பெண் குழந்தைப் போற்றுதும்: பெண்களின் நலமே நாட்டின் நலம்

தேசியப் பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24

அறிவியல் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னேற்றப் பாதையில் நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும் பெண் குழந்தை பிறந்தால் பலரும் கொண்டாடுவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது தேர்ச்சி விகிதம் அதிகம் பெறுவது பெண்கள்தான். ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு பெற்றவர்களில் ஆண்களைவிடப் பெண்கள் குறைவு. பெண் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு கொடுக்க இந்தச் சமூகம் மறுக்கிறது.

தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி 33% பெண் குழந்தைகள் எடையும் வளர்ச்சியும் குறைவானவர்களாக இருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைக்காததே இதற்குக் காரணம்.

உலகில் பெண் குழந்தை திருமணம் அதிகம் நடக்கும் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் எழுபது கோடி பெண் குழந்தை திருமணம் நடக்கிறது. அதில் 33% இந்தியாவில் நடைபெறுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பப்படும் பெண் குழந்தைகளுக்கு, 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 940 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர். பெண் குழந்தைகள் என்றாலே செலவு என்று நினைப்பதும் கருவிலேயே பெண் குழந்தைகளை அழிப்பதும்தான் இதற்குக் காரணம்.

இந்தியாவில் 34% வளரிளம் பெண்கள் (15-19 வயதுக்குட்பட்ட) தன் கணவனாலோ மற்றவர்களாலோ பாலியல் வன்முறைக்குப் பலியாகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நம் நாட்டில் 70% பெண்கள் கர்ப்ப காலத்தில் ரத்தசோகையால் பாதிக்கபடுகிறார்கள். பெண் குழந்தைகளின் குழந்தைப் பருவம் சரியாகப் பாதுகாக்கப்படாததும் இதற்குக் காரணம்.

தேசிய அளவில் 14 வயதுக்குக் குறைவான 85 ஆயிரம் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண்களில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் திருமணம் ஆனவர்கள். 18 வயதுக்கு முன் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதால் அவர்கள் உடலும் மனமும் பாதிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளாததன் வெளிப்பாடுதான் இதுபோன்ற திருமணங்கள்.

ஆண் - பெண் பாலின விகிதம் சமமாக இல்லாத நம் நாட்டில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் உடல் ஆரோக்கியம், மன நலம் , கல்வி, சிறந்த வாழ்க்கை போன்றவை ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்படும் ஒரு தினம்தான் தேசியப் பெண் குழந்தைகள் தினம். 2009-ம் ஆண்டு முதல் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில் பெண் குழந்தைகளின் நலம் மற்றும் உரிமையைக் காக்கும் நோக்கத்துடன் ஜனவரி 24-ம் தேதி இது அனுசரிக்கப்படுகிறது.

தடுப்பது எப்படி?

பாலினம் கண்டறிதல் தடுப்புச் சட்டம் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT) Act, 1994) பற்றிய விழிப்புணர்வை மருத்துவர்கள், பொதுமக்கள் மத்தியில் அரசு ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திலும், கல்வி அறிவு குறைவான குடும்பத்திலும் உள்ள பெண் குழந்தைகளுக்குத்தான் சிறுவயதில் திருமணம் செய்துவைக்கிறார்கள். பெண் குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம் பற்றிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும் .

பெண் குழந்தைகள் திருமணம் நடப்பது குறித்து அறிந்தால் குழந்தைகள் உதவி எண்ணுக்குத் (1098) தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும்

பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். தமிழக அரசு செயல்படுத்திவரும் அனைத்து வகையான குழந்தைகள் ஊட்டச் சத்து திட்டத்தை ஆசிரியர்களும் சமூக நலத்துறையும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். பெண் குழந்தை சமூகத்தை ஊட்டச்சத்து மிக்க சமூகமாக உயர்த்தினால் நாளைய இந்தியாவின் தாய் சேய் நலம் காக்கப்படும்.

கட்டுரையாளர், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்