முதியவர்களுக்கான வீட்டுக் கடன்

By டி. கார்த்திக்

புதிதாக வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கி, மாதந்தோறும் இ.எம்.ஐ. மூலம் கடனை அடைக்கும் வீட்டுக் கடன் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வீட்டை அடமானம் வைத்து மாதாமாதம் வங்கியிடம் இருந்து பணம் பெறும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு கடன் திட்டத்தைப் பொதுத்துறை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.

‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ என்றழைக்கப்படும் இந்தக் கடன் திட்டம், 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கானது. இந்தக் கடன் திட்டத்திற்கான தகுதிகள், விதிமுறைகள் என்ன என்று பார்ப்போமா?

ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டம் மூலம், தன் பெயரில் வீடு இருக்கும் எந்த மூத்த குடிமக்களும் கடைசிக் காலத்தில் யார் தயவையும் எதிர்பார்க்கத் தேவையில்லை. தன் வீட்டை அடமானம் வைத்து மாதந்தோறும் பணத்தை வங்கியிடம் இருந்து பெற்றுச் செலவு செய்யலாம். அது எந்தச் செலவாக இருந்தாலும் பிரச்சினையில்லை. மூத்த குடிமக்களுக்குப் பயன்

அளிக்கும் இந்தக் கடன் திட்டத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் என்ன?

# 60 வயதைக் கடந்த இந்திய மூத்த குடிமக்களாக இருக்க வேண்டும்.

# வயதான மூத்த தம்பதியினர் இணைந்தும் கடன் பெறலாம். ஆனால், தம்பதியில் ஒருவர் 60 வயதைக் கடந்திருக்க வேண்டும்.

# நிச்சயம் சொந்த வீடு அல்லது ஃபிளாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீட்டில் எந்த வில்லங்கப் பிரச்சினையும் இருக்கக் கூடாது.

# வீட்டின் ஆயுள்காலம் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

# கடன் வாங்கும் முதியவர்களின் வீடு, நிரந்தர சொந்த வீடாக இருக்க வேண்டும்.

கடன் வழங்க தகுதிகள்

# வீடு அமைந்துள்ள இடத்தின் சந்தை மதிப்பு, கடன் பெறுபவரின் வயது, வட்டி விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் தொகை முடிவு செய்யப்படும்.

# சொத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்குக் குறைவாக இருக்கக் கூடாது.

# 60-70 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கு அதிகபட்சமாக 60 சதவீதம் கடன் தொகை கிடைக்கும்.

# 70-80 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கு 70 சதவீதத் தொகை கிடைக்கும்.

# 80 வயதுக்கு மேல் 75 சதவீத தொகை பெறலாம்.

# தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்ள வசதி உண்டு. அல்லது காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்ற வகையிலும் தொகையைப் பெறலாம். இது கடன் பெறுபவரின் விருப்பத்தைப் பொறுத்தது.

வீட்டை மீட்கலாம்

கணவனுக்குப் பிறகு மனைவிக்கும் கடன் தொகை வழங்க இந்தத் திட்டத்தில் இடமுண்டு. அவர்கள் காலத்துக்குப் பிறகு, வீட்டை ஏலம் விட்டு அதுவரை வழங்கிய கடனை வங்கி எடுத்துக்கொள்ளும்.

பணம் மீதியிருக்கும்பட்சத்தில் வாரிசுகளுக்குக் கொடுத்துவிடும். ஒருவேளை வாரிசுகள் வீட்டை மீட்க நினைத்தால், அதற்கும் இந்தக் கடன் திட்டத்தில் வசதிகள் உள்ளன.

மேலும் விவரங்களை http://www.nhb.org.in/RML/operational_guidelines.php என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

வணிகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்