பருவத்தே பணம் செய்: சேமித்தால் கிடைக்குமே சலுகை!

By சி.முருகேஷ்பாபு

அந்தப் பெற்றோருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகனை நன்றாகப் படிக்க வைத்தனர். அவர் நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டார். இரண்டாவது மகன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை, பெரிய மகனிடம் கேட்டார்கள்.

“என் சாப்பாட்டுக்கு ஆகற செலவை மட்டும் தர்றேன். குடும்பச் செலவுக்கெல்லாம் தர முடியாது” என்று சொல்லிவிட்டார். நாங்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு எதற்காக வரி கட்ட வேண்டும் என்று கேட்பது மாதிரிதான் அவர் கேட்ட கேள்வியும்.

அப்பா, “தம்பி, காசு வாங்கிட்டுச் சாப்பாடு போடறதுக்கு நானும் அம்மாவும் மெஸ் நடத்தலை. இது குடும்பம். ஒரு குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எல்லாரும் பங்கெடுத்துக்கணும். உழைக்கிற கைகள் உழைக்காத வயிறுகளுக்கும் சேர்த்து சாப்பாடு போடணும்” என்றார். நம் நாடும் குடும்பம் மாதிரிதான். தன் உழைப்பின் ஒரு பகுதியைக் கொடுப்பதன் மூலம் உழைக்கும் ஒருவன், உழைக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒருவனுக்குக் கைகொடுக்க வேண்டும்.

நமக்கும் பங்குண்டு

அம்மா, “தம்பி, கிரைண்டரும் ஃபிரிட்ஜும் வாங்கணும்” என்றார். கிரைண்டர், ஃப்ரிட்ஜ் எல்லாம் எதற்கு நான் வாங்க வேண்டும் என்று இப்போது பெரிய மகன் கேட்கவில்லை. அவருக்கு நிலைமை புரிந்து விட்டது.

ஆனால், நாம் இன்னும் புரிந்துகொள்ளாமல் கேட்கிறோம். ‘ரோடு போடுறதுக்கும் பாலம் கட்டுறதுக்கும் என் வரிப் பணம்தான் கிடைத்ததா?’ என்று கேட்கிறோம். அரசாங்கத்துக்கு வேறு எப்படிப் பணம் கிடைக்கும்? நாட்டின் வளர்ச்சியில் நம் பங்கும் இருக்க வேண்டும். அதன் ஒரு வடிவம்தான் வரி. எல்லோருமே ஒழுங்காக வரி கட்டுகிறார்களா? நடுத்தர வர்க்கம்தான் வரி வரம்புக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. மாதச் சம்பளம் வாங்குபவர்கள்தான் வருமானத்தைக் கணக்கு காட்டி வரி கட்டுகிறார்கள். பலரும் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள்தான் என்று புலம்ப வேண்டாம். நேர்மையாக இருந்தால் படுத்தவுடன் நிம்மதியாக உறக்கம் வரும். எங்கேயும் நிமிர்ந்து நடக்கலாம். அதனால், முறையாக வரி செலுத்துங்கள்!

என் குடும்பமே இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. வருமான வரிச் சட்டங்கள் சொல்லும் விஷயங்களுக்கு உள்ளே நான் வருவதால் வரி கட்ட வேண்டியிருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் முறையாக வருமான வரி தாக்கல் செய்தால் முழுமையான வரிச் சலுகையை அனுபவிக்கலாம். உங்கள் ஆண்டு வருமானத்தில் குறிப்பிட்ட அளவுவரை அடிப்படையான கழிவு இருக்கிறது. பெண்களுக்கு இரண்டரை லட்ச ரூபாய் அடிப்படைக் கழிவு. அதற்கு மேல் நீங்கள் உங்கள் குடும்பத்துக்காகச் செய்யும் சேமிப்புகளைக் காட்டி மேலும் கழிவு பெறலாம். அந்தக் கழிவெல்லாம் போக மீதம் இருக்கும் உங்கள் வருமானத்துக்கு மட்டும் வரிகட்டினால் போதும்.

எதற்கெல்லாம் வரி விலக்கு?

அப்படி என்ன மாதிரியான சேமிப்புகளுக்குக் கழிவு பெற முடியும்? உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ப்ராவிடண்ட் ஃபண்ட் தொகை, அதோடு நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் எடுக்கும் காப்பீடு, தேசிய சேமிப்பு, பென்ஷன் சேமிப்பு போன்றவற்றுக்கு 80சி என்ற பிரிவின் கீழ் ஒன்றரை லட்ச ரூபாய்வரை சலுகை பெறலாம். அடுத்து, பிள்ளைகளின் கல்விக் கட்டணம். அந்தக் கட்டணத்தைக் கணக்கில் கொண்டுவந்து வரிச் சலுகையைப் பெற முடியும். அதுவும் 80சி பிரிவின் கீழ்தான் வரும். மருத்துவக் காப்பீட்டுக்குச் செலுத்தும் பிரீமியம் தொகையை வருமான வரி கணக்கில் காட்டலாம். அது 80டி என்ற பிரிவின் கீழ் வரும். கல்விக்கடன்கூட வருமான வரி சேமிப்புக்குப் பயன்படும். 80இ பிரிவின் கீழ் வரும்.

இவை எல்லாம் சேமிப்பு மற்றும் பாதுகாப்புக்காகச் செய்யப்படும் விஷயங்கள்.

அடுத்ததுதான் முக்கியமானது. வீட்டுக் கடன். உங்களைச் சொந்த வீட்டுக்காரர்களாக ஆக்க வேண்டும் என்று முடிவெடுத்து கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் இந்த வரிச் சலுகை. வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தும் தவணைத் தொகையில் வட்டியைத் தனியாகவும் அசலைத் தனியாகவும் பிரித்து, அதற்கு ஏற்ப வரிச் சலுகையை அனுபவிக்க முடியும். வீட்டுக் கடனுக்கான அசல் தொகை 80சி பிரிவில் கணக்கில் கொண்டுவர முடியும். வீட்டுக் கடனுக்கான வட்டியை மொத்த தொகையிலேயே கழித்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக இரண்டு லட்ச ரூபாய்வரை இந்தச் சலுகையைப் பெற முடியும்.

வரிச் சலுகையைப் பற்றி விவரமாகச் சொல்லக் காரணம், அது ஒரு வகையான சேமிப்பு என்பதால்தான். நாம் நேர்மையாக இருக்கிறோம் என்ற கம்பீரம் ஒருபக்கம் என்றால் நாம் சேமிக்கிறோம் என்ற பெருமையும் இன்னொரு பக்கம் இருக்கிறது. அதனால்தான் இதை வரி சேமிப்பு என்கிறோம். இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இந்த ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்வோம் என்ற முடிவை எடுப்போம். அதற்கு முதலில் பான் கார்டு வாங்குவோம். எந்தச் சேமிப்பாக இருந்தாலும் அதற்குள் வரிச் சலுகை அல்லது வரி கணக்கு என்ற விஷயம் இருப்பதால் வரி பற்றிப் பேசினோம். இனி சேமிப்பு வாய்ப்பு பற்றிப் பேசலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)

கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

ஆன்மிகம்

42 secs ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்