சமூக அவலம்: எப்போது விடியும்?

By செய்திப்பிரிவு

செம்புலப் பெயல் நீர் போல் கலந்து விடுவதுதான் காதல் என இலக்கியங்கள் சொன்னாலும் நம்மில் பெரும்பாலானோருக்கு அது எட்டிக்காய்தான். அதுவும் சாதி மதப் பித்துப் பிடித்திருக்கும் மனங்களுக்குச் சாதி மீறிய காதல் என்பது விலக்கப்பட்ட சொல்.

சாதி ஆணவக் கொலைகளுக்குப் பல இளந்தளிர்களைப் பலிகொடுத்த ‘பெருமிதம்’ தமிழகத்துக்கு உண்டு. பெற்றெடுத்த மகளின் உயிரைக்கூட மலினமாக நினைக்கும் அளவுக்குச் சாதி வெறி வேரோடிய மனிதர்கள் நம்மிடையே அநேகர். பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் நலிவுற்றுப் பின்தங்கியிருக்கும்போதும் சாதிப் பெருமிதம் மட்டும் சிலருக்குக் குறைவதே இல்லை. சாதிப் பயிருக்கு நீரூற்றுவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் கடந்து சென்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும். இளவரசன், சங்கர் வரிசையில் புதிதாக எந்த இளைஞனுடைய பெயரும் சேர்ந்துவிடக் கூடாது எனச் சாதி மறுப்பாளர்கள் பலரும் வேண்டியிருக்கும் நிலையில் இளமதி - செல்வன் சம்பவம் அதிர்ச்சியைக் கூட்டியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வனும் குருப்பநாயக்கம்பாளையத்தைச் சேர்ந்த இளமதியும் காதலித்தனர். செல்வன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இளமதி இடைநிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர். இளமதியின் பெற்றோர் தங்கள் திருமணத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் மார்ச் 9 அன்று திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். தகவல் அறிந்த இளமதியின் உறவினர்கள் செல்வன் - இளமதி தம்பதியையும் அவர்களின் திருமணத்தை நடத்திவைத்த ஈஸ்வரனையும் கடத்தினர். ஈஸ்வரனும் செல்வனும் மீட்கப்பட்ட நிலையில் இளமதியின் நிலை குறித்து யாருக்கும் தெரியவில்லை.

வேரோடிய சாதி வெறி

இளமதியை மீட்கக் கோரி #whereisilamathi, #saveilamathi போன்ற ஹேஷ்டேகுகள் சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்களாலும் பொதுமக்களாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அதன் பிறகு மார்ச் 14 அன்று சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான இளமதி, தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகச் சொன்னார். தன் மனைவியை மீட்டுத்தரும்படி செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜரானபோதும் தன் பெற்றோருடன் செல்வதையே விரும்புவதாக இளமதி சொல்லியிருக்கிறார்.

ஆனால், இளமதி தன்னிச்சையாகவும் விருப்பத்துடனும்தான் இதைச் சொன்னாரா எனப் பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “இளமதியின் அப்பா, மாமா, பெரியப்பா ஆகியோர் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும்போது இளமதியைப் பெற்றோர் பாதுகாப்பில் இருக்க அனுமதிப்பது சரியா?” எனக் கேட்டிருக்கிறார். தர்மபுரி எம்.பி., எஸ்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது. சமூக நீதி மறுக்கப்படுகிறது” எனப் பதிவிட்டிருக்கிறார். இளமதி தனியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தால் உண்மை தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இப்படியான சம்பவங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல. இதுபோன்ற பல வழக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். சாதியின் பெயரால் பலிகொடுக்கப்பட்ட உயிர்களையும் தனித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்களையும் கண்டிருக்கிறோம். ஆனாலும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. சாதி ஆணவக்கொலைக்கு எதிராகச் சட்டங்கள் இருந்தாலும் அவை ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன என்பதைத்தானே இளமதி - செல்வன் சம்பவமும் நமக்கு உணர்த்துகிறது. சாதி இல்லாத சமுதாயம் அமைய இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நாம் காத்திருக்க வேண்டும்? அதுவரை இளமதிகளுக்கும் செல்வன்களுக்கும் விடிவே இல்லையோ எனத் தோன்றுகிறது.

- ப்ரதிமா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

45 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்