களம் புதிது: வீல்சேர் வீராங்கனை வினோலியா

By ஜெ.ஞானசேகர்

போட்டி நிறைந்த இந்த உலகில் ஒவ்வொருவரும் போராடித்தான் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதல் சவால் காத்திருக்கிறது. “முதலில் அவர்கள் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும். தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்திலிருந்து விடுபட வேண்டும்.

பிறகு தங்களிடமுள்ள ஏதேனும் ஒரு தனித்திறனை வெளிக்கொண்டு வருவது மூலம், பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழலாம்” என்று சொல்லும் வினோலியா ஜூலியட், அதற்குத் தன்னையே உதாரணமாகச் சொல்கிறார். மாநில, தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இவர், தமிழ்நாடு பெண்கள் அணியின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவர்!

போலியோவால் பாதிக்கப்பட்ட வினோலியா, தற்போது சென்னை அக்கவுண்ட்ஸ் ஜெனரல் (AG Office) அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்.

“மாற்றுத் திறனாளி என்பதால் சிறு வயது முதல் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவந்தேன். ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகுதான் என் மீது பிறர் கொண்டிருந்த பார்வையும் எண்ணமும் மாறத் தொடங்கின. கல்லூரிப் படிப்பை முடித்து, குடும்பச் சூழல் காரணமாகப் பல்வேறு தனியார் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றினேன்” என்று சொல்லும் வினோலியா, கடந்த 2013-ல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். சக ஊழியர்களான சாந்தி, சதுர்தேவி ஆகியோரின் வற்புறுத்தலால் வீல்சேர் கூடைப்பந்து போட்டியைக் காணச் சென்றார்.

“எவ்வித நோக்கமும் இல்லாமல் சென்றதால் முதலில் அந்த விளையாட்டில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிவதற்காக விளையாட்டில் ஈடுபட முடிவெடுத்தேன்” என்று தன் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்ட தருணத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் வினோலியா.

ஒரு நாயகி உதயமானார்

கால நேரம் பார்க்காமல் பயிற்சியில் ஈடுபட்டார். தன்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உருவானது. “மாற்றுத் திறனாளிகள் தங்கள் நிலையை எண்ணி வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடக் கூடாது. வீட்டுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது. அந்தப் பரந்த உலகத்தில் நமக்கான வாய்ப்பும் காத்திருக்கிறது” என்று சொல்லும் வினோலியா, “எந்தவொரு செயலிலும் முதலில் கிடைக்கும் தோல்விகளை அனுபவப் பாடங்களாகக் கருதி, வெற்றியை நோக்கி சுணக்கம் இல்லாமல் முன்னேறினால் நாம் நினைத்த இலக்கை எளிதில் அடைந்துவிட முடியும்.

உதவக்கூடிய நல்ல உள்ளங்கள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பல ஆண்டுகளாக இலவசமாகப் பயிற்சி அளித்துவரும் தாயுமான சுப்பிரமணியம். சாதனை படைத்துவரும் மாற்றுத் திறனாளியான இவர்தான் எங்களைப் போன்றவர்களின் ரோல்மாடல்” என்கிறார் வினோலியா.

பிறவிக் குறைபாடு உடையவர்களைக் காட்டிலும், திடீர் விபத்தால் மாற்றுத் திறனாளிகளாக மாறுவோருக்கு அதிக மன அழுத்தம் இருக்கும். அவர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் எதிர்மறை சிந்தனைகள் மறைந்து நேர்மறை சிந்தனைகள் உருவாகும் என்று சொல்லும் வினோலியா, மாற்றுத் திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வெளியுலகுக்கு வந்தால் ஜெனித்தா ஆன்டோ, மாரியப்பன் போன்று மேலும் பல சாதனையாளர்கள் நம் நாட்டுக்குப் பெருமை தேடித் தருவார்கள்” என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்