‘நாங்கள் வெல்லுவோம்!’ - சமூகநீதியின் குரல் ஜோன் பயேஸ்

By எஸ்.சுஜாதா

“மக்கள் என்னை அடையாளப்படுத்த வேண்டும் என்றால், முதலில் நல்ல மனிதராகவும் இரண்டாவதாகப் போர் எதிர்ப்பாளராகவும், மூன்றாவதாகப் பாடகராகவும் வரிசைப்படுத்தும்படிக் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஜோன் பயேஸ்.

மனித உரிமைப் போராளி, போர் எதிர்ப்பாளர், அரசியல் மற்றும் சமூகப் போராட்டக்காரர், சூழலியலாளர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று அறியப்படும் ஜோன் அமெரிக்காவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர்.

சமத்துவ சிந்தனை

அமெரிக்காவில் பிறந்தாலும் ஜோன் அமெரிக்கர் அல்ல. அன்றைய அமெரிக்காவில் பாகுபாடுகள் நிறைந்திருந்தன. அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். பள்ளியில் ஜோனும் இனப் பாகுபாட்டுக்கு ஆளானார். மனிதர்களுக்கு இடையே நிலவும் சமத்துவமின்மையைக் கண்டுகொண்டார். அப்பாவின் வேலை நிமித்தமாக ஈராக் சென்றார் ஜோன். அங்கேதான் வறுமை, வன்முறை போன்றவற்றை வெகு அருகில் சந்திக்க நேர்ந்தது. மிக இளம் வயதிலேயே இந்த அனுபவங்கள் அவரைச் சிந்திக்க வைத்தன.

மக்கள் இசை ஆர்வலர்

பீட் சீகர் என்ற புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகரின் பாடல்களைக் கேட்ட ஜோனுக்கு பாடுவதில் அதிக ஈடுபாடு வந்தது. அதே நேரத்தில், நண்பர்கள் மூலம் மார்ட்டின் லூதர் கிங் உரையைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. 16 வயதில் பீட் சீகரின் புகழ்பெற்ற ‘நாங்கள் வெல்லுவோம்… நாங்கள் வெல்லுவோம்… ஓர் நாள்’ (we shall overcome… we shall overcome someday…) என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார் ஜோன்.

பாடகராகவும் சமூக ஆர்வலராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப் பெரிய பேரணியை நடத்தினர். அதில் பங்கேற்ற ஜோன், மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரையைக் கேட்டார். அதிலிருந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதுடன், உணர்வுப்பூர்வமான பாடல்களையும் பாடி மக்களை எழுச்சிகொள்ள வைத்தார். மார்ட்டின் லூதர் கிங்கின் நண்பராகவும் மாறினார்.

1960ம் ஆண்டு ஜோனின் முதல் ஆல்பம் வெளியானது. மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டு ஆண்டுகள் ஜோனின் ஆல்பங்கள் தொடர்ந்து விற்பனையில் முன்னணியில் இருந்தன. பாப் டைலான் என்ற பாடகரைத் தன் ஆல்பத்தில் அறிமுகம் செய்தார் ஜோன். பிற்காலத்தில் பாப் டைலான் உலகப் புகழ்பெற்ற பாடகராக மாறினார்.

போர் எதிர்ப்பாளர்

1964-ம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற போருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து, உதவி செய்து வந்தது. போர் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தினார் ஜோன். அமெரிக்கர்களின் பணம் போருக்குப் பயன்படக்கூடாது என்று கூறி, வரி செலுத்த மறுத்தார். இதனால் ஜோனைச் சிறையில் அடைத்தனர்.

வெளிவந்த பிறகு மீண்டும் போராட்டத்தில் இறங்கினார். அமைதியைக் குலைத்தார் என்ற குற்றச்சாட்டில் 11 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்.

“அமைதியையா தொந்தரவு செய்தேன்… போரைத் தானே தொந்தரவு செய்தேன்” என்றார் ஜோன்.

ராணுவத்துக்கு இளைஞர்களைக் கட்டாயமாக சேர்ப்பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஜோனின் அம்மா, சகோதரிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறை சென்றனர். அப்பொழுது டேவிட் ஹாரிஸின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் வாழ்ந்தனர். பிறகு திருமண உறவு முறிந்தாலும் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.

மனித உரிமைப் போராளி

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் ஜோன். அமெரிக்காவில் மனித உரிமைகள் அமைப்பு ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்தவர், இன்றுவரை தொடர்ந்து அதில் இயங்கி வருகிறார். சுற்றுச்சூழலிலும் தன் கவனத்தைத் திருப்பினார் ஜோன். ஜுலியா பட்டர்ஃப்ளை ஹில்லுடன் சேர்ந்து மரங்களைக் காப்பாற்றுவதற்கும் நிலங்களைப் பாதுகாப்பதற்கும் போராடினார்.

ஒரு பக்கம் போராட்டங்கள்… இன்னொரு பக்கம் இசை வெளியீடுகள் என்று எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருக்கிறார் ஜோன். கடந்த 55 ஆண்டுகளாக ஜோனின் ஆல்பங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்தந்தக் காலங்களில் நடைபெறும் சமூக, அரசியல் விஷயங்களைப் பாடல்களில் கொண்டு வருகிறார் ஜோன். “சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இசைக்கு மக்களின் மனத்தை மாற்றும் சக்தி இருக்கிறது என்று நம்புகிறேன். அதனால்தான் ஒடுக்குமுறையை எதிர்த்தோ, அமைதியை வலியுறுத்தியோ பாடல்களைப் பாடுகிறேன்” என்கிறார் ஜோன்.

அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஈரான், ஈராக், பாலஸ்தீன், இஸ்ரேல் என்று உலகின் எந்த நாட்டில் நடைபெறும் வன்முறைகளையும் போர்களையும் எதிர்க்கும் முதல் குரல் ஜோனுடையதாக இருக்கிறது.

அரசியலில் நேரடியாக ஜோன் இறங்கியதில்லை. ஆனால் பராக் ஒபாமா பதவியேற்றபோது, வெள்ளை மாளிகையில் ‘நாங்கள் வெல்லுவோம்’ பாடலைப் பாடினார். நிறவெறி நிலவிய அமெரிக்காவில் இன்று ஓர் ஆப்பிரிக்க - அமெரிக்கர் அதிபராகி, தன் நண்பர் மார்ட்டின் லூதர் கிங்கின் கனவை நிஜமாக்கியிருக்கிறார். அதற்காகவே பாடியதாகச் சொன்னார் ஜோன்.

2011-ம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சிக்கு எதிராக, வால் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, இசை நிகழ்ச்சி நடத்தினார்.

மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பாப் டைலான், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், செக் குடியரசின் முன்னாள் அதிபர் வாக்லாவ் ஹாவெல் போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் நண்பராக இருந்த ஜோன், போராட்டம் என்ற ஆபரணத்தை அணிந்து எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

“இசையைவிட சமூக நீதியே என்னுடைய வாழ்க்கையின் முதன்மை நோக்கம்” என்று சொல்லும் ஜோன், தன் இசையைச் சமூக நீதிக்காகப் பயன்படுத்திய முதல் பெண்ணாக இருக்கிறார்.

உலகம் எங்கும் சமூகநீதிக்கான போராட்டங்களில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது ‘நாங்கள் வெல்லுவோம்’ பாடல். தன் இசை நிகழ்ச்சிகளில் அரை நூற்றாண்டுகளாக இந்தப் பாடலை மிகுந்த நம்பிக்கையோடு பாடி வருகிறார் ஜோன்.

‘நாங்கள் வெல்லுவோம்… நாங்கள் வெல்லுவோம்… ஓர் நாள்…’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்