கமலா, கல்பனா, கனிஷ்கா: ‘நோ’ சொல்வதும் எங்கள் உரிமை!

By பாரதி ஆனந்த்

‘பிங்க்’ படம் முடிந்து ஆழ்ந்த மவுனத்துடன் வெளிவந்த கமலா, கல்பனா, கனிஷ்கா மூவரும் உணவு விடுதிக்குள் நுழைந்தனர்.

காபியை உறிஞ்சியபடி, “படம் எப்படி இருந்தது?’’ என்றார் கல்பனா.

“நோ மீன்ஸ் நோ என்ற அந்த வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை! இந்தச் சமூகம் ஒரு பெண் பற்றி முன்முடிவுடனேயே எப்பவும் இருக்கு. பெண் பற்றிய மதிப்பீட்டுக்கான சமூகத்தின் அளவுகோல் அவளது படிப்பு, அறிவு, குணம் பற்றியதல்ல. மாறாக அவளது உடை, நட்பு, அவள் எத்தனை மணிக்கு வீடு திரும்புகிறாள் என்பதைக்கொண்டே சீர்தூக்கிப் பார்க்கிறது. இது எவ்வளவு அபத்தமானது? நீதி கேட்டு ஒரு பெண் கோர்ட் படியேறினால்கூட அவள் ‘மோசமானவள்’ என்றே சித்தரிக்கப்படுகிறாள். மகிழ்ச்சி இங்கு பாலினம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆணுக்கான மகிழ்ச்சிக்கு இங்கு வரையறையில்லை. ஆனால் பெண்ணுக்கான மகிழ்ச்சிக்கு அகராதியே இருக்கிறது. இந்தப் பார்வை மீதான சவுக்கடிதான் பிங்க்” என்று விமர்சனத்தை வைத்தாள் கனிஷ்கா.

“நீ சொல்றது ரொம்ப சரி கனிஷ்கா. சமூகத்தில் பெண்களுக்கான நிறமாகத் திணிக்கப்பட்டுள்ள ‘பிங்க்’என்ற பெயரில் வெளிவந்ததுதான் எனக்குப் பிடிக்கலை” என்றார் கமலா பாட்டி.

“அது ஒண்ணும் படத்துக்கு மைனஸ் இல்லை பாட்டி. ‘நோ மீன்ஸ் நோ’ என்றவுடன் எனக்கு ஜெர்மனியின் ‘NeinHeisstNein’ சட்டம் நினைவுக்கு வருது”

கமலாவும் கனிஷ்காவும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஜெர்மனியில் கடந்த ஜூலை மாதம் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஜெர்மன் மொழியில் ‘NeinHeisstNein’ என்றால் ‘இல்லை யென்றால் இல்லை’ என்று பொருள். அதாவது பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண், உடல் பலத்தைப் பிரயோகித்து தன் எதிர்ப்பைக் காட்டினால் மட்டுமே அதை அவர் எதிர்க்கிறார் என்று அர்த்தமில்லை. வாய்மொழியாகவே ‘இல்லை’ , ‘இதைச் செய்யாதே’ என்று சொன்னாலும் அது எதிர்ப்புதான் என்று சட்டம் நிறைவேறியுள்ளது. ஒரு பெண்ணை அவள் அனுமதியின்றித் தீண்டுவது, கிரிமினல் குற்றம் என்கிறது அந்தச் சட்டம்” என்றார் கல்பனா.

“நல்ல சட்டமா இருக்கே! நம் நாட்டிலும் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும். வினுப்பிரியா, பிரான்சினா, கருணாவின் பெற்றோர், ‘நாங்கள் போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் எச்சரித்து அனுப்பிவிட்டார்கள்’ என்கிறார்கள். இதை எங்கே போய் சொல்வது?” என்றாள் கனிஷ்கா.

“ம்… நம்ம சட்டம் மாறணும். காதலுக்கு மட்டுமல்ல, பெண்ணின் ‘மறுப்பு’க்கும் மரியாதை கொடுக்க ஆண்கள் கத்துக்கணும்” என்றார் கமலா பாட்டி.

“சென்னை சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கிய அம்சவேணி, நளினி இருவரையும் நம் சார்பாகப் பாராட்டிடலாம்!’’ என்று கல்பனா பேச்சின் பாதையை மாற்ற, கமலாவும் கனிஷ்காவும் கைதட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

“சவுந்தர்யா ரஜினிகாந்த் பிரச்சினை தெரியுமா?”

“விவாகரத்து பிரச்சினையா?”

“அது அவங்க தனிப்பட்ட விஷயம். விலங்குகள் நல வாரியத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதற்கு எழுந்த எதிர்ப்பு பற்றிச் சொல்ல வந்தேன்” என்று நிறுத்தினார் கமலா பாட்டி.

“ஓ... ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான அமைப்பின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டது அதிருப்தி அளிப்பதாகத் தமிழர் வீர விளையாட்டு மீட்புக் குழு சொல்லியிருக்கே... அதுவா பாட்டி?’’

“ஆமாம்… திரைப்படங்களில் மிருகங்களை வைத்து, காட்சிகளைப் படமாக்கியுள்ளனரா என்பதை உறுதிசெய்வது மட்டுமே சவுந்தர்யாவின் வேலை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.”

“இப்போ ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் விவாகரத்துதான் பரபரப்பா பேசப்பட்டு வருது. ‘எங்கள் குழந்தைகளின் நலன் கருதியே பிரிய முற்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்களது தனிப்பட்ட விவகாரத்தில் ஊடகங்கள் தலையிடாமல் இருக்குமாறு வேண்டுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் பிராட் பிட்.”

“எவ்வளவு சொன்னாலும் பிரபலங்களை மீடியாக்கள் விடுவதில்லை” என்ற கல்பனா, சாப்பிட்டதற்குப் பணம் கொடுத்தார்.

மூவரும் மூன்று திசைகளில் கிளம்பினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்