சீறிப் பாயும் சிலம்புப் பெண்கள்

By இரா.கோசிமின்

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பெண்மை என்றால் மென்மை என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமோ தெரியவில்லை. ஆனால் நுண்கலைகளில் மட்டுமல்ல, வன்கலைகளிலும் பெண்கள் அசத்தத் தொடங்கிவிட்டார்கள். சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றும் மதுரை கல்லூரி மாணவிகளைப் பார்க்கும் போது, சீறிப்பாயும் காளைகளை அடக்கக் கிளம்பிய வீராங்கனைகளாகவே தெரிகிறார்கள்.

முற்காலத்தில் போர்க்கலையாக இருந்த சிலம்பம் நாளடைவில் கிராமங்களில் நடைபெறும் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் விளையாட்டாகவும் இடம் பெற்றது. பொதுமக்கள் வட்டமாகச் சுற்றியிருக்க அவர்களுக்கு நடுவில் சிலம்பாட்ட வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால் காலப்போக்கில் சிலம்பம் மீதான ஆர்வம் மக்களுக்குக் குறைந்துவிட, அருகிவரும் கலைகளில் இதுவும் இடம்பிடித்துவிட்டது. சில கிராமங்கள் மட்டுமே பாரம்பரிய கலையான சிலம்பத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

தமிழர்களின் வீரக்கலையாக இருந்த சிலம்பாட்டத்தை இன்று ஆண்களே மறந்துவிட்ட நிலையில் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் 30 பேர் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினமும் காலை சுமார் 2 மணி நேரம் கல்லூரி வளாகத்தில் கம்பைச் சுழற்றிப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.

சிலம்பக் கலைப் பயிற்சியாளரான ஷேக் உஸ்மான், “சிலம்பத்தில் நடனம், விளையாட்டு என எந்தக் கலைக்கும் இல்லாத சிறப்பு உண்டு. சிலம்பம் என்பது மரம் என்றால் கராத்தே, ஜூடோ ஆகிய கலைகள் அதன் கிளைகள். சிலம்பம் என்பது கம்பை வைத்து மட்டும் விளையாடுவதல்ல. சுருள் வாள், ஈட்டி, சங்கிலி, மான் கொம்பு வைத்தும் இதை விளையாடலாம். சிலம்பத்திற்கு அடிவரிசை, ஏழு காலடி வரிசை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர் உண்டு. அதுபோல, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கர்நாடக வரிசை, கரடிகை, புலிக்காவடி, பனையேறி மல்லு, அய்யங்கார் வரிசை என கம்பைச் சுழற்றுவதில் பல்வேறு வகைகள் உண்டு. சிலம்பம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த கலையைப் பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதுவே நம் மண்ணின் கலையைக் காப்பாற்றுவதற்கான வழி” என்றார்.

சிலம்பத்தைச் சுழற்றி முடித்த மாணவிகளோ, “சிலம்பத்தைத் தற்காப்புக் கலையாக மட்டும் பார்க்க முடியவில்லை. இதில் விளையாட்டு, நடனம் என அனைத்தும் அடங்கியிருப்பதால் ஒவ்வொரு பயிற்சிக்கும் தனியாக எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று ஒரே குரலில் சொல்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்