ரியல் எஸ்டேட் : கைகொடுக்குமா ‘பட்ஜெட்-2017’

By ரிஷி

கடந்த ஆண்டின் மந்த நிலையிலிருந்து மீண்டெழ இந்த ஆண்டின் பட்ஜெட்டை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது ரியல் எஸ்டேட் துறை. ஏனெனில் 2016-ம் ஆண்டைப் பொறுத்த அளவில் அதன் இறுதியில் அத்துறை எதிர்கொண்ட அடி சாதாரணமானதல்ல. அதிலிருந்து மீள்வதற்குப் பலமான ஆதரவு அத்துறைக்கு அவசியம். அத்தகைய ஆதரவைத் தரும் வகையில் இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் அமையும்போது மாத்திரமே இந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை தன் சரிவிலிருந்து மீண்டு ஏறுமுகம் காண முடியும்.

ரியல் எஸ்டேட் துறைக்குத் தொழிற்துறை அந்தஸ்து, திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்குவதில் ஒற்றைச் சாளர முறை, கட்டுமானத் திட்டங்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு, முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கான சலுகை, வீட்டுக்கடன்களில் சலுகை உள்ளிட்ட பல அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ ரியல் எஸ்டேட் துறை உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதப் பங்களிப்பை வழங்கிவருகிறது. இருந்தபோதும் இந்தத் துறைக்குத் தொழிற்துறை அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை. இத்தகைய அந்தஸ்து இத்துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தொழிற்துறை அந்தஸ்து இல்லாத காரணத்தால் அதிக வட்டிக்குப் பணம் புரட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆகவே, நிதி பிரச்சினைகள் காரணமாகக் கட்டுமானத் திட்டங்களைக் குறித்த காலத்தில் முடிக்க முடியாத சூழலும் வீடுகளை அதிக விலைக்கு விற்க வேண்டிய சூழலும் நிலவுகிறது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டிலாவது இத்துறைக்குத் தொழிற்துறை அந்தஸ்து அளிக்கப்பட்டால் அது ரியல் எஸ்டேட் துறைக்கு அனுகூலமாக அமையும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகிறார்கள்.

கட்டுமானத் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கும்போது ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்பட்டால் ஒப்புதலுக்கான கால தாமதம் தவிர்க்கப்படும். இதனால் கட்டுமானத் திட்டங்களைக் குறித்த காலத்தில் முடித்து நுகர்வோரிடம் ஒப்படைக்க முடியும். இந்த ஒற்றைச் சாளர முறையைக் கொண்டுவர வேண்டும் எனவும் ரியல் எஸ்டேட் துறையினர் தொடர்ந்து கோரிவருகின்றனர். பட்ஜெட் வழியே இதுவும் செயல்வடிவம் பெற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் இத்துறையினரிடையே நிலவுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு, பிரதமரின் தேசிய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 12 லட்சம் வரை வீட்டுக் கடனை 3 சதவீத வட்டி விகிதத்திலும், 9 லட்சம் வரை 4 சதவீத வட்டி விகிதத்திலும் வழங்க உள்ளது என்று அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு மூலம் யாரெல்லாம் பயன்பெறுவார்கள் என்பது பட்ஜெட் மூலம் தெளிவு படுத்தப்பட்டால் அதுவும் ரியல் எஸ்டேட் துறைக்கு உந்து சக்தியாக அமையும் என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் நம்புகிறார்கள்.

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கிக் குடியேறியவர்களுக்கு வருமான வரியில் இரண்டு லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டுமானம் நடைபெற்றுவரும் வீடுகளுக்குக்கான வருமான வரி விலக்கு 30 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதுவும் அந்த வீடு வீட்டுக் கடனைப் பெறத் தொடங்கிய வருடத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது விதி. அதுவரை தான் அந்த வரிவிலக்குக் கிடைக்கும். ஒருவேளை வீடு மூன்று ஆண்டுகளுக்கு மேலும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தால் நீங்கள் அதில் குடியேறவும் முடியாது; வரிவிலக்கும் கிடைக்காது என்பதே நிலை.

எதிர்பாராத காரணங்களால் கட்டுமானம் கால தாமதமாகும் போது நுகர்வோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை நீக்கும் விதமான அறிவிப்பையும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர். அதே போல் வீட்டுக் கடனில் வருமான வரிக்கான வரம்பு இரண்டு லட்சம் என்பது உயர்த்தப்பட வேண்டும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பு. ஏனெனில் பெரு நகரங்களில் இந்த வரம்பு மிகவும் குறைந்தபட்சமானது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படியாகப் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்பு பட்ஜெட் மூலம் நிறைவேற்றப்பட்டால் அதனால் ரியல் எஸ்டேட் துறை வளம் காணும் என்பதுடன் அதனால் வீடு வாங்குவோருக்கும் பயன் கிடைக்கும் என்பதே ரியல் எஸ்டேட் துறையினரின் நம்பிக்கை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

வணிகம்

18 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

59 mins ago

வாழ்வியல்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்