கிரிக்கெட் பெண்கள் - ஏக்தா பிஷ்ட்: ஆண்கள் அணியில் கிரிக்கெட் பழகியவர்!

By டி. கார்த்திக்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு அஸ்வின்போல மகளிர் அணிக்கு ஏக்தா பிஷ்ட். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், தனது மந்திரச் சுழலால் அந்த அணியை ஊதித் தள்ளி, புதிய நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார்.

மகளிர் கிரிக்கெட் என்றாலே மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி என ஒரு சிலரையே பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகு, எல்லோரும் அறிய விரும்பும் வீராங்கனையாக மாறியிருக்கிறார் இந்தச் சுழல் மங்கை. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ரன்களுக்குள் சுருண்டதற்கு ஏக்தாவின் மந்திரச் சுழலும் ஒரு காரணம்.

இடது கை சுழல் பந்துவீச்சில் துல்லியமாகப் பந்துவீசி பாகிஸ்தான் அணிக்குக் கடும் நெருக்கடி கொடுத்தார். இந்தத் தொடரில் தொடர்ந்து ரன் கொடுக்காமல் சிக்கனமாகப் பந்துவீசிவரும் ஏக்தா, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகளின் பட்டியலில் இரண்டாமிடம் வகித்துவருகிறார். இந்த ஆண்டு மட்டும் ஒரு நாள் போட்டியில் இரண்டு முறை பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருக்கிறார்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலக்கும் இவர், பெரிய பின்னணி இல்லாதவர். ஆனால், தனது சிறு வயதுக் கனவுக்கு வடிவம் கொடுத்து இன்று கிரிக்கெட்டில் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். உத்தராகண்ட் மாநிலம் மலைப்பிரதேச பகுதியான அல்மோராதான் ஏக்தாவின் சொந்த ஊர். ஏக்தாவுக்குக் கிரிக்கெட் என்றால் உயிர். ஆறு வயதிலேயே கிரிக்கெட் ஆடத் தொடங்கிவிட்டார்.

சுழல் வீராங்கனை

மற்ற விளையாட்டுகள் என்றால் ஒரிரு பெண்கள் சேர்ந்து விளையாடலாம். ஆனால், குழு விளையாட்டான கிரிக்கெட்டில் பல பெண்கள் விளையாடக் கிடைப்பது மிகவும் கடினம். அந்தக் கஷ்டத்தை அதிகம் உணர்ந்தவர் ஏக்தா. கிரிக்கெட் விளையாடத் தோழிகள் கிடைக்காததால் ஆண்கள் அணியோடு சேர்ந்துதான் தனது கிரிக்கெட் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். ஆண்கள் அணியில் ஒருவராக ஏக்தா நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதன் காரணமாகவே தனி கவனம் பெற்றவர்.

ஏக்தாவின் தந்தை குன்டன் சிங் பிஷ்ட் முன்னாள் ராணுவ வீரர். ஓய்வுக்குப் பிறகு 1,500 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாகப் பெற்றுவந்தார். இந்தச் சொற்ப ஓய்வூதியம் தனது மகளின் கிரிக்கெட் கனவுக்கு உதாவாது என்பதாலும், மேலும் இரண்டு குழந்தைகளின் எதிர்கால தேவைக்காகவும் டீக்கடையை நடத்திவந்தார். கஷ்டமான குடும்பச் சூழ்நிலைக்கு மத்தியில் முறையான கிரிக்கெட் பயிற்சி எடுத்துவந்த ஏக்தா, சுழல் பந்துவீச்சில் தேர்ந்தவரானார்.

கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த ஏக்தா, 2006-ம் ஆண்டு உத்தராகண்ட் அணியில் இடம்பிடித்தார். அதன் பின்னர் 2007 முதல் 2010 வரை உத்தரப்பிரதேச அணியில் தொடர்ந்து விளையாடி அணித் தலைவராகவும் உருவெடுத்தார். தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 2011-ம் ஆண்டில் இந்திய அணியில் வாய்ப்பு தேடிவந்தது. தற்போது 44 ஒரு நாள் போட்டிகளிலும், 36 டி20 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார் ஏக்தா. ரயில்வே வேலை, இந்திய அணியில் பி கிரேடு வீராங்கனை என உயர்ந்துள்ள ஏக்தா, தனது குடும்பத்தின் நிலையையும் ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறார்.

ஏக்தா பிஷ்ட் குறித்து தந்தை குன்டன் சிங் பிஷ்ட் அண்மையில் இப்படிச் சொன்னார்: “2011-ல் இந்திய அணியில் ஏக்தா இடம்பிடித்தபோது, இந்தியாவை ஒரு நாள் பெருமையடையச் செய்வார் என்று நம்பினோம்”.

அவரது வார்த்தைகள் செயல்வடிவம் பெற்றுவிட்டன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்