தெய்வமே சாட்சி 14: திறக்கும் மரமும் திறக்காத மனமும்

By ச.தமிழ்ச்செல்வன்

மோர், தயிர், பால் ஆகியவற்றை விற்கும் இளம்பெண் ஒருத்தி தினசரி ஊருக்குள் வந்து வீதிவீதியாக “மோரு… தயிரேய்…” என்று கூவி விற்றுவந்தாள். அப்படி வழக்கமாக விற்க வந்த அவளை ஒருநாள் ஒருத்தன் கெட்ட நோக்கத்துடன் பின்தொடர்ந்து வந்திருக்கிறான். அவளும் வேகவேகமாக எட்டி நடைபோட்டு அவன் பார்வையிலிருந்து தப்பிவிட முயன்றாலும் அவன் விடவில்லை. ஊர் எல்லை வந்ததும் ஓட ஆரம்பித்திருக்கிறாள். அவனும் பின்னாடியே ஓடி வந்திருக்கிறான்.

ஓடி ஓடி அவள் ஆற்றின் கரைக்கே வந்துவிட்டாள். ஆற்றிலோ வெள்ளம். பால், மோர், தயிர் எல்லாவற்றையும் ஆற்றில் போட்டுவிட்டுக் கரையிலிருந்த வில்வ மரத்துக்குப் பின்னால் சென்று மறைந்துகொண்டாள். “நான் உண்மை யான கற்புக்கரசியின்னா என்னைக் காப்பாத்தணும்”னு கண்ணை மூடிக் கும்பிட்டாள். அப்போது அந்த வில்வ மரம் இரண்டாகப் பிளந்து அப்பெண்னை உள்ளே இழுத்து மூடிக்கொண்டது. விரட்டி வந்தவன் பெண்ணைக் காண வில்லையே எனத் தேடிப்பார்த்து, சலித்துப் போய்விட்டான்.

நடந்த சேதி கேள்விப்பட்டு அப்பெண்ணின் குடும்பத்தார் பின்னர் அந்த மரத்தை வழிபட ஆரம்பித்தார்கள். தேனி மாவட்டம் கம்பத்துக்குப் பக்கத்தில் உள்ள காமயகவுண்டன்பட்டிக்கு அருகில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் ‘கூத்தனாச்சி அம்மன்’ கோயில். அந்த வில்வ மரம்தான் ‘கூத்தனாச்சி’ என வழிபடப்படுகிறது.

(சொன்னவர்கள்: வீரம்மாள், கம்பம். நல்லதங்காள், திருமால்புரம். சேகரித்தவர்: ஏ.சத்தியமாணிக்கம்)

ஏழு அரிசியில் மூவர் வாழ்க்கை

தேனி மாவட்டம் வருசநாட்டையடுத்த மகாலிங்கம் அருகில் இருக்கும் சாமி ‘மொம்மம்மாள்’. ஒரு புளியமரம்தான் ‘மொம்மம்மாள்’ என்கிற தெய்வமாக வழி படப்படுகிறது. பஞ்ச காலத்தில் உண்ண உணவே இல்லாத ஒரு குடும்பத்தில் ஏழே ஏழு அரிசிதான் இருந்தனவாம். தினம் ஒரு அரிசியைச் சமைத்து அப்பா, அம்மா, ஒரு பெண் குழந்தை மூவரும் சாப்பிட வேண்டுமாம். அப்பா, அம்மா இருவரும் காலையில் வேலை தேடி வெளியே போனதும் அந்தப் பெண் குழந்தை ஒரு அரிசியை எடுத்துச் சாப்பிட்டுவிட்டாள். சாப்பிட்டதும் அவளுக்கு, ‘அடடா… தப்பு பண்ணிட்டோமே…

அப்பா, அம்மா வந்தால் நம்மை அடிப்பார்களே’ என்று பயந்து வீட்டை விட்டே ஓடிவிடுகிறாள். அப்போது அவளுடைய அப்பா அங்கே வர, அவள் ஓடுவதைப் பார்த்துப் பின்னாலேயே ஓடி வர, ஒரு பெரிய புளிய மரத்தின் பக்கம் சென்று “மரமே… என்னை எப்படியாச்சும் காப்பாத்து” என்று கும்பிட்டாளாம். உடனே மரம் இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. உள்ளே போய் அவள் ஒளிந்துகொண்டாள். மரம் மூடிக்கொண்டது. அப்பா வந்து “நான் உன்னை அடிக்க மாட்டேன். ஒண்ணுமே செய்ய மாட்டேன். வாம்மா வீட்டுக்கு..” என்று அழைத்தபோது, “போ... நான் வர மாட்டேன். நான் இங்கேயே இருந்துக்குறேன். நீங்க வேணா வந்து என்னைப் பாருங்க” என்று சொல்லிவிட்டாள். மூடிய மரம் மூடியதுதான். அதிலிருந்து அம்மரத்தை வழிபட்டுவருகின்றனர்.

(சொன்னவர்கள்: கருப்பாயி, இளமதி, குமணன் தொழு. சேகரித்தவர்: ஏ.சத்தியமாணிக்கம்)

இப்படி மரம் திறந்து காப்பாற்றுவது, மரம் ஆற்றின் குறுக்கே விழுந்து காப்பாற்றுவது என்பன போன்ற கற்பனைகள், தெய்வங்களின் தோற்றக் கதைகளில் மீண்டும் மீண்டும் வருவதைப் பார்க்கலாம்.

நிஜவாழ்வில் நடக்காதா என ஏங்கும் ஓர் அதிசயம் நடந்து இந்த இக்கட்டிலிருந்து தப்பிவிடமாட்டோமா என்கிற மக்களின் பரிதவிப்புதான் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் கதைகளுக்கும் படைப்பு களுக்கும் அடித்தளமாக அமைகிறது. மேற்சொன்ன இரு கதைகளிலும் இரு பெண்கள் முன்னேயும் ஓட முடியாமல் பின்னேயும் திரும்ப முடியாமல் இக்கட்டில் இருந்தபோது மரம் பிளந்து காப்பாற்றுகிறது.

கதைகளில் அதீதக் கற்பனை கலந்திருக்கும். அம்மரத்தைத் தாண்டி யதைப் பார்த்தவர்கள், அதற்குப் பிறகு அவளைப் பார்க்காததால் மரத்துக்குள்ளே போய்விட்டாள் எனக் கதையில் சேர்த்திருப்பார்கள். ஏழு அரிசியில் ஏழு நாள் சாப்பிடுவது என்பதும் அதீதக் கற்பனைதான். அடிக்குப் பயந்து தப்பி ஓடும் குழந்தைகளை, “அடிக்கவே மாட்டேன் வாடா செல்லம்” என்று அன்போடு அழைத்துப் பிறகு வச்சு வெளுக்கும் பெற்றோர்களையே குழந்தைகள் சந்தித்த வரலாறுதான் அவளை ஓடவைக்கிறது. ஆனால், இங்கே நாம் விவாதிக்க வேண்டியது அதுவல்ல.

ஆணின் இடைவிடாத துரத்தல்

விடாமல் துரத்தும் ஆணின் முறையற்ற காமத்திடமிருந்தும் வன்முறையிடமிருந்தும் தப்பி, ஓடி ஒளிய பெண்ணுக்கு மரமும் மட்டையும்தாம் கிடைக்கின்றன. பூமியே அகழ்ந்துதான் ராமாயணக் கதையில் சீதாதேவிக்கு இடம் அளிக்க வேண்டியிருந்தது. இயற்கைதான் அவளை அரவணைக்கிறது. மனித சமூகம் அவளுக்குத் துன்பத்தையே தருகிறது. ‘என் வீட்டுக் கிணற்றில் எப்போதும் உப்புத் தண்ணி. அது என்ன?’ என்று விடுகதை போட்டுப் பெண்கள் இன்றுவரை அதற்குக் ‘கண்ணீர்’ என்கிற விடையைத்தான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டி யுள்ளது. ஆகவேதான், அரசுகள் காடுகளை எரிக்கையில், மரங்களைப் பாதுகாக்க வங்காரி மாத்தாய் என்கிற பெண்ணே வரவேண்டி இருக்கிறது. பெண்ணுக்கும் மரத்துக்குமான உறவு இயல்பானது. இயற்கையைப் பெண்தான் உயிருள்ள சக்தியாகப் பார்த்திருக்கிறாள்.

‘அம்ம நாணுதும் நும்மொடு நகையே..’ என்று புன்னை மரத்தினடியில் நின்று காதலனுடன் கொஞ்சிக்குலவ நாணுகிறாளே ‘நற்றிணை’ பெண். ஏனெனில், புன்னை மரம் அவளது தமக்கை என்று அவளுடைய தாய் சொல்லிவிட்டாள். நம்மைப் போல உயிரென மரங்களைப் பெண்கள் நினைப்பதால்தான் ஆபத்திலும் அவர்கள் (மரங்கள்) வந்து காப்பதாகக் கதை புனைகிறார்கள்.

தீராத வன்முறை

இது ஏதோ பழங்கதை அல்ல. 2019 டிசம்பரில் டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளான 23 வயதுப் பெண் அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது குற்றவாளி அவள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தான். அவள், “காப்பாத்துங்க… காப்பாத்துங்க...” என்று அலறியபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு எரியும் நெருப்புடன் நீதிமன்றத்தை நோக்கி ஓடி கீழே சரிந்து விழுந்தாள். போலீசையும் அவளேதான் அழைத்தாள். பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தாள். அவளைக் காப்பாற்ற ஒரு மரமும் பிளந்து அரவணைக்கவில்லை. வேடிக்கை பார்த்த மனிதர் ஒருவர்கூடப் பதறிக்கொண்டு முன்வரவில்லை.

இந்த ஒரு பெண்தானா? இந்தியா முழுவதும் 2001-க்கும் 2017-க்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 786 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. எனில், இத்தேசமெங்கும் எரியும் தீயுடன் பெண்கள் ஓடிக்கொண்டே இருக்கி றார்கள். நெருப்பை அணைக்க எந்த நதியும் வரவில்லை. கரம் நீட்டி உள்வாங்கிக் காக்க எந்த விருட்சமும் வழியில் எதிர்ப்படவில்லை. 15 நிமிடங்களுக்கு ஒரு பெண் வல்லுறவு செய்யப்படுகிறாள். கரோனாவைப் போல இது சமூகப் பரவல் கட்டத்திலேயே பல்லாண்டுகளாக நிலைத்திருக்கிறது. பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் நாலில் ஒரு குற்றவாளிகூடத் தண்டிக்கப்படுவ தில்லை. அவளது கதறும் குரலை நம் சமூகம் செவிமடுக்கும் லட்சணம் இதுதான்.

நவீன யுகத்தில் அவளுக்காகத் திறக்கும் அசலான மரங்களாகச் சட்டங்களும் சட்டங்களை அமலாக்கும் அமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டாமா? அதைவிட முக்கியமாக மனித மனங்கள் அவளுக்காகத் திறக்க வேண்டும். சக உயிரினமாக ஆண்களின் மனம் அந்த மரங்களைப் போலத் திறக்க வேண்டும்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

கருத்துப் பேழை

4 mins ago

சுற்றுலா

41 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்