வண்ணக் கலவையில் சூரிய மின்சக்தி

By சுந்தரி

ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டால் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்து மின்னாற்றல் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். இதை முன்னெடுக்க வேண்டும் என அரசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் ஒருவிதமான சுணக்கம் நிலவுகிறது. சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்குப் பொருளாதாரச் சிக்கல் தடையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

இதனாலேயே சூரிய சக்தி மின்சாரம் என்னும் சுற்றுச்சூழல் சார் மின் உற்பத்தி இன்னும் பரவலாகாமல் உள்ளது. இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுவது போன்ற ஒரு தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத் துறையில் ஹாட் டாப்பிக்காகப் பேசப்படும் அந்தத் தொழில்நுட்பம் திரவ நிலையில் உள்ள சோலார் பேனல்களே.

அதாவது, வழக்கமாக சோலார் மின்சார உற்பத்திக்கு சூரியசக்தி மின் தகடுகள் பயன்படும். இவை திட நிலையில் காணப்படும் ஆனால் சோலார் பெயிண்டுகள் திரவ நிலையில் காணப்படும் இவற்றிலிருந்து சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்னும் உத்தியே கட்டுமானத் துறையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரியக் கதிர்களில் வெளிப்படும் ஒளி ஆற்றலிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும் முறையில் இதுவரை சூரிய சக்தி மின்தகடுகளே பயன்பட்டுவந்தன. ஆனால், இத்தகைய சூரிய சக்தி மின்சார உற்பத்திக்குத் திரவ நிலையில் சோலார் பேனல்கள் உருவாகும் காலம் மிகச் சமீபத்தில் வந்துள்ளது என்கிறார்கள். தளங்களிலும்,சுவர்களிலும் சோலார் பேனலாகச் செயல்படும் வகையிலான பெயின்டைப் பூசும்போது அதிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்ய இயலும் என்று தெரிவிக்கின்றனர் அறிவியலாளர்கள்.

திரவத் தகடு

ஒளி ஆற்றலை மின்னாற்றலை மாற்றும் திறன் கொண்ட சோலார் செல்களின் தொகுப்பே சோலார் பேனல் எனச் சொல்லப்படுகிறது. பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகான் என்னும் வேதிப்பொருளைப் பயன்படுத்தித்தான் இத்தகைய சூரிய சக்தி மின் தகடுகளை உருவாக்குகின்றனர். மெல்லியதாக இந்தச் சூரியசக்தி மின் தகடை உற்பத்தி செய்ய அதிகச் செலவு பிடிக்கும் என்கிறார்கள். இந்தச் செலவைக் குறைத்து சூரியசக்தி மின் தகடை உருவாக்கும் முயற்சிகளும் உலகெங்கிலும் நடந்துவருகின்றன. இந்த முயற்சியின் விளைவாக, பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகைப் பொருட்களைச் சூரியசக்தி மின் தகடாகப் பயன்படுத்தினால் அதிக அளவிலான மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதற்கு ஆகும் செலவும் மிகவும் குறைவு என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இது திரவ வடிவில் காணப்படுவதால் பயன்படுத்துவதும்

எளிது. திரவ வடிவில் இருக்கும் சூரியசக்தி மின் தகடைச் சுவர், தரை என எந்தப் பகுதியிலும் வண்ணம் போல எளிதில் பூச முடியும். சூரிய ஒளி படும் அனைத்து இடங்களிலும் இதைப் பூசினால் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூழல் உருவாகும். இது மட்டுமன்றி, கார்பனை அடிப்படையாகக் கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மெல்லிய பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கும் செலவு குறைவாகவே ஆகும் என நம்பப்படுகிறது.

சோலார் கொடிகள்

இந்நிலையில் சோலார் கொடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கண்டுபிடிப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அநேக செயற்கை இலைகளைக் கொண்டு கொடிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு ‘சோலார் ஐவி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கொடிகளை வீட்டின் வெளிப்புறத்திலுள்ள சுவர்களில் படர்த்திவிட்டால் போதும் அவற்றில் படும் சூரிய ஒளியிலிருந்து, அவை மின்னாற்றலைப் பிரித்து மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும். இயற்கையான கொடிகளைப் போன்று கண்ணைக் கவரும் விதமாக அழகாகப் படர்ந்திருக்கும்.

வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் உற்பத்தி செய்துகொள்ளலாம். இதில் போட்டோவோல்டெய்க் பேனல்கள் எனப்படும் நுட்பமான மெல்லிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. நமக்கு எவ்வளவு மின்சாரம் தேவையோ அதற்கு ஏற்ப இத்தகைய கொடிகளைப் படரவிடலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இத்தகைய கொடிகள் கிடைக்கின்றன. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள். இறுதிக்கட்ட ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், இது பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனக் கூறுகிறார்கள்.​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

மேலும்