விவேகானந்தர் கண்ட பெண் சிங்கம்

By என்.ராஜேஸ்வரி

தியாகராய நகர் பனகல் பூங்கா அருகில் இருக்கும் சாரதா வித்யாலயா என்னும் பள்ளியைப் பல முறை கடந்து சென்றிருப்பீர்கள். பெண் கல்வி, விதவைகள் மறுவாழ்வு முதலான வரலாற்று நிகழ்வுகளுடன் இந்தப் பள்ளிக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் பள்ளியைத் தொடங்கியவர் 1886ஆம் ஆண்டு பிறந்த ஆர்.எஸ். சுப்புலட்சுமி என்னும் புரட்சியாளர். இவர் செய்த புரட்சியின் முக்கிய ஆயுதங்கள் பாடப் புத்தகங்கள்.

சிறு வயதிலேயே கல்யாணம், விருப்பத்தைக் கேட்காமலேயே திருமணம், இள வயதிலேயே விதவைக் கோலம், சாகும்வரை விலக்கி வைக்கப்பட்ட வாழ்வு… இப்படிப்பட்ட வாழ்வை வாழும்படி பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட காலத்தில்தான் (1886) ஆர்.எஸ். சுப்புலட்சுமி பிறந்தார். கல்வியின் மூலம் விதவைகள் மறு வாழ்வு, என்னும் லட்சியத்துக்காக அயராமல் பாடுபட்ட இவரை விவேகானந்தர் தீர்க்க தரிசனத்தில் கண்ட பெண்ணாகவே தான் காண்பதாக ராமகிருஷ்ணா மடம் நடத்தும் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியர் வினுதானந்தா கூறுகிறார்.

சென்னைக்கு வந்த விவேகானந் தரிடம் விதவைகளின் அவல நிலை பற்றிக் கேட்டபோது அவர், “இந்த நிலையை மாற்ற பெண் ஒருவர் தமிழகத்தில் தோன்றுவார்” எனக் கூறியதை வினுதானந்தா நினைவுகூர்கிறார்.

சுப்புலட்சுமியின் உடன் பிறந்தவர்களின் சந்ததியைச் சேர்ந்த நித்யா பாலாஜியும் காவேரி பரத்தும் சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆர்.எஸ். சுப்புலட்சுமி அந்நாளில் ஆசாரமான குடும்பம் என்று அழைக்கப்பட்ட குடும்பமொன்றில் பிறந்தவர். அப்பா சுப்பிரமணிய ஐயர், அம்மா விசாலாட்சி. ஐந்து பெண் குழந்தைகள் பிறந்த இக்குடும்பத்தில் சுப்புலட்சுமிதான் மூத்த மகள்.

இவருடைய தந்தை அந்தக் காலத்திலேயே பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். தன் பெண்களைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே படிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இந்த நேரத்தில் ஒன்பது வயது சுப்புலட்சுமிக்கு அவருக்கே தெரியாமல் கல்யாணம் நிச்சயமானது. இந்தக் கல்யாணம் நடந்ததுகூடத் தனக்கு நினைவில் இல்லை என்று பின்னாளில் எழுதிய சுய வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய கணவர் திருமணமான இரண்டே மாதத்தில் இறந்துவிட்டார். சுப்புலட்சுமி ஒன்பது வயதில் விதவையானாள்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவளைக் கட்டிக்கொண்டு அழுவார்களாம். ஏதும் புரியாமல் அந்தச் சிறுமி விழிப்பாளாம். அக்கால வழக்கப்படி தலை முடியை நீக்கி, நார்ப் புடவை உடுத்தி, நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு உண்டு, ஊரார் கண்ணில் படாமல் வாழ வேண்டும் என்று அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் வற்புறுத்தத் தொடங்கிவிட்டார்கள். இதை விரும்பாத அவருடைய பெற்றோர், குறிப்பாக தந்தை, சுப்புலட்சுமியைப் படிக்க வைத்தார்.

கல்வி என்னும் போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்ட சுப்பு லட்சுமி, சைதாப்பேட்டையில் இருந்து ஜட்கா வண்டியில் மற்ற மாணவிகளுடன் பள்ளி செல்லத் தொடங்கினார். கலர் புடவை கட்டிக்கொண்டதோடு, படிக்கவும் சென்றதால் அவருடைய தந்தையைச் சமூகம் கடுமையாகச் சாடியது. உறவினர் வீட்டுத் திருமணங்கள் மட்டுமல்ல, உடன் பிறந்த தங்கைகள் திருமணங்களில்கூடக் கலந்துகொள்ள சுப்புலட்சுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சுப்புலட்சுமி மனம் தளராமல் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிக்குச் செல்லும்போது குடையால் முகத்தை மறைத்துக்கொண்டும், உடலின் எந்தப் பகுதியும் வெளியில் தெரியாமல் மறைத்துக்கொண்டும் செல்வாராம். இளம் விதவை எப்படி இருப்பாள் என்பதைப் பார்க்க மாணவர்கள் வரிசை கட்டி நின்று வேடிக்கை பார்ப்பார்களாம். இவற்றைப் பொருட்படுத்தாமல் கல்லூரிக்கு வந்துகொண்டு இருந்தவருக்கு, ஆசிரியர்களின் போக்கு பேரிடியாக அமைந்தது.

விதவையின் முகத்தைப் பார்ப்பதுகூட பாவம் என்ற கருத்தைக் கொண்டிருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது இவரது முகத்தைப் பார்க்க மாட்டார்களாம். கணக்குப் பாடத்தில் சந்தேகம் வந்து விளக்கம் கேட்கப் போனால் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்களாம். இதனால் கணக்குப் பாடத்தில் தோற்றுப் போனார்.

அப்பாவின் அறிவுரையால், இரண்டு பெண்கள் இருந்த தாவர வியல் பிரிவினை எடுத்துக்கொண்டார். இத்துறையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, மெட்ராஸ் பிரசிடன்சியில் முதல் இந்து பட்டதாரி மாணவியாகத் தேர்வு பெற்றார். இதனால் ஏற்பட்ட புகழ் காரணமாகப் பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர் பணிக்கு அழைப்பு வந்தது.

ஆனால் வேலைக்குப் போவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அவருக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. ஊரில் உள்ள பால்ய விதவைகளுக்க் கல்வி அளித்து, அவர்களை ஆசிரியர்களாக்க வேண்டும் என்பதே அது.

கல்வியே ஆயுதம்

திருவல்லிக்கேணியில் ஒரு இடத்தை எடுத்துக்கொண்டு அங்கு பால்ய விதவைகளுக்குக் கல்வி முதலான பல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். விதவைகள் சாலையில் செல்லும் போது பார்த்துவிட்டால் அபசகுனம் என்று ஒதுக்கும் சமுதாயம் ஒருபுறம், வம்பிழுக்கும் ஆண்கள் கூட்டம் மறுபுறம் என்ற துன்பங்களுக்கு இடையில்தான் தனது பணியை சுப்புலட்சுமி தொடர்ந்து செய்து வந்தார். இவரது பள்ளியில் மாணவியர் சேர்க்கை மெள்ள மெள்ள வளர்ந்தது.

இதில் ஒரு மாணவிக்கு மருத்துவ ராக வேண்டும் என்று ஆசை. ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே. தன் மாமனார், மாமியார், தான் எப்போது வந்து கேட்டாலும் வாங்கிய வரதட் சணையைத் திருப்பித் தருவதாகச் சொல்லி இருப்பதால், அவர்களைத் தொடர்புகொண்டு பணம் பெற்றால் மருத்துவப் படிப்பு படித்துவிடலாம் என்று சுப்புலட்சுமியிடம் அந்தப் பெண் கூறினார்.

ஆனால் அந்த மாணவியிடம் அவர்களது முகவரி இல்லை. இறந்த கணவர் பெயர் தெரியாது. மாமனார் பெயரும் தெரியாது. இவளது பெற்றோரும் காலமாகிவிட்டனர். இவளது ஒன்றுவிட்ட சகோதரன் காவல்துறையில் வேலையில் இருக்க, அவரைக் கொண்டு, மாமனாரைக் கண்டுபிடித்துச் செய்தி அனுப்பினார்கள். அவர்கள் உடனடியாக வந்து பண உதவி செய்தார்கள்.

பின்னாளில் தில்லியில் மருத்துவம் முடித்து இங்கிலாந்தில் மருத்துவப் பயிற்சி பெற்ற அவர்தான் பல அரசு மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணி புரிந்த பிரபல டாக்டர் அலங்காரம்.

விதவைகள் மட்டுமல்ல, திருமணத்தில் விருப்பமில்லாத பெண் களும் சுப்புலட்சுமியின் இயக்கத்துடன் இணைந்து கல்வி கற்க விருப்பம் தெரிவித்தனர். இவர்களுக்காக சாந்தா மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியைத் தொடங்கினார். அது பிறகு ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கப் பட்டது. அதுதான் இன்றைய தியாகராய நகர் சாரதா வித்யாலயா பள்ளி.

பெண்களுக்கான கல்லூரி வேண்டும் என சுப்புலட்சுமியும் வேறு சிலரும் அரசாங்கத்திடம் விண்ணப் பித்துக்கொண்டார்கள். அதையடுத்து, இன்று நாம் காணும் சென்னை குயின்ஸ் மேரி கல்லூரி தோன்றியது. அந்தக் கல்லூரி தற்போது நூற்றாண்டு கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்படும் கட்டடத்தில் விதவைப் பெண்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் ஆதரவும் மகத்தானது. “விவேகானந்தர் கண்ட பெண் சிங்கமான சுப்புலட்சுமி பால்ய விதவையான அவரது சித்தியின் உதவியுடன், விதவைகளின் கல்வி வளர்ச்சிக்கான பணிகளைக் கவனித்து வந்தார். விவேகானந்தர் இல்லத்தில் அப்போது தங்கி இருந்த அனைத்து பால்ய விதவைகளுக்கும் காவலாகச் சித்தி வெளி வராண்டாவில் தங்கியிருந்தார். அவரது நினைவாக இன்றும் அந்த இடம் சென்னை விவேகானந்தா இல்லத்தில் சித்தி வராண்டா என்றே பெயர் தாங்கி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

கருத்துப் பேழை

12 mins ago

சுற்றுலா

49 mins ago

சினிமா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்