முகங்கள்: வேலையும் சேவையும் ஒன்றே

By எல்.ரேணுகா தேவி

பல நூறு முகங்கள், பல்வேறு மொழிகள் என இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். தினமும் அலையலையாகக் குவிந்தபடி இருக்கும் பயணிகள் கூட்டத்துக்கு நடுவே தொலைந்துபோகிறவர்களும் வழிதெரியாமல் தடுமாறி உறவினர்களைத் தொலைக்கிறவர்களும் உண்டு.

புதிய ஊரில் கையில் பணம் இல்லாமல் எங்குச் செல்வது எனத் தெரியாமல் தவிக்கும் பெண்களுக்குத் தங்களுடைய அன்றாட வேலையையும் தாண்டி சேவை மனப்பான்மையுடன் உதவிவருகிறார்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து மகளிர் பயணிகள் சேவை மைய ஊழியர்கள்.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்குக் குறைந்தது பத்தாயிரம் பயணிகளாவது வந்து செல்கின்றனர். தினமும் 85 ரயில்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றன. எள் போட்டால் எண்ணெய்யாகிவிடும் கூட்டத்தைத் தங்களுடைய அறிவிப்பால் வழிநடத்துகிறார்கள் அனைத்து மகளிர் பயணிகள் சேவை மையத்தில் உள்ள அறிவிப்பாளர்கள். 

வண்டிகளின் புறப்பாடு, எந்த நடைமேடைக்கு எத்தனை மணிக்கு ரயில் வரும் என்பதைத் தெரிவிக்கிறார்கள். இந்த மையத்தின் முதன்மை வேலை இது என்றபோதும் அதோடு மட்டும் இவர்கள் நின்றுவிடவில்லை. இவர்களோடு ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் ஊழியர்கள், பெண் டிக்கெட் பரிசோதகர் என ரயில்வேயின்  மூன்று பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த மையத்தில் பெரும்பாலும் பெண் ஊழியர்கள் இருப்பதால் தாய்மார்களுக்காகக் குளிர்சாதன வசதியுடன் கூடிய பாலூட்டும் அறையும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது.

பிரிந்தவர்கள் சேர்ந்தார்கள்

இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 13 ஊழியர்கள் தங்களுக்குள் குழுவாக இணைந்து பாராட்டத்தக்க மகத்தான பணியையும் செய்துவருகின்றனர். ரயில் நிலையத்தில் வழிதவறி வரும் பெண்கள், கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், யாருடைய துணையும் இல்லாமல் ரயில் நிலையத்தில் கைவிடப்படும் வயதான பெண்கள் போன்றோரைக் கண்டறிந்து அவர்களை உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

அல்லது ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பின் கீழ் விடுதிகளில் தங்கவைப்பதற்கான நடவடிக் கையை மேற்கொள்கிறார்கள். “வருடத்துக்கு 50-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டிருக்கிறோம்” என்கிறார் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் செந்தாமரைச்செல்வி.

பெண் ஊழியர்களிடம் நாம் பேசிக்கொண்டிருந்தபோது காசி யாத்திரைக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிய வயதான தம்பதியினர் வழிதவறி ரயில் நிலையத்திலிருந்து வேறு வேறு திசை நோக்கிச் சென்றுவிட்டனர். தன் மனைவியைக் காணவில்லை எனப் பதற்றத்துடன் சேவை மையத்தை அணுகிய அந்த முதியவருக்கு உடனடியாக உதவ களத்தில் இறக்கினார்கள் ஊழியர்கள்.

ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி  கேமராவைப் பார்த்து அவருடைய மனைவி எந்தப் பக்கம் சென்றார் என ஆராய்ந்து அடுத்த சில மணி நேரத்தில் இருவரையும் ஒன்றுசேர்த்ததைப் பார்த்தபோது  நெகிழ்ச்சியாக இருந்தது.

“கணவரிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்ட பெண் ஒருவர் அடுத்து எங்கே செல்வதெனத் தெரியாமல் ரயில் நிலையத்தில் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரித்தோம். அவரிடமிருந்து விவரங்களைச் சேகரித்து அவருடைய கணவரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தோம். அதேபோல் ஒருநாள் அரக்கோணம் ரயிலில் இளம் பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு  உடையிலேயே சிறுநீர் கழித்து மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

பயணிகள் கொடுத்த தகவலையடுத்து அந்தப் பெண்ணை மீட்டோம். ரயில் நிலையத்தில் எந்த ஆதரவும் இல்லாமல் போர்வையில் முடங்கியிருந்த ஒரு பெண் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தவரை மீட்டு அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தொண்டு நிறுவனத்தை அணுகினோம். அந்தப் பெண் உடல்நலம் தேறியதும் அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தோம்” எனத் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களை சேவை மைய ஊழியர்கள் பகிர்ந்துகொண்டனர்.

“வீட்டில் இருந்தால்தான் பிரச்சினை. அதற்குப் பதில் வெளியே எங்கேயாவது சென்று பாதுகாப்பாக இருந்துவிடலாம் என நினைக்கும்போது அவர்களுக்கு முதலில் தோன்றும் இடம் ரயில் நிலையம்தான். இங்கு ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும் அவர்கள் இங்கேயே பாதுகாப்பாகத் தங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், வீட்டைவிட வெளியேதான் பிரச்சினைகள் அதிகம். பெண் குழந்தைகளும் பெண்களும் அதிகமாகக் கடத்தப்படுவதை நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம்தானே.

தவிர வெளியிடங் களில் பெண்களுக்கு என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் நடைபெறும் என்பதை ஊகிக்கவே முடியாது. இங்கு நாங்கள் பல பெண்களை அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்துதான் மீட்டோம். மேலும், சில பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்துகொள்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்கிறார் செந்தாமரைச்செல்வி.

இவர்கள் சொல்கிற அனுபவங்களைப் பார்க்கும்போது வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிற பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பது எளிதல்ல என்றே தோன்றுகிறது. அதையும் மீறிப் பாதுகாப்பற்ற சூழலில் சிக்கிக்கொள்ளும் பெண்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை அளிக்கிறார்கள் இந்த மகளிர் குழுவினர்.

தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டுஎன்ற சின்னதொரு கடுகு உள்ளத்திலிருந்து விலகி, சக மனிதர்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டி அதற்காகவே நேரம் ஒதுக்கிச் செயல்படும் அனைத்து மகளிர் பயணிகள் சேவை மைய பெண் ஊழியர்கள் வியக்கவைக்கிறார்கள்.

படங்கள்: பு.க.பிரவீன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

36 mins ago

வணிகம்

51 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்