஆகியவை பாதிக்கப்பட்டு, சுமார் 200 கோடி மக்களின் வாழ்க்கை நிர்மூலமாகும். இதில் இன்னொரு வருந்தத்தக்க செய்தி... இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அவை பூமியின் மொத்தச் சூழலியலுக்கும் ஆபத்தாக முடியும்.

மெக்சிகோவில் ‘அணு யுத்தத் தடுப்பு மருத்துவர்களின் சர்வதேசச் சங்கம்' 2014- ஆண்டில் நடத்திய மாநாட்டில் 146 நாடுகள் கலந்துகொண்டன. அவை அனைத்தும் அணு ஆயுதங்களுக்குத் தடை விதிக்கும் உடன்படிக்கையை ஏற்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் 9 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இருக்கும் பகைமை, வட கொரியாவின் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ரஷ்யாவின் தான்தோன்றித்தனமான போக்கு ஆகியவற்றின் காரணமாக விரைவில் அணு ஆயுதப் போர் நிகழ்வதற்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1980-ம் ஆண்டு முதல் ஆராய்ந்துவருகிறார் மார்டின் ஹெல்மேன். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர், ‘இப்போது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அணு ஆயுதப் போரால் கொல்லப்படுவதற்கு 10 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 mins ago

மேலும்