தேச நலனுக்குக் குரல் கொடுக்கும் தாய்

By அ.சாதிக் பாட்சா

‘சரித்திரம் படிக்க விருப்பமா? சரித்திரம் படைக்க விருப்பமா?’ என்கிற வாசகங்களுடன் ராணுவத்தில் சேர இளைஞர்களை ஊக்குவித்துவருகிறார் ஒரு பெண். அவர் மேற்கொள்ளும் பிரச்சாரத்துக்கு இளைய சமூகத்திடம் நல்ல வரவேற்பு. அந்தப் பெண் 66 வயதான அமிர்தவள்ளியம்மாள்.

ராணுவத்தில் பணியாற்றிய தன் கணவரை 1989-ம் ஆண்டிலும், அடுத்த 10 ஆண்டுகளில் (1999-ல்) கார்கில் போரில் தன் ஒரே மகனையும் பறிகொடுத்தவர். தனது குடும்ப ஆண் மக்கள் ராணுவத்தில் சேர்ந்து உயிரிழந்தாலும், அந்தப் பணியில் சேரச் சொல்லி இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார். “இன்றைய நிலையில் எந்த பணியுமே பாதுகாப்பானதோ, ஆபத்து இல்லாததாகவோ இல்லை. சாலையில் நடக்கும்போதுகூட விபத்து ஏற்பட்டு உயிரிழந்து விடலாம். அப்படியிருக்கும்போது ராணுவத்தில் சேர்ந்து பணியாற்று வதை மட்டும் ஏன் ஆபத்தானதாகப் பார்க்க வேண்டும்?

எங்கேயில்லை ஆபத்து? யாருக்கு இல்லை இழப்பு? நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது மிகப்பெரிய தியாகம் என்பதை இளைஞர்களுக்குப் புரிய வைக்கிறேன். அதற்கான முழு தகுதியும் எனக்கு இருப்பதால் நான் இந்தச் சேவையைச் செய்துவருகிறேன்” என்கிறார் அமிர்தவள்ளியம்மாள்.

வித்திட்ட வீரமரணம்

கார்கில் போரில் தனது உயிரைப் பறிகொடுத்த முதல் ராணுவ அதிகாரியான மேஜர் சரவணனின் அம்மாதான் இந்த அமிர்தவள்ளியம்மாள் . 1995-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி பிகார் படைப் பிரிவில் வீரராக சேர்ந்த சரவணன், அவருடைய செயல்திறன் காரணமாகக் குறுகிய காலத்திலேயே இரண்டாம் லெப்டினண்ட், லெப்டினண்ட், கேப்டன், மேஜர் என உயர் பதவிகளைப் பெற்றார். 1999 மே 28 அன்று கார்கிலில் பட்டாலிக் பகுதியில் 14,229 அடி உயரமுள்ள தேசத்தின் எல்லைப் பகுதியை மீட்கும் பொறுப்பு சரவணனுக்கு வழங்கப்பட்டது.

மே 29 அதிகாலை 4 மணிக்கு எதிரிப்படையினர் இந்திய இலக்குகளை நோக்கி குண்டுமழை பொழிய ஆரம்பித்தனர். சரவணன் ஏவுகணைகளை வீசி, எதிரிகள் இருவரை வீழ்த்தியிருக்கிறார். மேலும் இருவரை சுட்டுவீழ்த்தியிருக்கிறார். இந்த நிலையில் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டு ஒன்று சரவணனின் தலையில் பாய, ரத்தம் பீறிட தரையில் வீழ்ந்தார். காலை 6.30 மணிக்கு காலமானார்.

திருச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவியான அமிர்தவள்ளிக்கும் ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த மருத்துவர் மாரியப்பனுக்கும் முதல் குழந்தையாக 1972 ஆகஸ்ட் 10-ம் தேதி சரவணன் பிறந்தார். திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவரான அவர், படித்தபோதே தேசிய மாணவர் படையில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். இவரது தந்தை பெங்களூரில் பணியிலிருந்தபோது 1989-ல் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததால், இரண்டு தங்கைகளைக் கொண்ட குடும்பத்தைத் தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பு சரவணனுக்கு வந்தது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தபோதுதான் போரில் பலியானார்.

தொடரும் நலப்பணிகள்

கணவரையும் ஒரே மகனையும் பறிகொடுத்த அமிர்தவள்ளி அம்மாள் சற்றே மனமுடைந்தாலும், கொஞ்சமும் துவண்டுபோய் விடவில்லை. தனது மகனின் பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு நலப்பணிகளை செய்துவருகிறார். ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவிக்கு ஏற்பாடு செய்கிறது இந்த அறக்கட்டளை. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) சேருவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை இளைய சமூகத்திடம் உருவாக்குவது, இதற்காக துண்டுப் பிரசுரம், கையேடு தயாரித்து விநியோகிப்பது ஆகிய பணிகளை இந்த அறக்கட்டளை செய்துவருகிறது. இதுதவிர ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி, இலவச பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் வழங்குதல் ஆகிய சேவைகளும் செய்யப்பட்டுவருகின்றன.

மேலும், ராணுவத்தில் சேர விரும்புகிறவர்களுக்கு அதற்கான பலகட்ட தேர்வு வழிமுறைகளை கற்றுத்தரும் பணியிலும், நேரடி மாதிரி பயிற்சி பெற விரும்புகிறவர்களுக்கு கோவையில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பிவைத்து, ராணுவத்தில் சேருவதற்கான அத்தனை உதவிகளையும் செய்கிறது இந்த அறக்கட்டளை. இதன்மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நாட்டைக் காக்கும் ராணுவத்தில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் என்கிறார் அமிர்தவள்ளியம்மாள்.

திருச்சி பீமநகரில் உள்ள மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ள: 0431-2415599

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்