நோட்டாவுக்கு விழுந்த பசுமை வாக்குகள்

By ஆதி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி- தோல்விகளைப் பற்றியே பெரிதாகப் பேசப்படுகிறது. அத்துடன் அவசியம் பேசப்பட்டிருக்க வேண்டிய மற்றொரு விஷயம் நோட்டா (None Of The Above).

முன்பு 49 ஓ என்ற பெயரில் இருந்த இந்த வாய்ப்பு, தற்போது நோட்டாவாக மாறியிருக்கிறது. வாக்கைச் செலுத்துவேன், ஆனால் களத்தில் உள்ள வேட்பாளர்கள் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டது. நீண்டகாலமாகச் சட்டத்தில் இருந்தும், நடைமுறையில் இல்லாமல் இருந்தது. இது பற்றித் தேர்தல் அலுவலர்களுக்கே தெரியாத நிலைமையும் இருந்தது.

2013-ல் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலேயே நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதுதான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டது. பா.ஜ.கவுக்குக் கிடைத்த பெருவெற்றி, பதிவான நோட்டா வாக்குகளின் முக்கியத்துவத்தைச் சற்றுக் குறைத்துவிட்டது என்று சொல்லலாம்.

இந்த முறை நாடு முழுவதும் 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நோட்டாவில் பதிவாகி இருக்கின்றன. இது மொத்த வாக்குகளில் 1.1 சதவீதம். இதில் உத்தரப்பிரதேசம் 5.9 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. வாக்குகள் எண்ணிக்கை 5,82,062. இது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசம் நம்மைப் போன்ற இரண்டு மடங்கு தொகுதிகளைக் கொண்ட மாநிலம். அங்கே பெற்றுள்ள நோட்டா வாக்குகளுக்கு இணையாகத் தமிழகமும் பெற்று உள்ளதைக் கவனிக்க வேண்டும்.

நீலகிரி நாட்டிலேயே அதிகம்

தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் குறைந்தபட்சமாக 4,748 வாக்குகள் பதிவாயின, அதிகபட்ச மாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா போட்டியிட்ட நீலகிரி தொகுதியில்தான் நாட்டிலேயே அதிகபட்ச நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கை 46,559. இதற்கு அந்தத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் போட்டியிட முடியாமல் போனதும் ஒரு காரணம். ஆ.ராசா 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கியது மற்றொரு காரணம்.

மோடி முன்பு முதல்வராக இருந்த குஜராத், 4.5 லட்சம் நோட்டா வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. நோட்டா சதவீத அடிப்படையில் மேகாலயா முதலிடத்தில் இருக்கிறது. அங்குப் பதிவான மொத்த வாக்குகளில், நோட்டா வாக்குகள் 2.8 சதவீதம்.

பழங்குடி தொகுதிகளில்

தி இந்து (ஆங்கிலம்) நடத்திய ஓர் ஆய்வில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் சராசரியாக 10,000 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாகப் பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் பதிவான நோட்டா வாக்குகளின் சதவீதம், பொதுத் தொகுதிகளைப் போல இரண்டு மடங்கு.

நீலகிரி தொகுதி தலித் தனித் தொகுதி என்பதைக் கவனிக்க வேண்டும். "தேர்தலுக்கு முன் யாருக்கு வாக்களிப்பது என்று பழங்குடிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஒரு பிரிவு நோட்டாவைத் தேர்ந்தெடுத்தாலும், மற்றொரு பிரிவினர் தங்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பினர். அதாவது, நிலப் பட்டா பெற்றுத் தரும் கட்சிக்கு. பழங்குடிகள் நிறைந்த இந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் பட்டா இல்லாமல் போராடி வருகின்றன” என்று ‘டவுன் டு எர்த்' சுற்றுச்சூழல் இதழிடம் பழங்குடி செயல்பாட்டாளர் சி.ஆர்.பிஜாய் கூறியுள்ளார்.

குஜராத்தில்

குஜராத்தில் சுற்றுச்சூழல், காடு தொடர்பான பிரச்சினைகள் நிலவும் தொகுதிகளில்தான் அதிக நோட்டா வாக்குகள் பதிவாகி இருப்பதாகச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் ரோஹித் பிரஜாபதி, திருப்தி ஷா ஆகியோர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாஹோத் தொகுதியில் பதிவான 32,000 வாக்குகள் அந்தத் தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. பழங்குடிகளுக்கான உரிமைகளும், தண்ணீர் பற்றாக்குறையும் இந்தப் பழங்குடி தனித் தொகுதியில் நிலவும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள்.

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் தொகுதியில் 38,772 வாக்குகளைப் பெற்று நோட்டா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு, மாவோயிஸ்ட் தாக்குதலில் இறந்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மாவின் மகன் தீபக்கை 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவின் தினேஷ் காஷ்யப் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதி சுற்றுச்சூழல், வளர்ச்சிப் பிரச்சினைகளால் திணறிவருகிறது. தேசியக் கனிம வளர்ச்சிக் கழகத்தின் கனிமச் சுரங்க நடவடிக்கைகளை மக்கள் இங்குக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதேநேரம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நிலவும் எல்லாத் தொகுதிகளிலும் நோட்டா வாக்குகள் அதிகம் பதிவானதாகக் கூறிவிட முடியாது. நாட்டிலேயே அதிக சதவீத நோட்டா வாக்குகள் பதிவான மேகாலயத்தில் இந்த நிலைமையைப் பார்க்கலாம். "நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் இடங்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கே வாக்களித்திருக்கிறார்கள்" என்கிறார் நிலக்கரி சுரங்கப் பணிகளுக்கு எதிராகப் போராடிவரும் அர்வத் சல்லம்.

மேற்கண்ட உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது, சுற்றுச்சூழல்-வளர்ச்சிப் பிரச்சினைகள் அதிகமுள்ள இடங்களிலும் பழங்குடி, தலித் தொகுதிகளிலும் மக்கள் நோட்டா வாக்கைக் கூடுதலாகத் தேர்ந்தெடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மாநில அளவில் நோட்டா வாக்குகள் தற்போது மட்டும் 1 - 3 சதவீதம் பதிவாகி இருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நோட்டா பற்றி கடந்த தேர்தல் வரை பெரும்பாலோருக்குத் தெரியாது. இந்த முறையும் பரவலான விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களில் நோட்டா முக்கிய இடத்தைப் பெறும். வாக்கு இயந்திரத்தில் அது கடைசி இடத்தைப் பிடித்தாலும், அரசியல் வாதிகள் மீதான அவநம்பிக்கையின் அளவுகோலாக அது மாறும் காலம் வரும் என்று நம்பலாம்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

இந்தியா

51 mins ago

ஓடிடி களம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்