கமலா, கல்பனா, கனிஷ்கா: கனவு ஒருநாள் நிஜமாகும்

By பாரதி ஆனந்த்

செம்மொழிப் பூங்காவில் மூவரும் கூடியிருந்தனர்.

“ஹிலாரி வருவாங்க, சரித்திரம் படைபாங்கன்னு நினைச்சேன். ஆனா, அமெரிக்காவே இன்னும் பெண் அதிபருக்குத் தயாராகலையோன்னு தோணுது” என்று பேச்சை ஆரம்பித்தாள் கனிஷ்கா.

“அமெரிக்கர்கள் அப்படி நினைப்பாங்கன்னு நான் நம்பலை. இதுதான் அமெரிக்காவுக்கே கடைசித் தேர்தலா என்ன? இப்பவே அடுத்த தேர்தலுக்குப் பலர் தயாராகியிட்டாங்க. சமூக ஊடகங்களில் ‘2020-ல் மிஷேல்’ என்ற வாசகத்தைப் பரப்பிட்டாங்க. ஒருவேளை மிஷேல் ஒபாமா அடுத்த தேர்தலில் களம் இறங்கி, வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கே கனிஷ்கா!” என்றார் கமலா பாட்டி.

“தோல்விக்குப் பிறகு ஹிலாரியின் பேச்சைக் கேட்டீங்களா? ‘அந்த உயரத்துக்கான கனவு இன்னும் தகர்ந்துவிடவில்லை. என்றாவது ஒருநாள், யாராவது ஒருவர் அந்த உயரத்தை அடைவார்’ என்று பேசி, எல்லோரையும் கவர்ந்துட்டார்.’’

“ஆமாம் ஆன்ட்டி. ரொம்ப அழுத்தமான சின்னப் பேச்சு. ஹிலாரி ட்விட்டரில், ‘சிறுமிகளே, உங்கள் சுயமதிப்பீட்டின் மீதும் உங்களது வலிமையின் மீதும் எப்போதும் சந்தேகம் கொள்ளாதீர்கள். இந்த உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.”

“அசத்திட்டார் ஹிலாரி!”

கமலா பாட்டி கொய்யாப் பழத்தை வெட்டி, ஆளுக்கொரு துண்டாகக் கொடுத்தார்.

“சாந்தி சிங்கு, பாரதி லகூரி இருவரும் ஒடிசாவின் அங்கூல் மாவட்டத்தின் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பத்தாம் வகுப்பு படிக்கிறாங்க. தினமும் காட்டு வழியில் 15 நிமிடம் நடக்கிறாங்க. அப்புறம் ஒரு படகில் அவர்களே துடுப்புப் போட்டு, 45 நிமிடம் பயணிக்கிறாங்க. பிறகு ஒரு கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்குப் போறாங்க. படிப்பின் மீதான அவங்க ஆர்வம் என்னைச் சிலிர்க்க வைக்குது. ஆனா, ஒரு பெண் குழந்தை, தன் கனவை நனவாக்க இவ்வளவு இன்னல்களைச் சந்திக்கும் நிலையில்தான் நம் நாடு இன்னும் இருக்குதுன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“நீ சொல்றது சரிதான் கல்பனா. இந்த மாணவிகள் குறித்து செய்தி வெளியிட்ட தொலைக்காட்சியின் முயற்சியால், சாந்தியும் பாரதியும் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி, படிப்பைத் தொடர்கிறார்கள். பழங்குடி மக்கள் மத்தியில் பெண் கல்விக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. இந்த மாணவிகளின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது” என்று பெருமிதத்துடன் சொன்னார் கமலா பாட்டி.

“பாட்டி, நொறுக்குத் தீனி எதுவும் இல்லையா?”

“தீனி எல்லாம் கடையில் இருக்கு. என் கையில்தான் காசு இல்லை கனிஷ்கா. 500, 1000 ரூபாய் செல்லாதுன்னு திடீர்னு அறிவிச்ச உடனே, பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்குங்க, சில்லறை இல்லைன்னு சொல்றாங்க. என்னத்தைச் சொல்றது?”

“நாட்டின் பிரதமரே, இனி ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு வெறும் காகிதம்தான் என்று சொன்னால் எல்லோருக்கும் பதற்றம் வராதா? ரூபாய்களைக் கொடுத்து மாத்திக்க கால அவகாசம் இருக்கும்போது, அவர் அப்படிச் சொல்லியிருக்கவே கூடாது. படித்தவர்களே குழம்பிப் போயிட்டாங்க. இதிலும் பெண்களின் சேமிப்பை வைத்து, மீம்ஸ் போட்டுத் தாக்கிட்டாங்க. கனிஷ்கா, என்ன யோசனையில் இருக்கே?”

“உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா தேவி. ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். அவங்க மருமகள் குஷ்பு பெண் குழந்தை பெற்றார். உடனே மருமகளுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசா கொடுத்திருக்காங்க பிரேமா தேவி. பாலின சமத்துவம் அதிகரிக்க இது மாதிரியான சம்பவங்கள் தூண்டுகோலாக இருக்கும். எனக்கு அப்படி ஒரு மாமியார் கிடைத்தால் நல்லா இருக்கும்” என்று சிரித்தாள் கனிஷ்கா.


பெண் குழந்தைக்குக் கார் பரிசு

“ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தை பெத்துக்கிட்டாலும் உனக்கு ஒரு பரிசு தருகிற மாமியார் கிடைக்கட்டும் கனிஷ்கா” என்று ஆசி வழங்கினார் கமலா பாட்டி.

“நீ அரசாங்கத்தில் வேலைக்குச் சேர்ந்துட்டா, பேறு கால விடுப்பு 9 மாதம் கிடைக்கும் கனிஷ்கா. தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதைத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும் கொண்டுவந்தால் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“ஏதோ பேச்சுக்குச் சொன்னால், டெலிவரிவரை போயிட்டீங்க ஆன்ட்டி” என்று சிணுங்கினாள் கனிஷ்கா.

“சரி, நவம்பர் 7 என்ன நடந்தது தெரியுமா?”

“ரஷ்யப் புரட்சி.”

“நீ சொன்னது சரிதான். ஆனால் நான் சொல்ல வந்தது, அந்த நாளில் கேரள முதல்வர் பிணராயி விஜயன், புரட்சிகரமான அறிவிப்பைச் செய்திருக்கார். சபரிமலைக்கு எந்த வயதுப் பெண்களும் இனி போகலாம் என்று ஒப்புதல் அளித்திருக்கார். பெண்கள் இதை ஆரவாரத்துடன் வரவேற்று இருக்காங்க. ஆனால் தேவஸ்தானம் எதிர்ப்பைக் காட்டியிருக்கு. விரைவில் இது சாத்தியமாகும் என்று நம்புவோம்” என்ற கல்பனா, வேகமாக எழுந்தார்.

“என்ன, அதுக்குள்ள நேரமாயிருச்சா கல்பனா?”

“ஆமாம் பாட்டி. அவசரமா ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கு. பை கனிஷ்கா” என்றவுடன் மூவரும் அவரவர் ஸ்கூட்டியில் பறந்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

53 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்