முகங்கள்: ஐம்பது வயதில் ஆழ்கடல் பயணம்

By செய்திப்பிரிவு

ச.ச.சிவசங்கர்

ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்துகிறார் ஓவியர் உமா மணி. இயற்கைக் காட்சிகளையும் பல்வேறு நில அமைப்புகளையும் நேரில் பார்த்து ஓவியமாக வரைவது பலரது இயல்பு. ஆனால், தான் வரைகிற ஓவியம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அசாதாரணமான முயற்சிகளில் இறங்கி வியக்கவைக்கிறார் உமா.

உமா மணி, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவரான தன் கணவரின் பணி நிமித்தமாகக் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு இடம்பெயர்ந்தார். அமைதியும் அழகும் சூழ்ந்த தீவில் அமைந்த நிம்மதியான வாழ்க்கை, உமாவின் கவனத்தை ஓவியத்தின் பக்கம் திரும்பியது. தொடக்கத்தில் ரோஜாப் பூக்களைத்தான் அதிகமாகத் தீட்டினார். ரோஜாக்களைப் பற்றிய செய்திகளைத் தேடித் தேடி அறிந்துகொண்டார். அப்படியான தேடலில் ஈடுபட்டவரின் பார்வையை மாற்றியமைத்தது ஒரு ஆவணப்படம். சுற்றுச்சூழல் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பவளத்திட்டுகள் குறித்த ஆவணப்படத்தைப் பார்த்தார். அவரது கவனம் ரோஜாவிலிருந்து பவளத்திட்டை நோக்கித் திரும்பியது. பவளத்திட்டுகள் பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளன என்பதை அறிந்த பிறகு அவற்றை ஓவியமாகத் தீட்ட முடிவு செய்தார்.

சுற்றுச்சூழல் மீதான கரிசனம்

அவரது ஓவியக் கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கண்காட்சியில் பார்வையாளர் ஒருவர், “இந்தப் பவளத்திட்டுகளை நீங்க பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டுள்ளார். அந்தக் கேள்விக்கான விடையாகக் கடலுக்குள் செல்ல உமா முடிவெடுத்தார். கடுமையான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் ஆழ்கடல் நீச்சலில் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஆழ்கடலுக்குச் சென்று பவளத்திட்டுகளைப் பார்த்து அவற்றை ஓவியமாகத் தீட்டத் தொடங்கினார். ஆழ்கடல் நீச்சலில் ஈடுபடும் உமாவின் வயது 54.

ஸ்கூபா டைவிங் மூலமாகப் பவளத்திட்டுகளை மிக அருகில் பார்த்த உமாவுக்கு அவற்றைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்ற ஆசை துளிர்த்தது. அதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், ஏனோ அந்த முயற்சி கைநழுவிக்கொண்டே போனது. அவரால் ஆவணப்படம் எடுக்க முடியாத நிலையில் அவரே ஆவணப்படமாகும் வாய்ப்பும் வாய்த்தது. கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான ப்ரியா துவசேரி, உமா மணியைப் பற்றி ‘கோரல் வுமன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார். அது உமா மணியைப் பரவலான பரப்புக்கு எடுத்துச் சென்றது.

யதார்த்த ஓவியங்களைத் தீட்டுவதற்காகக் கடலுக்குள் செல்லும் உமா மணிக்குச் சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன. அதுவரை பவளத்திட்டுகளை அழகியலோடு பார்த்துவந்த உமாவுக்கு அந்த ஆவணப்படம் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. மாலத்தீவு கடலில் நீந்திய உமா மணிக்கு மன்னார் வளைகுடா பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போதுள்ள பவளத்திட்டுகளின் நிலையையும் அரசின் அலட்சியத்தையும் புரிந்துகொண்டார்.

தனக்குப் பிடித்ததைச் சுதந்திரமாகச் செய்துவரும் உமா மணி, பவளத்திட்டுகளை ஓவியமாக வரைவதுடன் மட்டும் நின்றுவிட விரும்பவில்லை என்கிறார். “நான் செய்ய வேண்டிய வேலை அதிகமாக இருக்கிறது. ஆழ்கடலில் பவளத்திட்டுகள் பாதிப்புக்குள்ளான இடங்களில் பவளத்திட்டு நாற்றாங்காலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான படிப்பைப் படிக்கப் போகிறேன்” என்று உற்சாகமாகக் கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்