கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்

By காட்சன் சாமுவேல்

சமீபத்தில் அழகுராஜ் என்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர், தான் செய்திருக்கும் பனையோலைப் புதிர் ஒன்றை எனக்குக் காண்பித்தார். சிறு வயதில் ஆடு மேய்க்கச் சென்றிருக்கையில் யாரோ அவருக்குக் கற்றுக்கொடுத்ததாகவும், பின்னர் தனது பொறியியல் கல்விப் பணியின்போது இதை நினைவிலிருந்து மீட்டெடுத்ததாகவும் கூறினார். இந்தப் புதிர் பல்வேறு வகையில் முக்கியமானது. தொன்மையான மனதும் நவீனப் பொறியியல் அறிவும் இணையும் ஓர் அதிசயப் புள்ளி இது.

இரண்டு சம அளவிலான ஓலைகள் ஒன்றுடன் ஒன்று பின்னியிருக்கும் இந்தப் புதிரை எப்படிச் செய்வது என்பது ஒரு ரகசியமாகவே இருக்கட்டும். ஏனெனில், இதிலுள்ள புதிர் என்பதே, இந்த ஓலைகள் இணைந்த பின் எப்படி ஓலைகள் கிழிபடாமல் பிரிக்க வேண்டும் என்பதுதான். புதிதாக முயன்று பார்ப்பவர்கள் அனைவரையும் இப்புதிர் சற்றே திகைக்கவைத்துவிடும். ஆனால், பொறுமையுடனும் கவனத்துடனும் செய்தால் விடை கிடைத்துவிடும்.

இந்தப் புதிரை உருவாக்குகையில் ஒரே அளவுள்ள ஓலைகளை எடுத்து, ஒரே அளவுள்ள கீறல்களை உருவாக்க வேண்டும். பின்னல் முறை, ஓலைகளை அவதானித்தல் போன்ற பயிற்சிகள் ஒருங்கே அமைந்திருக்கின்றன. இவ்விதம் ஒரு புதிரைத் தயாரிக்கும் நேரம் குழந்தைகளுக்கு மகிழ்வளிக்கும் பயனுள்ள நேரமாக இருக்கும். அது மாத்திரமல்ல, விடையளிக்க வேண்டிய குழந்தை ஆர்வத்துடன் இவ்விதக் கலைகளைக் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கும்.

பாரம்பரியமாகவே புதிர்கள் நமது வாழ்வில் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றன. புதிர்கள் புத்தியைக் கூர்மைப்படுத்தவும் பல்வேறு கணித, தத்துவக் கேள்விகளுக்கு விடையளிக்கவும் அடிப்படையாக இருக்கின்றன. இப்புதிரின் தொன்மையை அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால், ஓலைகளைப் பல காலமாகப் பயன்படுத்திவந்த நமது சமூகத்தில் இவை நெடுங்காலமாக உயிர்ப்புடன் இருக்கின்றன. DNAவைப் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த வடிவம் பல்வேறு முறையில் நவீன வாழ்வில் பங்களிக்கும் தன்மையுடையது என நம்புகிறேன்.

இந்தப் புதிர் எனது கரத்தில் வந்த பின்பு, இப்புதிரின் வடிவம் இதன் மாற்றுச் சாத்தியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்புதிர்களை நாம் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கித் தொங்கவிட்டால் சிறந்த நவீன அலங்காரத் தோரணத்தை அமைத்துவிடலாம்.

நவீன காலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. பள்ளிக்கூடங்கள்தாம் இவ்விதப் பாரம்பரிய ஓலைப் புதிர்களைச் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைக்கு மட்டுமல்லாது, தற்சார்புப் பொருளாதாரத்துக்கும் ஏற்றவை இப்புதிர்கள்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சுற்றுச்சூழல்

13 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

8 mins ago

விளையாட்டு

29 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்