வட்டத்துக்கு வெளியே: மனிதத்தை மீட்கும் முயற்சி

By செய்திப்பிரிவு

சமூகம் தங்களுக்கு ஏற்படுத்திய தடைக்கற்களையே படிக்கற்களாக மாற்றிக்கொண்டு பல்வேறு துறைகளில் திருநங்கைகள் சாதித்துக்கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கை குடும்ப உறவுகளின் புறக்கணிப்புதான் அவர்களின் வாழ்க்கைச் சூழல் மாறுவதற்குக் காரணமாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் புரிதலோடு சமூகத்தில் திருநங்கையாக மாறி சாதித்தவர்களில் ஓல்கா ஆரோன் குறிப்பிடத்தகுந்தவர்.

25 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்றோருக்குத் தனது பாலின நிலையை விளக்கி, குடும்பத்தின் சம்மதத்துடன் முறையான உளவியல் ஆலோசனைகளுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால் பாலியல் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டு செல்ல மகளாக வாழ்ந்துவருபவர் ஓல்கா. ஆங்கில இலக்கியத்திலும் பொது நிர்வாகத்திலும் பட்டம் பெற்றிருக்கும் இவர், மூலிகை பயிரிடும் பயிற்சி, மனித உரிமைகள் தொடர்பான பல கல்விப் பயிற்சிகளையும் பெற்றிருப்பவர்.

கர்ப்பிணிகளுக்கு உதவி

திருநங்கைகளும் சமூகத்தின் அங்கம்தான் என்பதைக் குழந்தைகள் பாராளுமன்றம், கல்வி- ஆரோக்கியத்தை பெண்களுக்கு அளிப்பதற்கான தொடர் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் உணத்தியவர் ஓல்கா. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின், ‘எலிசபெத் க்ளேசர் ஆய்வு’ என்னும் கர்ப்பிணிகளுக்கான செயல்பாட்டில், நாமக்கல் மாவட்டத்தின் பல சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்குக் கர்ப்ப காலம், பிரசவம், பிரசவத்துக்குப் பிந்தைய பராமரிப்பு, பரிசோதனைகள், குழந்தை வளர்ப்பு போன்றவை குறித்த ஆலோசகராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட லட்சத்துக்கும் மேலான கர்ப்பிணிகளின் பிரச்சினைகளைக் கேட்டு அவர்களை ஆற்றுப்படுத்தியுள்ளார். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செயல்படும் ‘ஏ.ஆர்.டி.’ மையத்தின் நிரந்தரக் கட்டிடம் உருவானதில் இவரின் பங்கும் உண்டு. மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் எளிமையான முறையில் வீட்டிலேயே சத்துணவை சமைத்து உண்ண பல புதுமையான சமையல் செயல்விளக்கங்களை மருத்துவனை வளாகத்திலேயே தொடர்ந்து செயல்படுத்தியவர்.

மனிதம் கொணர்வோம்

திருநங்கையாக சமுதாயத்தின் மற்ற விளிம்புநிலை மக்களுக்குப் பணியாற்றிக் கொண்டே 2009-ல் ப்ராவோ இயக்கத்தை (Bringing Adequate Values of Humanity-BRAVOH) ஆரம்பித்துத் திருநங்கைகளின் மேம்பாட்டுக்கான கொள்கை, சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல பயிற்சிகளையும் வழங்கிவருகிறார்.

2016 நவம்பரில் பிரேசில் நாட்டின் தலைநகர் சா பாவ்லோவிலுள்ள நிலமற்றவர்களின் உரிமை, பாதுகாப்பான உணவுக்கான உரிமை போன்றவற்றுக்காகச் செயல்படும் அமைப்புகளுக்குச் சிறப்பு அழைப்பாளராகச் சென்று பாலினம், குழந்தைகள் - பெண்கள் உரிமை, இந்தியக் கலாச்சாரம், வாழ்க்கை முறை, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், சுகாதாரச் செயல்பாடுகள் போன்றவை குறித்து அங்கிருக்கும் பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு விரிவுரையாளராக மூன்று மாதங்கள் செயல்பட்டிருக்கிறார்.

திருவிருந்தோம்பல்

மாற்றுத்திறனாளிப் பெண்கள், இளம் திருநங்கைகளின் ஒருங்கிணைந்த கலைக் குழுவை உருவாக்கி இந்தியக் கலாச்சாரம், மரபு உணவு, கல்வி சம உரிமை குறித்த உலகக் கலை சுற்றுலா செல்வதற்கான திட்டத்தைச் செயல்படுத்திவரும் ஓல்கா, அண்மையில் 20 இளம் திருநங்கைகளுக்கு ‘திருவிருந்தோம்பல் 2019’ எனும் ஒரு வாரப் பயிற்சியை அம்பத்தூரிலுள்ள பென்சன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - சமையல் கலைக் கல்லூரியில் வழங்கியுள்ளார்.

“இந்தப் பயிற்சியில் உணவு குறித்த அறிவியல் சார்ந்த அடிப்படைக் கருத்துகள், இயற்கை மற்றும் மரபு உணவு, அதன் பயன், அரசு, தனியார் துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பு, வெளிநாடு, சைனீஸ், வட, தென்னிந்திய சமையல் முறைகள் பயிற்றுவிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

அடிப்படைக் கல்வி அல்லது அதற்கான சான்றுகள் இல்லாதவர்களை திறந்தவெளி பள்ளித் திட்டத்தில் இணைத்துச் சான்றிகளுடன் கல்விபெறச் செய்தல், ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்வித் திறன் - ஏதுவான வாழ்வாதாரம் குறித்த சுயவிவரக் குறிப்பைக் கொண்டு தனியார்/பொதுத் துறைகளில் உரிய பணி இடங்களில் பணி அமர்த்த முயல்வது, பொது, தனியார் வளாகங்களில் உணவுக் குடில்கள் (பங்க் கடைகள்), சிறுகடைகள் அமைக்க உதவுதல், உணவு, ஆரோக்கியம் - உடல்நலத் துறைகளின் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்குதல் போன்றவற்றை எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டு இந்தப் பயிற்சிகளை அளித்திருக்கிறோம்” என்றார் ஓல்கா ஆரோன்.

பசி

பயிற்சியில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான ஹீனா, “டேபிள் மேனர்ஸ், பெரிய ஹோட்டல்களில் வருபவர்களின் உணவு சாப்பிடும் முறை, சாப்பிடுவதற்கு முன் சாப்பிடுவது என்ன, சாப்பிட்டபின் எதைச் சாப்பிடுவது போன்றவற்றை இந்தப் பயிற்சியில் கற்றுக்கொண்டோம். சிக்கன் புலவ், சிக்கன் உருண்டைக் குழம்பு, கேக், புரூட் சாலட் போன்றவற்றைச் செய்வதற்குக் கற்றுக்கொண்டோம்.

திருநங்கைகள் மட்டுமே நடத்தும் பசி6 (பசியாறு) எனும் மரபு/ இயற்கை உணவு வழங்கும் நவீன தொடர் உணவகங்களை (chain of modern small restaurants with organic food) நிறுவும் முயற்சியில் இந்தப் பயிற்சியை எங்களுக்கு வழங்கிய ஓல்கா ஈடுபட்டுள்ளார். அதற்கு முன்னதாக இந்தப் பயிற்சியின் அடிப்படையில் பெரிய உணவு விடுதிகளில் வாய்ப்புகள் கிடைத்தாலும் பணிபுரியத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

- யுகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்