பளிச் முகத்துக்கு வேண்டாமே எலுமிச்சை

By செய்திப்பிரிவு

கோடையின் வெப்பத்திலும் கொட்டும் வியர்வையிலும் முதலில் பாதிப்படைவது நம் சருமம்தான். வெயிலில் சென்றுவிட்டு வீடு திரும்பினாலேயே சிலருக்குச் சருமம் கருத்துவிடும். தினமும் சில நிமிடங்களை ஒதுக்கினால் போதும். கோடைக் காலச் சருமப் பிரச்சினைகளிலிருந்து மட்டுமல்லாமல் பொதுவான சருமப் பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம் என்கிறார் சருமப் பராமரிப்பு நிபுணர் ஐஸ்வர்யா செல்வராஜ். சருமப் பிரச்சினைகளுக்கென்றே தனியாகச் சிகிச்சை மையம் நடத்திவரும் ஐஸ்வர்யா, தன் தனிப்பட்ட அனுபவமே இந்த மையத்தைத் தொடங்கக் காரணம் என்கிறார்.

ஐஸ்வர்யாவுக்குச் சிறுவயது முதலே சருமப் பிரச்சினை இருந்தது. பார்க்கிறவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி அலுத்துப்போனவர், ஆரோக்கியமான சருமத்தோடு இருப்பதுதான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும் என்று நினைத்தார். தனக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கிற பலருக்கும் சருமப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருப்பதை நினைத்தவர் அது சார்ந்து பிரத்தியேகமாகப் படிக்க நினைத்தார். துபாய், பேங்காக், தென்கொரியா என்று பல நாடுகளுக்கும் சென்று சருமப் பராமரிப்பு தொழில்நுட்பங்களைப் பயின்றார். படிப்பு தந்த நம்பிக்கையில் தற்போது சென்னையில் ‘ஸ்கின் என்வி’ என்கிற சருமச் சிகிச்சை மையத்தை நடத்திவருகிறார். கோடைக் காலச் சருமப் பராமரிப்புக் குறிப்புகள் சிலவற்றை ஐஸ்வர்யா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

மெருகூட்டும் தயிர்

“கோடைக் காலத்தில் எளிய, மெலிதான மேக் அப் நல்லது. சருமம் வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது மட்டுமல்ல, வீட்டுக்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் லோஷன்களைப் பூசுவது அவசியம். வெளியே செல்வதாக இருந்தால் 20 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்கிரீனைத் தடவிக்கொள்ள வேண்டும். எஸ்.பி.எஃப்., கொண்டவற்றைப் பயன்படுத்துவது நல்லது. மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவ வேண்டும்.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தும் சருமத்தைப் பராமரிக்கலாம். இவை சருமத்துக்குப் புத்துணர்வும் குளிர்ச்சியும் தரும். அவகாடோ, தேன், பால், தயிர், வாழைப்பழம் போன்றவற்றை முகத்தில் ஃபேஸ் பேக் போலப் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சோப்பைவிட ஃபேஸ் வாஷ் முகத்துக்கு நல்லது. மென்மையான ஃபேஸ்வாஷ்கள், நம் முகத்தில் உள்ள தேவையான எண்ணெய்ப் பசையை உறிஞ்சி முகத்தை வறண்டுபோகச் செய்யாது.

ஐஸ்வர்யா, சரும பராமரிப்பு நிபுணர்​​​​​

சில குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்துத் தோலில் சிக்கல் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொடுகு காரணமாக நெற்றியில் வெடிப்புகள் போன்றோ வேறு சில அறிகுறிகளோ தோன்றலாம். வெயில் காரணமாக சருமத்தில் அலர்ஜி போன்றும் சிறு சிறு திட்டுகள் போன்றும் தோன்றலாம். தோலில் ஏற்படும் இப்படியான அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது”.

- எழில்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

45 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்