ஆட்டிசத்தை வென்ற அன்பு

By ஜி.ஞானவேல் முருகன்

ஒரு குழந்தைக்கு நேரும் எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அதில் இருந்து அவர்களை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியும் என்பதற்கு நீலா போன்ற தாய்மார்களே உதாரணம்.

பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளை, முகம் பார்த்துப் பேசாமல் முதுகைத் திருப்பிக்கொண்டால், பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும்? அந்த வலியை ஆட்டிசம் பாதித்த தன் மகன் அய்யப்பன் மூலம் அனுபவித்தவர் நீலா. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நீலாவின் கணவர் சுரேஷ்குமார், கால் டாக்ஸி ஓட்டுநர். திருச்சியில் வாடகை வீட்டில் நடுத்தரத்துக்கும் ஏழ்மைக்கும் இடையிலான சாதாரணக் குடும்பம். அமைதியாகச் சென்றுகொண்டிருந்த குடும்ப வாழ்வில், ஆண் குழந்தை பிறந்தவுடன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் நீலா.

ஆனால் நீலாவின் அந்த மகிழ்ச்சி சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. முகம் பார்ப்பது, சிரிப்பது, குப்புற விழுதல், தவழ்தல் போன்ற எந்தச் செயலையும் செய்யாத தன் மகன் குறித்துக் கலங்கியவர், குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அப்போதுதான் தன் மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பது அவருக்குத் தெரியவந்தது.

அந்த வார்த்தையைக் கேட்டதும் உடைந்துபோனார் நீலா. தன் மகனுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை முதலில் மனது ஏற்க மறுத்தாலும், பின்னர் யதார்த்தத்தை உணர்ந்தார். தொடர் சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு அய்யப்பனைத் தயார் செய்தார்.

ஆட்டிசம் உள்ளிட்ட மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட பாதிப்பு உள்ள பிள்ளைகளின் பெற்றோருக்கு இருக்கும் ஒரே கவலை, ‘தங்களுக்குப் பின் இவர்களை யார் பார்த்துக் கொள்வார்களோ’ என்பதுதான். இதுபோன்ற மன நெருக்கடியால் நீலா தம்பதியர் அடுத்த குழந்தைக்குக்கூட ஆசைப்படவில்லை. அய்யப்பனே இவர்களின் உலகமானது.

திருச்சி ஹோலிகிராஸ் சர்வீஸ் பள்ளியில் ஆரம்பக் கல்வியை 5 வயதில் ஆரம்பித்த அய்யப்பன், அதன் பிறகு மானஸமித்ரா சிறப்புப் பள்ளியில் படித்து அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். நீலாவின் தொடர் முயற்சியால் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வெழுதிய அய்யப்பன், 70 சதவீத மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடைந்தார்.

அனைத்தும் சாத்தியமே

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரை வருவதே பெரிய விஷயம். அதிலும் தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்துக்குத் தன் மகன் முன்னேறிவிட்டதைப் பெருமையுடன் சொல்லும் நீலா, இதற்காகத் தான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை என்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக மகனை இரண்டு பஸ் பிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தும், சற்றும் தளராமல் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அடுத்ததாக பிளஸ் 2 தேர்வுக்கும் மகனைத் தயார்படுத்தும் முனைப்பில் இருக்கும் நீலா, “ஆட்டிசம் ஒரு குறைபாடுதானே தவிர மனநோய் அல்ல. இந்தக் குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை உருவாக்கி அதிலேயே மூழ்கியிருப்பார்கள். பெரும்பாலான பெற்றோரிடம் சகிப்புத் தன்மையும், விழிப்புணர்வும் இல்லாததால் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்படியே விடப்படுகின்றனர்.

அதனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஆரம்பத்தில் இருந்தே சிகிச்சை, பயிற்சி அளித்தால் மற்றவர்களைப் போல மாற்ற முடியும். 18 வயதில் சுயமாகத் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்குத் தயாராகிவிடுவார்கள்” என்கிறார்.

விடாமுயற்சி இருந்தால் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வியும் சாத்தியமே என்று குறையாத உற்சாகத்துடன் பேசும் நீலா, “எங்களுடைய காலத்துக்குப் பின், என் மகன் அவனுடைய வேலைகளை அவனே செய்துகொள்வான். இந்த உலகில் அவன் நம்பிக்கையுடனும் சுயசார்புடனும் வாழ்வதற்கான வழியை நாங்கள் கற்றுத் தந்திருக்கிறோம்”என்று தாய்மையின் பெருமிதத்துடன் சொல்கிறார் நீலா.

படம்: ஜி.ஞானவேல்முருகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்