பருவத்தே பணம் செய்: முதலீடு செய்ய எது தேவை?

By சி.முருகேஷ்பாபு

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் நிறுவனங்களைத் தேர்வுசெய்வது முக்கியம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில விஷயங்களை மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவற்றில் சில நம் தகுதி சார்ந்த விஷயங்கள். வேறு சில, நாம் முதலீடு செய்யப் போகும் நிறுவனங்கள் சார்ந்தவை.

சிறியதா? பெரியதா?

நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யப் போகிறீர்களோ அதன் அடிப்படையில்தான் நிறுவனங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். தொடக்க நிலையில் இருக்கும் முதலீட்டாளர், குறைவான தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுதான் சிறந்தது. ஐடி நிறுவனத்தில் உங்கள் முதலீட்டைச் செய்வதாக முடிவெடுத்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் உங்கள் தேர்வு எந்த நிறுவனம்? ஐடி துறையில் முன்னணியில் இருக்கும் டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களா, இல்லை வளர்ந்துகொண்டிருக்கும் சிறிய நிறுவனமா? உங்கள் முதலீட்டுத் தொகை இருபதாயிரம் ரூபாயாக இருக்கும் பட்சத்தில் டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் என்றால் பத்து, இருபது பங்குகள்தான் வாங்க முடியும். அதுவே ஹெக்ஸாவேர் போன்ற நிறுவனப் பங்குகள் என்றால் நூறு பங்குகளை வாங்க முடியும்.

முதலாவது இரண்டாயிரம், ஆயிரம் என்று இருக்கும் நிறுவனங்களின் பங்குகளைத் தேர்வு செய்வதைவிட இருநூற்று சொச்சம் விலையில் இருக்கும் சிறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது ஆரம்பக்கட்ட சிறு முதலீட்டாளருக்கு நல்லது. இரண்டாவது, பொதுவாகவே ஒரு துறையில் நாம் முதலீடு செய்யும்போது அந்தத் துறை பற்றிய அடிப்படைத் தகவல்களையாவது நாம் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். நிறுவனம் என்று வரும்போது அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், அவர்களுடைய லாப நஷ்டங்கள், திறமைகள், பலவீனங்கள் என்று எல்லாவற்றையும் கணித்து எடைபோடும் அளவுக்கு நமக்கு ஞானம் இருக்க வேண்டும். மூன்றாவதாக உங்களுக்கு இருக்க வேண்டிய தகுதி, பொறுமை. முதலீட்டில் அதிலும் குறிப்பாகப் பங்குச் சந்தை முதலீட்டில் முதலீட்டாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படையான குணம் இது.

பொறுமைக்குப் பரிசு

சில நிறுவனங்கள் மிகச் சிறப்பானவையாக இருக்கலாம். ஆனால் அவற்றின் தற்போதைய செயல்பாடுகள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். அப்போது நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அவசரப்படக் கூடாது, பொறுமை காக்க வேண்டும். நல்ல சூழல் வரும்போது முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

பங்குச் சந்தை முதலீட்டில் பெரும் தவறு நிகழும் இடம் இதுதான். பொறுமையின்மை. சந்தை காட்டும் ஜாலங்களில் மயங்கி, தவறான விலையில் வாங்கவோ விற்கவோ செய்துவிட்டு, பின்னர் வருந்தும் நிலையைப் பல இடங்களில் பார்க்கமுடிகிறது. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடி இருக்கும் கொக்கைப் போல நல்ல முதலீட்டாளர் காத்திருக்க வேண்டும். அந்தப் பொறுமைக்குச் சரியான பரிசு நிச்சயம் கிடைக்கும்.

நிறுவனத் தேர்வு

முதலீட்டாளரின் குணநலனைப் பார்த்தாகிவிட்டது. இனி நிறுவனங்களின் சூழல் எப்படி இருந்தால் அதில் முதலீடு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம். முதலாவது நிறுவனத்தின் செயல்பாடு. துறை சிறப்பானதாக இருக்கலாம். அதை வைத்து அந்தத் துறையில் உள்ள நிறுவனமும் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்துவிட முடியாது. அந்த நிறுவனம் தனிப்பட்ட முறையில் பெறும் தொழில் வாய்ப்புகள், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி போன்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அதன் பங்குகளை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவதாக அந்தத் துறையின் பலமான நிறுவனங்களுக்கு நிகரான செயல்பாட்டோடு இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் சிறப்பாகச் செயல்படும் ஒரு துறையைத் தேர்வு செய்திருக்கிறோம். அந்தத் துறையை நாம் தேர்வு செய்யும் அளவுக்கு நம் கவனத்தை ஈர்த்திருக்கும் நிறுவனங்களில் எந்த நிறுவனம் நம் முதலீட்டு வரம்புக்குள் வருகிறது என்று பார்க்க வேண்டும். அந்த நிறுவனத்துக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

மூன்றாவதாக அந்த நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால், சில நேரங்களில் ஒரு துறை கிடுகிடுவென்று மேலேறும்போது சில நிறுவனங்களும் மேலேறுவது போலத் தோற்றமளிக்கலாம். ஆனால், அந்த நிறுவனம் தனிப்பட்ட முறையில் பலமில்லாததாக இருந்தால் அந்த ஏற்றம் தற்காலிகமானதாகவோ அல்லது மாயத் தோற்றம் தரக்கூடியதாகவோ இருக்கலாம். அதை நம்பி நாம் முதலீடு செய்துவிடக் கூடாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் சந்தையில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு. தனிப்பட்ட முறையில் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டாலும் சந்தையில் அந்த நிறுவனம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தால் அதன் பங்குப் பரிவர்த்தனை பெரிய அளவில் இருக்காது. அப்போது நாம் செய்யும் முதலீடும் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுவிடும்.

ஆக, தனிப்பட்ட முதலீட்டாளரின் தகுதிகள், நிறுவனத்தின் செயல்பாடு, நிலைப்பாடு போன்றவற்றின் அடிப் படையில்தான் நம் முதலீடும் அமைய வேண்டும். அப்போதுதான் பங்குச் சந்தையில் நாம் செய்யும் முதலீடு பலன் அளிக்கக் கூடியதாக இருக்கும். சரி, பங்குச் சந்தையில் குதித்துவிடலாமா என்று கேட்கிறீர்களா? இன்னொரு கடமை இருக்கிறது. அதையும் செய்துவிட்டு, களத்தில் இறங்குவோம். அந்தக் கடமை என்ன என்பது பற்றிப் பேசலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்