போருக்கு வாள்; வேருக்கு நீர்

By செய்திப்பிரிவு

வலியில் பிறப்பதல்ல பெண் எழுத்து. வலியைக் கடக்க உதவுவது அது. சோர்ந்து கிடக்கும் மானிடத்துக்குச் சுறுசுறுப்பைத் தரவும் வீழ்ந்து கிடக்கும் இனத்துக்கு வீரத்தைத் தரவும் புறக்கணிக்கப்படும் குழுவுக்குப் போர்வாளைத் தரவும் அந்த எழுத்துத் தயங்கியதில்லை. வாசிப்பின் வாசல்கள் விசாலப்பட்டுவரும் இந்த வேளையில் தமிழகம் முழுவதும் அவ்வப்போது நடக்கும் புத்தகக் காட்சிகள் போற்றுதலுக்குரியவை. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றுவரும் சென்னைப் புத்தகக் காட்சி, தேடலுக்குத் தீர்வளிக்கும் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பெண்கள் எழுதிய, பெண்கள் சார்ந்து வெளியான புத்தகங்கள் சிலவற்றின் தொகுப்பு, தேடலை எளிதாக்கும்.

மகனுக்காக

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தன் மகன் கனிவமுதனுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைத் தொகுத்து ‘எழுதாப் பயணம்’ என்னும் நூலாக்கியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன். அச்சத்தையும் அழுகையையும் தவிர்த்து நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியிருக்கிறார் அவர்.

வெளியீடு: கனி புக்ஸ்,
தொடர்புக்கு: 9940203132,
விலை: ரூ.100/-

முன்னத்தி ஏர்

ஒரு பெண், இதழாசிரியராக நிலைப்பதே அரிது என்கிற காலத்தில் இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வி.பாலம்மாள். பெண்களுக்கென அவர் வெளியிட்ட முதல் இதழ் ‘சிந்தாமணி’. புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்க ‘சிந்தாமணி’ வழியாக பாலம்மாள் போராடினார். பெண் முன்னேற்றத்துக்காக பாலம்மாள் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகளை பேராசிரியர் கோ. ரகுபதி தொகுத்திருக்கிறார்.

வெளியீடு: தடாகம்,
தொடர்புக்கு: 8939967179/044-43100442,
விலை: ரூ.160

ஒப்பில்லா நாயகி

வாழ்க்கையின் மர்மம்தான் அதன் சுவாரசியம். ஒரு பெண்ணின் ஆர்வமும் தேடலும் இன்னொரு பெண்ணைச் சாய்த்துவிடுமா என்பது புதிரான கேள்வி. அம்மாவால் கைவிடப்படும் சிறுமி, துயரங்களிலிருந்து மேன்மை அடைகிற கதைதான் உமாவுடையதும். அம்மா, சித்தி இருவருமே தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள சிறுமி உமாவைப் பிரிந்துசெல்கின்றனர். உமாவுக்குத் தெரிந்ததோ அன்பின் மொழி மட்டுமே. வன்மத்துக்குப் பரிசாக அவர் அன்பைத்தான் கொடுத்தார். அதுதான் அவரை ஆலமரமாக வளர்த்தெடுத்தது. அதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ நூல் மூலம் உலகுக்கு உரைக்கிறார் ஷாபு கிளிதட்டில் (தமிழில்: கே.வி.ஷைலஜா)

வெளியீடு: வம்சி புக்ஸ்,
தொடர்புக்கு: 9443222997,
விலை: ரூ.350.

உதிரிகளின் கதைகள்

புலம்பெயர்ந்த மக்களின் துயரம் சொல்லில் அடங்காதவை. அவர்களின் செருப்புக்குள் நின்று பார்த்தால்தவிர அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிட முடியாது. அதைப் பகுதியளவேனும் உணர்த்திவிடும் எத்தனத்தில் உதிக்கிறவைதாம் புலம்பெயர் மக்கள் குறித்த படைப்புகள். நிரூபாவின் ‘இடாவேணி’ அப்படியான கதைகளைத்தான் சொல்கிறது.

வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம்,
தொலைபேசி எண்: 9599329181/9599329181,
விலை: ரூ.130

கிடைத்துவிட்டதா விடுதலை?

கேரள அரசியலில், சமூகத்தில் தலித் மக்கள் குறிப்பாக தலித் பெண்கள் எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும் மலையாளத் திரைப்படங்களில் ஒளிந்திருக்கும் சாதியம், தலித் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அரசுகளின் தலித் விரோதப் போக்கு உள்ளிட்டவற்றைப் பேசுகிறது ரேகா ராஜின் ‘தலித் பெண்ணின் இடைமறித்தல்கள்’ (தமிழில்: குஞ்சம்மாள்) பெண் விடுதலை கடந்த காலச் சமூக நிகழ்வுகளால் எந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்கிறது என்பதையும் பெண் ஒரு பண்டமாக மாற்றப்பட்டதையும் பேசுகிறது க.வி. இலக்கியாவின் ‘பெண் விடுதலை இன்று’ நூல் (விலை ரூ.60).

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
தொடர்புக்கு: 9443468758/0422-2576772,
விலை: ரூ.120

ஒளிரும் பெண்கள்

நூறாண்டு கடந்த பின்னும் ஆண்கள் உலகமாக அறியப்படும் திரைத்துறையில் நுழைந்து சாதிப்பது பெண்களால் நினைத்துப் பார்க்கக்கூடியதல்ல. 1930கள், 40கள், 50களில் கோலோச்சிய பல பெண் திரை ஆளுமைகள் குறித்த துல்லியமான சித்திரம், ‘செல்லுலாய்ட் பெண்கள்’. இவர்கள் அனைவரின் வாழ்க்கைப்பாடுகளையும் சாதனைகளையும் விரிவாக விவரித்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி.

வெளியீடு: சூரியன் பதிப்பகம்,
தொடர்புக்கு: 72990 27361,
விலை: ரூ. 350/-

உண்மைக்கு அருகில்

அம்பேத்கரை நன்கு அறிந்த, அவருடன் பழகிய 21 பேர் சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் ‘பாபாசாகேபின் அருகிருந்து’ நூலைத் தொகுத்திருக்கிறார் சலிம் யூசுப்ஜி (தமிழில்: பிரேமா ரேவதி). அம்பேத்கரின் விரிவான வாழ்க்கைக் குறிப்பு நூலாகவும் இது இருக்கிறது.

வெளியீடு: மைத்ரி புக்ஸ்,
தொடர்புக்கு: 9445575740,
விலை: ரூ.200

பெண்களின் இருப்பு

காலத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆப்ரிக்க – அமெரிக்கர்கள் குறித்து ஆலிஸ் வாக்கர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பான ‘அன்புள்ள ஏவாளுக்கு’ (தமிழில்: ஷஹிதா, வெளியீடு: எதிர், தொடர்புக்கு: 9942511302/03259-226012), பௌத்த வாழ்நெறி பற்றிய கருவி நூலான ‘கடவுளால் எந்த நன்மையும் இல்லை’ (ஆசிரியர்: குட்டி ரேவதி, வெளியீடு: புலம், தொடர்புக்கு: 9840603499), இந்தப் பூமியில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இவ்வளவு நெருக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுகிறது என்பதை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பான ‘நீளும் கனவு’ (ஆசிரியர்: கவின்மலர், வெளியீடு: எதிர்) பெண்களின் மனவோட்டங்களைப் பேசும் சிறுகதைத் தொகுப்பான ‘உங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும்’ (ஆசிரியர்: கறுப்பி சுமதி, வெளியீடு: கருப்புப் பிரதிகள், தொடர்புக்கு: 9444272500), ஜா.தீபாவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் ‘ஒளி வித்தகர்கள்’ (யாவரும் பதிப்பகம், தொடர்புக்கு: 9940021472), பொன்முகலியின் கவிதைத் தொகுப்பான ‘தாழம்பூ’ (தமிழினி பதிப்பகம், தொடர்புக்கு: 98842 25576), நைஜீரிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அபுபக்கர் ஆடம் இப்ராஹீமின் சிறுகதைகளும் நாவல்களும் கொண்ட தொகுப்பு நூலான ‘தீக்கொன்றை மலரும் பருவம் (தமிழில்: லதா அருணாச்சலம், வெளியீடு: எழுத்து பிரசுரம்) ஆகிய நூல்களும் வாசிப்புக்கு உகந்தவை.

தொகுப்பு: க்ருஷ்ணி

இந்து தமிழ் திசை வெளியீடுகள்

சேர்ந்தே கடப்போம்

பாலின பேதத்தை அழித்து ஒழிக்க வேண்டிய அவசியத்தைத்தான் நாள்தோறும் கேள்விப்படும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அந்தத் தேவையை எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான மா என்கிற ஏ.எஸ்.பத்மாவதி முற்றிலுமாக உணர்ந்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது ‘கற்பிதம் அல்ல பெருமிதம்’ புத்தகம். ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். விலை: ரூ.200

ருசியின் மொழி

பண்டிகை நாட்களின் முக்கியக் கவலையான இன்றைய படையலுக்கு எதைச் சமைப்பது என்பதற்கு விடைசொல்கிறது ‘தமிழ் திசை’ வெளியீடாக வந்திருக்கும் ‘பண்டிகை கால சமையல்’ புத்தகம். ஆண்களையும் சமைக்கத் தூண்டுவது இதன் நோக்கங்களில் ஒன்று. நேர்த்தியான சமையல் குறிப்புகளே அதற்குச் சான்று. விலை: 170

வாழ்க்கைக் கலை

அறிஞர்களின் வாழ்வு மட்டுமல்ல மரணமும் நமக்குப் பல பாடங்களைச் சொல்லும். இறுதி நாட்களின் பிரகாசம் ஒப்பீடற்றது. ‘மரணம் ஒரு கலை’ நூலில் அதைத்தான் சொல்லியிருக்கிறார் அ.வெண்ணிலா. விலை:170

தொடர்புக்கு: 74012 96562

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

27 mins ago

சுற்றுச்சூழல்

37 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

53 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்