அதிகரிக்கப் போகிறதா வீடுகளின் விற்பனை?

By ரோஹின்

ரியல் எஸ்டேட் துறையில் வீடுகளின் விற்பனை நமது கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதை அனுமானிக்க முடியாமல் உள்ளது. இது தொடர்பாக ஏதாவது அறிக்கை வரும்போது மட்டுமே எவ்வளவு வீடுகள் விற்பனையாகியுள்ளன என்ற தகவல் நமக்கு வந்து சேருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ளது சொத்து வாங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கும் ஜேஎல்எல் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை. இந்த அறிக்கையில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஏழு இந்திய நகரங்களில் வீடுகளின் விற்பனை இந்த ஆண்டில் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நகரங்களில் கடந்த ஆண்டு வீடுகளின் விற்பனை அதற்கு முந்தைய ஆண்டைவிட மந்தமாகவே இருந்தது என்கிறது இந்த அறிக்கை. 2013-ம் ஆண்டில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, புனே ஆகிய ஏழு நகரங்களில் சுமார் 2 லட்சம் வீடுகள் விற்பனையாகியிருந்தன.

ஆனால் கடந்த ஆண்டு இந்த ஏழு நகரங்களில் வீடுகளின் விற்பனை குறைந்து 1.75 லட்சம் வீடுகளே விற்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த நிலைமை வரும் ஆண்டில் மாறும் என்றும் வீடுகளின் விற்பனை இந்த ஏழு நகரங்களிலும் அதிகமான அளவில் இருக்கும் என்றும் ஜேஎல்எல் நிறுவன அறிக்கை ஆரூடம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டில் சுமார் 2.2 லட்சம் வீடுகள் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் இந்த எண்ணிக்கை வரும் ஆண்டில் சரிவடையும் என்றும் சுமார் 2.18 லட்சம் வீடுகள் மட்டுமே உருவாக வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஜேஎல்எல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அனுஷ் பூரி கூறும்போது, கடன் மீதான வட்டி வீதம் குறைந்திருப்பதாலும், விலை மலிவான வீடுகளின் மீது கட்டுமான நிறுவனங்களில் கவனம் திரும்பியிருப்பதாலும், வீடுகளின் விலை நிலையாக இருப்பதாலும், நல்ல வேலையும் வருமானமும் கிடைத்துவருவதாலும் இந்த ஆண்டு வீடுகளை வாங்குவோருக்கு அனுகூலமான ஆண்டாக இருக்கும் என்கிறார். பொருளாதார நிலை சிறிது சிறிதாக மேம்பட வாய்ப்பு உள்ளதாலும், கடனுக்கான வட்டி வீதம் மேலும் குறையக்கூடும் என்பதாலும் இந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காணும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

தங்களது முதலீட்டால் உருவாகியுள்ள வீடுகளை விற்க வேண்டும் என்ற முனைப்புடன் வீடுகளை வாங்குவோரைக் கவரும் வகையில் வீடுகளை விற்க கட்டுமான நிறுவனங்கள் முன்வந்துள்ளதாலும், பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் வீடுகளின் விலை நிலைபெற்றுவிட்டதாலும் வீடுகளை வாங்கவா வேண்டாமா என்ற விளிம்புநிலையில் இருக்கும் பெரும்பாலானோர் வீடுகளை வாங்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.

கட்டுமான நிறுவனங்கள் பெருமளவில் மலிவுவிலை வீடுகள் மீது கவனம் பதித்திருப்பதால், வீட்டுத் தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளி குறையும் என்றும் தெரிகிறது. சிறிய, சிறந்த வடிவமைப்பிலான, அதிக சிறப்பம்சங்கள் கொண்ட வீடுகளே 2015-ல் இந்திய ரியல் எஸ்டேட்டில் குடியிருப்புகளின் சந்தையைத் தீர்மானிக்கும் என்றும் அதிக விலை கொண்ட வீடுகளைக் கொண்ட நகரங்களில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களும் அதிக விலையிலான வீடுகள் விற்க சிரமப்படும் நிலையை மாற்றி வீடு களை விரைவாக விற்க உதவும் என்றும் ஜேஎல்எல் கூறுகிறது.

தகவல்: பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

7 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்