முகங்கள்: வாட்ஸ்-அப் மூலம் வளரும் வியாபாரம்

By ப்ரதிமா

பாதை மாறினால் பயணம் மாறும் என்பார்கள். ஆனால், பயணம் ஒருவரது வாழ்க்கைப் பாதை யையும் மாற்றக் கூடும். பல் மருத்துவரான ப்ரீத்தி தொழில்முனைவோராக மாறியதில் பயணத்துக்குப் பங்கு உண்டு.

சென்னையில் பிறந்தாலும் ப்ரீத்தி வளர்ந்ததும் படித்ததும் குவைத்தில். கல்லூரிப் படிப்புக்காகச் சென்னை வந்தவர், திருமணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். கணவர் விக்ரம் சாகர் பல் மருத்துவர். வெளிநாட்டில் இருக்கும் தன் நண்பர்களுக்குப் புடவைகளை வாங்கி அனுப்புவது ப்ரீத்தியின் வழக்கம். ஒருவரைப் பார்த்து மற்ற நண்பர்கள் கேட்க, அதற்காகவே, சிறிய அளவில் வாட்ஸ்-அப் குழுவைத் தொடங்கினார்.

பயணத்தால் உதித்த பாதை

ஆரம்பத்தில் நண்பர்கள், உறவினர்கள் என்று மிகச் சிறிய குழுவாகத்தான் அது இருந்தது. பிறகு, அவர்களின் வாயிலாக மற்றவர்களுக்கும் பரவ சிறிய அளவிலான தொழிலாக வளர்ந்தது.

“இப்போது நிறைய பேர் இப்படி வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் புடவைகளை விற்கிறார்கள். நாம் கொஞ்சம் தனித்துவத்துடன் இருக்க வேண்டுமே என்று ஆர்கானிக் புடவைகளை மட்டும் விற்பது என்று முடிவெடுத்தேன்” என்று சொல்லும் ப்ரீத்தி, இந்த இடத்தில்தான் பயணங்கள் தனக்கு உதவின என்கிறார்.

“நானும் என் கணவரும் இந்தியா முழுக்கப் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறோம். எங்கே சென்றாலும் அந்தப் பகுதியில் ஆடை வகை குறித்து அறிந்துகொள்வோம். அவற்றைத் தயாரிக்கிறவர்களின் தொடர்பு எண்ணையும் பெற்றுக்கொள்வோம். இப்போது அவர்கள் எல்லாம் எங்கள் முகவர்களாக மாறியது நாங்களே எதிர்பாராதது. ஒவ்வொரு மாநிலத்துக் கும் ஒவ்வொரு இயற்கை இழை அடையாளமாக இருக்கும் என்பதால் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனத்துடன் செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் வாழைநார் புடவைகளை வாங்குகிறோம். பஞ்சாபில் இருந்து மூங்கில்நார் புடவைகளையும் மகாராஷ்டிரத்தில் இருந்து அன்னாசிநார் புடவைகளையும் தருவிக்கிறோம்” என்று சொல்கிறார் ப்ரீத்தி.

செல்போனே முதலீடு

கரோனா ஊரடங்கு காலம் அனைவரையும் வீட்டுக்குள் முடக்கிவைத்திருந்த காலத்தில்தான் இப்படியொரு திட்டம் ப்ரீத்திக்குத் தோன்றியது. “மற்ற தொழில்களைத் தொடங்கப் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், புடவைகளை வாங்கி, வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் விற்பதற்கு நான் செய்த பெரிய முதலீடு செல்போன் மட்டுமே. எடுத்ததுமே அகலக்கால் பதிக்க நினைக்கவில்லை. புதிய உற்பத்தியாளரோ, புது ரகப் புடவையோ எதுவாக இருந்தாலும் முதலில் என் பயன்பாட்டுக்கென்று ஒரேயொரு புடவையை வாங்குவேன். அது தரமானதுதானா என்பதைப் பயன்படுத்தி உறுதிசெய்த பின்னரே விற்பனைக்கு எடுப்பேன். இதுதான் என்மீது பலருக்கும் நம்பிக்கை வரக் காரணம்” என்று சொல்லும் ப்ரீத்தி, தன்னிடம் மொத்தமாகப் புடவைகளை வாங்கிச் சிறு அளவில் விற்பனை செய்கிறவர்களையும் ஊக்குவிக்கிறார்.

இயற்கைக்கு வரவேற்பு

“மக்கள் இப்போது இயற்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலானவை ஆர்கானிக்காக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது ஆடைத் தேர்விலும் எதிரொலிக்கிறது. இயற்கை இழைகளில் நெய்யப்பட்ட புடவைகளை இப்போது பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். வாட்ஸ்-அப் குழுக்களில் நான் பகிரும் புடவைகளைப் பார்த்துவிட்டுச் சிலர் தாங்களும் இதுபோல் விற்பனைசெய்ய விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்களுக்கும் புடவைகளை அனுப்புகிறேன். இப்போது 50 பேர்வரை என்னிடமிருந்து புடவைகளைப் பெற்று அவரவர் வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் விற்றுவருகின்றனர்” என்கிறார் ப்ரீத்தி.

வெற்றி தரும் உத்தி

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சில திட்டங்களையும் செயல்படுத்துகிறார். புடவைகளைப் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட பையில் போட்டு அனுப்புகிறார். அதனுடன் சிறு பரிசையும் தருகிறார். யாருக்காவது ஆச்சரிய பரிசு தர நினைக்கிறவர்கள் இந்தத் திட்டத்தை வரவேற்பதாகச் சொல்கிறார் ப்ரீத்தி.

வாட்ஸ் அப்பில் தொடங்கிய தொழிலைத் தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று விரிவாக்கியுள்ளார்.

“வாட்ஸ்-அப் குழு தொடங்கி விட்டோமே என்று கைக்குக் கிடைத்த ஆடைகளை எல்லாம் அதில் பகிரக் கூடாது. குழுவில் இருக்கிறவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப புடவைகளைப் பகிர வேண்டும். சிலர் குறிப்பாகச் சில காம்பினேஷன்களில் மட்டும் புடவைகள் வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட ரகம் வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் மனத்தில் வைத்து அதற்கேற்ப புடவைகளின் படங்களைப் பகிர வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் நம் குழுவில் இருப்பார்கள். இல்லையெனில் வெளியேறிவிடுவார்கள்” என்று வெற்றிக்கான சிறு குறிப்பையும் தருகிறார் ப்ரீத்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

16 secs ago

சினிமா

5 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்