சூழலை எதிர்கொள்ள ஒரு கண்காட்சி

By ரிஷி

இந்தியக் கட்டிடக் கலை நீண்ட பாரம்பரியம் கொண்டது. கட்டிடங்களை ரசனையுடன் உருவாக்குவதில் இந்தியர்களுக்கு ஆதியிலிருந்தே ஆர்வமிருந்திருக்கிறது. ரசனையுடன் தொழில்நுட்பமும் கலந்து கட்டிட உருவாக்கத்தை முறையான கல்வி வழியாகக் கொடுப்பதற்காக 1930-களிலேயே இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்க்கிடெக்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆகவே ஆர்வமுள்ள மாணவர்கள் கட்டிடக் கலை குறித்த பயில வாய்ப்புக் கிடைத்தது. அங்கு பயின்றவர்கள் கட்டிடக் கலையைப் பேணி வளர்த்தார்கள். ரசனையும் தொழில்நுட்பமும் கலந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்களை அவர்கள் இந்தியா முழுவதும் உருவாக்கினார்கள்.

பண்பாட்டைக் குலைக்காத தங்களது கட்டிடக் கலை பற்றிய அறிவை விசாலப்படுத்த அவர்களுக்குப் பொது விவாத மேடை தேவைப்பட்டது. ஆகவே ஐஐஏ நிறுவனத்தின் இதழ்களில் கட்டிடக் கலையில் நடைபெறும் மாற்றங்கள் புதுமை முயற்சிகள் போன்றவை விவாதிக்கப்பட்டன. கட்டிடக் கலையால் ஏற்படும் அனுகூலங்களும் அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களும் துறைசார் நிபுணர்களுடனான உரையாடல் மூலம் மேலும் வலுப்பெற்றது.

ஆண்டுதோறும் ஐஐஏ நிறுவனம் கட்டிடக் கலை பற்றிய கருத்தரங்கங்களையும் நடத்திவந்தது. ஆகவே கட்டிடக் கலை தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ அது வாய்ப்பாக அமைந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாட்டு விடுதலைக்குப் பின்னே இத்தகைய கருத்துப் பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகள் குறைந்துபோயின. இருந்தாலும் தொடர்ந்து ஐஐஏ இதற்கான மேடைகளை அமைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது.

ஆனால் எழுபதுகளின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாலும் தனியார் துறைகளின் வளர்ச்சியாலும் நாட்டின் கட்டிடத் துறையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து உலகமயமாக்கம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் தன் காலடிகளைப் பதித்தது. இவையெல்லாம் சேர்ந்த ஐஐஏ நடத்தும் விவாதங்களைப் பாதித்தன.

தொடக்கத்தில் நமது சூழல் மண்டலத்தைப் பெரிதும் பாதிக்காத வகையிலேயே கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நமது சூழல் மண்டலம் நீடித்திருக்க இயலாத வகையிலான மாற்றங்கள் கட்டிடத் துறையில் உருவாயின. பசுமை நோக்கம் பின் தள்ளப்பட்டது. கட்டிடங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கத் தொடங்கியது. ரெஸ்டாரண்டுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமான புதியவகை கட்டிடங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் இவற்றையெல்லாம் விவாதிக்க ஐஐஏ அமைத்தது போன்ற ஒரு பொது வெளி தேவைப்பட்டது.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மும்பையில் ஒரு கண்காட்சி கடந்த ஜனவரி 6 அன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. ராகுல் மெஹ்ரோத்ரா, ரஞ்சித் ஹாஸ்கோட், கைவான் மேத்தா ஆகியோர் இந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்திவருகிறார்கள். 1990-ல் ராகுல் மல்ஹோத்ரா அஸோசியேட்ஸ் என்னும் அமைப்பை நிறுவிய ராகுல் மெஹ்ரோத்ரா ஆர் எம் ஏ ஆர்கிடெக்ட் நிறுவனத்தின் முதல்வர்.

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நகர உருவாக்கம், வடிவமைப்பு குறித்த துறையின் தலைவர். ரஞ்சித் ஹாஸ்கோட் பண்பாட்டு அறிஞர், எழுத்தாளர், கலை விமர்சகர். கைவான் மேத்தா கட்டிட வடிவமைப்பு நிபுணர், இந்தியப் பண்பாடு குறித்தும் கல்வி பயின்றுள்ளார். இண்டியன் ஸ்கூல் ஆஃப் டிசைன் அண்ட் இன்னோவேஷன் நிறுவனத்தில் இயக்குநர்.

கட்டிடக் கலை தொடர்பாகக் கடந்த பத்திருபது ஆண்டுகளாக இந்திய சமூகத்தில் நிலவிய நீண்ட நாள் மௌனத்தைக் கலைப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கங்களில் பிரதானமானது என்கிறார் மஹ்ரோத்ரா. நாட்டு விடுதலைக்குப் பிறகு நாட்டின் கட்டிடக் கலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், வளர்ச்சிகள் போன்றவை இதில் விவாதிக்கப்படுகின்றன. இன்றைய கட்டிடக் கலையின் நிலை பற்றியும் ஆழமாகவும் விரிவாகவும் பேசப்படுகின்றன. இந்தக் கண்காட்சியின் போது நடைபெற்ற கருத்தரங்குகளில் இந்தியாவின் முன்னணிக் கட்டுமான நிபுணர்களும் கலைஞர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

கண்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களும் நிபுணர்களுடன் கலந்துரையாடும் வகையிலான வாய்ப்புகளும் இதில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கட்டிடத் துறையில் ஈடுபட்டு வரும் கட்டுநர்களும், கட்டுமானத் துறையில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும், பயிலும் மாணவர்களும் என கட்டுமானத் துறையுடன் தொடர்புகொண்ட அனைவரும் கூடி விவாதிக்கும் களமாக இந்தக் கண்காட்சி அமைந்திருக்கிறது.

மார்ச் 20 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் கட்டுமானக் கலை, அதன் தொழில்நுட்பம், கட்டிடக் கலையால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் என அத்துறை தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருப்பதால் அது எதிர்வரும் நாட்களில் கட்டிடக் கலையை ஊக்குவிக்கும் வகையில் அமையும் எனத் துறை சார் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்