‘பெண்களுக்காகப் போராடினால் தவறா?’

By எஸ்.சுஜாதா

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கார் ஓட்டலாம், இரவு 8 மணிக்கு மேல் கார் ஓட்டக்கூடாது, கார் ஓட்டும்போது மேக் அப் போட்டிருக்கக்கூடாது, அப்பா, சகோதரன், கணவன், மகன் என்று யாராவது ஓர் ஆணின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளுடன்தான் பெண்களுக்கு கார் ஓட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிபந்தனைகளைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி கிடைக்கவே பெரும் போராட்டத்தை சவுதி அரேபியாவில் பெண்கள் நடத்தியிருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததற்கும் போராட்டங்கள் நடைபெற்றதற்கும் முக்கியக் காரணம் மனல் அல் ஷாரிஃப்.

கல்வி மற்றும் மருத்துவத்தில் மட்டுமே பெண்களைப் பெருமளவு வேலைசெய்ய அனுமதிக்கும் நாட்டில், கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆனார் ஷாரிஃப். மதத்தின் பெயரால் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் பல விஷயங்களைக் கேள்விக்கு உட்படுத்தும் பெண்ணாக இருந்தார். பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளில் பங்கேற்றுவந்தார்.

சிறை வாசம்

2012-ம் ஆண்டு காரோட்டிச் சென்றபோது, தன் தோழியைப் படம் பிடிக்கச் செய்தார். தன் பெயர், வேலை, பெண்கள் ஏன் கார் ஓட்ட வேண்டும் போன்ற பல விஷயங்களையும் பேசியபடியே காரை ஓட்டினார். வீடியோவை யூடியூபில் வெளியிட்டார். உடனே வேகமாகச் செய்தி பரவியது. முதல் நாளில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்திருந்தனர். சவுதி போலீஸ், ஷாரிஃபைக் கைது செய்தது. 6 மணி நேரத்துக்குப் பிறகு வெளியில் வந்தார்.

மறுநாள் பள்ளிக்குக் கிளம்பும்போது, ‘அம்மா, நாம் கெட்டவர்களா?’ என்று கேட்டான் ஷாரிஃபின் மகன். காரணம் புரியவில்லை. பிறகுதான் யூடியூப் பார்த்த அவனது பள்ளி நண்பர்கள், ‘உன் அம்மாவை ஜெயிலில் தள்ளிவிடுவார்கள்’ என்று சொன்ன விஷயம் தெரிந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனார் ஷாரிஃப். தெருவிலோ இன்னும் நிலைமை மோசமாக இருந்தது. ஷாரிஃப் நடந்து சென்றபோது ஒருவன், பெரிய கல்லால் தாக்கினான். நல்லவேளை ஷாரிஃப் தப்பித்துக்கொண்டார். நேரிலும் தொலைபேசியிலும் இமெயில்களிலும் பலாத்காரம் செய்துவிடுவதாகவும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்கள்.

மோசமான அனுபவங்களால் ஷாரிஃபின் மனம் இன்னும் வலிமையடைந்தது. மீண்டும் கார் ஓட்டினார். இந்த முறை அவருடன் சகோதரரும் அமர்ந்திருந்தார். காரை நிறுத்திய போலீஸ், விசாரணை செய்தது. ஒன்பது நாட்கள் அவரைச் சிறையில் அடைத்தது. கார் ஓட்டக் கூடாது, மீடியாவில் பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் வெளியில் வந்தார் ஷாரிஃப்.

எதிர்ப்பும் ஆதரவும்

பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்காகப் போராட்டங்களை நடத்த முடிவு செய்தார் ஷாரிஃப். பேஸ்புக், ட்விட்டர் மூலம் பெண்களின் ஆதரவைத் திரட்டினார். ஜூன் 7 அன்று 12 ஆயிரம் பேர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, களத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவரது வீடியோ, பேஸ்புக் போன்றவை அழிக்கப்பட்டன.

கார் ஓட்டும் போராட்டத்தால், ஷாரிஃபின் கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டார். ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக வசிக்க அனுமதி இல்லை. அதனால் குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார் ஷாரிஃப். அலுவலகத்திலும் பிரச்சினை. ஒரே நேரத்தில் ஷாரிஃபைக் கெட்டவராகப் பாதிப் பேரும், நல்லவராகப் பாதிப் பேரும் பார்த்தனர். கார் ஓட்டும் போராட்டம் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்தது. உலகத்தின் கவனத்தைப் பெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஷாரிஃப்பைப் பாராட்டின. விருது கொடுக்க அழைத்தன.

மதவாதிகளும் அரசாங்கமும் பெண்கள் போராட்டங்களை ஒடுக்கினாலும், பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் போராட்டம் புத்துயிர் பெற்றுக்கொண்டே வந்தது. கையெழுத்து இயக்கங்கள் நடத்தப் பட்டன. சவுதி அரேபியாவில் வசிக்க இயலாத சூழ்நிலை உருவானது. பிரேஸில் நாட்டுக்காரரை மறுமணம் செய்துகொண்டார் ஷாரிஃப். துபாய்க்குக் குடிபெயர்ந்தார். வெளிநாட்டுக்காரரிடம் குழந்தை வளரக் கூடாது என்று தடை வாங்கினார் முதல் கணவர். அதனால் ஷாரிஃப்பின் பெற்றோரிடம் குழந்தை வளர்ந்து வருகிறது. வார இறுதியில் சவுதிக்கு வந்து மகனைப் பார்த்துவிட்டுச் செல்கிறார் ஷாரிஃப்.

எல்லா உரிமைகளும் வேண்டும்

குடும்பத்தை இழந்து, குழந்தையைப் பிரிந்து, இன்னொரு நாட்டில் வசிக்க நேர்ந்தாலும் ஷாரிஃப் மன உறுதியுடன் பெண்களுக்கான போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார். இந்தப் படிப்புதான் படிக்க வேண்டும், ஆண்களோடு வேலை செய்யக் கூடாது, இசை கேட்கக் கூடாது, சினிமா பார்க்கக் கூடாது என்று எத்தனை எத்தனையோ கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. போராடாமல் இருந்திருந்தால் இன்று ஷாரிஃப் கம்ப்யூட்டர் துறைக்குள் நுழைந்திருக்க முடியாது. பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதித்த தடையையும் நீக்கியிருக்க முடியாது. போராட்டங்களைத் தவிர வேறு எந்தச் செயலும் முன்னேற்றத் துக்கு அழைத்துச் செல்லாது என்கிறார் ஷாரிஃப். சின்னத் துளிகளில்தானே ஆரம்பிக்கிறது பெரிய மழை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்