அலசல்: எது பெண்களுக்கான படம்?

By ச.கோபாலகிருஷ்ணன்

ண்மையில் வெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ திரைப்படம், குடும்ப வாழ்க்கையின் அழுத்தத்தில் சிக்கிய நடுத்தர வயதுப் பெண்கள் தங்கள் இளமைக் கால நட்பைப் புதுப்பித்துக்கொள்ளும் கதையை மையமாகக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த அம்சம் ஓர் இடத்தைப் பிடிப்பதற்கே இத்தனை காலம் ஆகியிருக்கிறது.

அதேநேரம், கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களை மையமாகக் கொண்ட படங்களும் பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்களும் தமிழ் சினிமாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இளம் இயக்குநர்கள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் கதைகளைக் கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘36 வயதினிலே’,‘இறைவி’, ‘அம்மா கணக்கு’, ‘ஒரு நாள் கூத்து’, ‘தரமணி’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் பெண்கள் சார்ந்த படங்களின் எண்ணிக்கை அதிகரித்த்துவருவதைக் காட்டுகின்றன. இது வரவேற்கத் தகுந்த மாற்றங்களில் ஒன்று.

டிஜிட்டல் புரட்சியால் விரிவடைந்துள்ள வியாபார சாத்தியம், பார்வையாளர்களின் ரசனை மாற்றம் ஆகியவற்றால் வித்தியாசமான கதைக்களங்கள், அதிகம் பேசப்படாத பிரச்சினைகள் போன்றவற்றுக்கான வெளி தமிழ்த் திரையில் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் களையப்பட வேண்டும் என்ற அக்கறையால் உந்தப்பட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் இந்தப் படங்களின் எண்ணிக்கை பிரதிபலிக்கிறது.

அக்கறை மட்டும் போதுமா?

மேலே குறிப்பிடப்பட்ட படங்களில் ‘இறைவி’, ‘தரமணி’ ஆகிய இரண்டும் பெண் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களிடமிருந்து எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றன. சிலர் அவற்றை ‘ஆபத்தான படம்’ என்றுகூடச் சொல்லியிருந்தார்கள். ‘அம்மா கணக்கு’ பெரிய அளவில் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ படமும் பெண்களின் பார்வையில் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்த வரிசையில் ‘ஒரு நாள் கூத்து’ கூடுதல் பாராட்டைப் பெற்றது.

பெண்களிடம் பேசுங்கள்

அக்கறையைத் தாண்டிப் பெண்கள் பிரச்சினையை அழுத்தமாகப் பதிவு செய்யும் படங்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?

“கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெண்கள் சார்ந்த, பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் வரத் தொடங்கியிருப்பது உண்மைதான். தமிழைவிட மலையாளத்திலும் இந்தியிலும் இதுபோன்ற படங்கள் அதிகமாக வருகின்றன. அவை கவனத்துக்குரியவையாகவும் உள்ளன. தமிழில் வரும் படங்கள் பெரிதும் ஏமாற்றத்தையே தருகின்றன. ‘இறைவி’, ‘தரமணி’ போன்ற படங்கள் பெண்கள் பிரச்சினைகளைப் பேசுபவை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் படத்தைத் தாங்கி நிற்கிறது. ‘இறைவி’யில் அஞ்சலி கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்ட முடிவு பாராட்டுக்குரியது. ஆனால், ஒரு திரைப்படமாக இரண்டுமே ஏமாற்றத்தையே தந்தன. பெண்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்ற அக்கறையெல்லாம் சரிதான். ஆனால் ‘பிங்க்’ போன்ற படங்கள் இங்கு ஏன் சாத்தியப்படவில்லை? இதுபோன்ற படங்களை எடுப்பவர்கள் கதைக் குழுவில் பெண் படைப்பாளிகளை இணைத்துக்கொள்ளலாம். அதேபோல் சாதாரணப் பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் பார்வையையும் உள்ளடக்கி திரைக்கதைகள் வருவது அவசியம்” என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயல்பாட்டாளருமான பா. ஜீவசுந்தரி.

வரவேற்கத்தக்க மாற்றம்

தமிழ்த் திரைப்பட திரைக்கதை விவாதங்களில் பங்கேற்றிருப்பவரான எழுத்தாளர் ஜா. தீபா இது போன்ற படங்கள் வரத்தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம் என்கிறார். “100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்த் திரை வரலாற்றில் மிகக் குறைந்த படங்களே பெண்களை, பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றன. இந்த நிலையில் ‘மகளிர் மட்டும்’ போன்ற படங்கள் சமையலறை தாண்டியும் பெண்களுக்கு ஒரு உலகம் இருப்பதைக் காண்பிக்கின்றன. பெண் என்றாலே மலருடனும் நிலவுடனும் ஒப்பிட்டுக்கொண்டிருந்ததை மாற்றி, இது போன்ற படங்கள் பெண்களை மிக இயல்பாகக் காட்சிபடுத்துகின்றன” என்கிறார்.

இந்தப் படங்களுக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை சுட்டிக்காட்டினால், “திரைக்கதை விவாதங்களில் பெண் கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதமே மட்டமாக இருக்கும். இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தாக்கத்தால், பல பெண்கள் கதியாகக் கிடக்கும் சீரியல்களிலும் கொஞ்சம் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது. ஒரே மாதிரி பெண்களைக் காண்பித்தால் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதை ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கலாம். இனிமேல் இயக்குநர்கள் இதிலிருந்து பின்னோக்கிப் போக முடியாது என்ற நிலையை இதுபோன்ற படங்கள் உருவாக்கியுள்ளன. வருங்காலத்தில் பெண்கள் பற்றிய படங்கள் மேலும் சிறந்தவையாக அமையும் என்று நம்பலாம்” என்கிறார் தீபா.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நவீன காலப் பெண்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் தமிழ்த் திரையுலகம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பெண்களைப் பல வகைகளில் இழிவுபடுத்தும் திரைப்படங்களுக்கு மத்தியில் அவர்களைச் சற்றேனும் கண்ணியமாகச் சித்தரிக்க முயலும் இதுபோன்ற படங்களை நிதானமாக அணுகலாம். அவற்றில் மாற்றப்பட வேண்டிய குறைகளைச் சுட்டிக்காட்டலாம். அதேநேரம் திரையுலகினரும் இதுவே போதும் என்று தேங்கிவிடாமல் பெண்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் பற்றி உண்மைக்கு நெருக்கமான, வலுவான திரைக்கதை கொண்ட படங்களைத் தரத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

கருத்துப் பேழை

54 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

38 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

16 mins ago

மேலும்