இல்லம் சங்கீதம் 27: உறவுக்கு உலைவைக்கும் ‘ஈகோ’

By எஸ்.எஸ்.லெனின்

அந்தரங்கத் தருணங்களை

அதன்பொருட்டான வார்த்தைகளை

சண்டைகளில் மீட்டெடுத்து

சந்தியில் உலர்த்துகையில்

காய்ந்துபோவது காதலென்று

இவர்களுக்கேன் தெரிவதில்லை?

- பி.கே.சிவக்குமார்

இணக்கமான உறவுகளைச் சிதைப்பதில் ஈகோ எனப்படும் தன்னகங்காரத்துக்கு முக்கிய இடம் உண்டு. பணிபுரியும் இடம், நண்பர் குழு, உறவு வட்டம் போன்றவற்றில் தலைவிரித்தாடும் சிலரின் ஈகோவால் எத்தனையோ பேர் நல்லுறவு இழந்து தவிக்கிறார்கள். தனித்துவ உறவான கணவன்-மனைவி உறவும் ஈகோவிடம் தப்பிப் பிழைப்பதில்லை.

அமைதியைக் காவு வாங்கும் அகங்காரம்

பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள். இப்படியான பெற்றோரால் குழந்தைகள் இயல்பு கெட்டு, படிப்பு சிதறி, மனச்சிதைவுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

ஈகோ நல்லது?

வழக்கில் ஈகோ என்பதைத் ‘தன் அகங்காரம்’ என்ற பொருளில் அடையாளப்படுத்துகிறோம். பணம், பதவி, அழகு, செல்வாக்கு, அறிவு உட்படப் பல தன்னிடம் அதிகம் இருப்பதாக உணரும் நபர், ஆணவம், திமிர், கர்வம், மமதை உள்ளிட்டவற்றுடன் செயல்படுவதான குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார். இவர்கள் தம்மைப் பற்றியே சிந்திப்பதும் அதன் அடிப்படையிலே செயல்படுவதுமாக இருப்பார்கள். சுயநலமும் வறட்டு கௌரவமும் இவர்களது அடையாளங்கள். இவை அனைத்துமே ஈகோ எனச் சுலபாக முடித்துவிடுகிறோம். ஆனால், உளப் பகுப்பாய்வு அறிவியல் ஈகோவுக்கு இவ்வளவு எதிர்மறை அர்த்தம் தருவதில்லை.

“மனோதத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு முன்வைத்த மனத்தின்வழி செயல்படுத்தப்படும் ஆளுமைக் கட்டமைப்பின் மூன்று நிலைகளில் ஒன்றாக ஈகோ வருகிறது. முதல் நிலையான ‘இத்’(Id) என்பது தன்னெழுச்சியானது. நல்லதோ கெட்டதோ விரும்பியதைப் பெற ‘இத்’ விழையும். மனத்தின் கட்டற்ற விருப்பமாக இது வெளிப்படத் துடிக்கும்.

மூன்றாம் நிலையான ‘சூப்பர் ஈகோ’ நன்னெறி, சமூக நெறிகள் ஆகியவை வகுத்த கோட்பாடுகளின் கீழ் செயல்படுவதை ஆதாரமாகக் கொண்டிருக்கும். இந்த இரண்டுக்கும் இடையே ‘இத்’தின் உத்வேகத்தை, ‘சூப்பர் ஈகோ’வைக் கொண்டு பண்படுத்துவதுடன் யதார்த்தம் சார்ந்த சமரசமான தீர்வுக்கு நகர இரண்டாம் நிலையில் இருக்கும் ‘ஈகோ’ உதவுகிறது. மூன்று வயதுக்குப் பிறகு ‘ஈகோ’, நம்முடன் சேர்ந்தே வளர ஆரம்பிக்கும். உளவியலில் ஈகோவின் பங்கு நேர்மறையானது. ஆனால், நடைமுறை வாழ்வில் இந்த ஈகோ மாசுபாடுகளுடன் வளர்ந்து நிற்கிறது” என்கிறார் மருத்துவ உளவியல் நிபுணரான பா.சுஜிதா.

 

கசக்கும் வாழ்க்கை

மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.

கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.

செருக்கை அறுத்து உறவை வளர்ப்போம்

கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

ஈகோவால் தாக்குண்டவர், எதிர்வினையாகத் தனது ‘மட்டுக்கு மீறிய தன்னம்பிக்கை’யை உசுப்பிவிடுவார். அவர் எழுப்பும் தற்பெருமைகளின் பட்டியல் சந்தடியில் வாழ்க்கைத் துணையைப் பதிலுக்கு சதாய்க்கும். இப்படி இருவருக்கும் இடையே வளரும் செருக்கின் போக்கு, மூன்றாம் நபர் முன்பாக வெளிப்படும்போது நிலைமை கைவிட்டுப்போகும். ஆரோக்கியமான உறவில் அந்தரங்கமாய் விழும் காயங்களைவிட, மற்றவர்கள் முன்பாக எழும் சிறு சிராய்ப்பும் பின்னாளில் உறவுக்கே உலைவைப்பதாக மாறும்.

பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.

இறையைப் போலவே இயற்கையும் அதன் பிரம்மாண்டத்துக்கு முன்பாக மனித செருக்குகளை அற்பமென உணர்த்திவிடும். அதனால் தம்பதியர் ஆன்மிக தலங்களுக்கும் இயற்கை செழித்த இடங்களுக்கும் சென்று வரும்போது கிடைக்கும் பலாபலன்களில் ஈகோ அழிப்பும் அடங்கும். அதே போல தாம்பத்திய உறவும் ஈகோவை அழிக்கும். ஈகோ இருப்பவர்களுக்கு இடையே தாம்பத்திய உறவு தள்ளாடுவதற்கும் ஆத்மார்த்தமான உறவில் கலப்பவர்களுக்கு இடையே ஈகோ இல்லாததற்கும் இதுவே காரணம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

50 mins ago

க்ரைம்

56 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்