பெண் குரல்: கறுப்பு ஆடுகளை என்ன செய்வது?

By செய்திப்பிரிவு

பிப்ரவரி 24 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் இடம்பெற்ற, ‘பெண்ணுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லையா?’ என்ற கட்டுரை பலவற்றை உணர்த்தியது. நன்றாகப் படித்த, வசதியான பின்புலம்கொண்ட கமலா சோஹோனியே அறிவியல் ஆய்வுப் படிப்பில் போராடித்தான் சேர்ந்திருக்கிறார் என்பதே பெண்களின் நிலையைச் சொல்லிவிடுகிறது.

85 ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய, ‘பெண்களை ஆய்வுப் படிப்பில் சேர்த்தால் ஆய்வகத்தில் பயிலும் ஆண்களின் கவனம் சிதறக்கூடும்’ என்ற கற்பிதத்துக்கும் இப்போதைய நவீன யுகத்தில், ‘மாணவிகள் கொலுசு அணிந்துவருவதால் மாணவர்களின் கவனம் சிதறும்’ என்ற அமைச்சரின் ‘கண்டுபிடிப்பு’க்கும் பெரிய வித்தியாசமில்லை. காலம் மாறினாலும் பெண்ணைப் பற்றிய கற்பிதங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

- எல்.துர்காதேவி, காட்டூர், திருச்சி.

அறிவியலில் மட்டுமல்ல; தாங்கள் விரும்பும் எந்தத் துறையிலும் உயர்நிலையை அடையப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைக்கற்கள் ஏராளம். என் தோழியின் பேத்தி தைரியமானவள், புத்திசாலி. பேத்தியைக் காவல்துறையில் உயரதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்பது என் தோழியின் ஆசை. ஆனால், அந்தப் பெண்ணின் பெற்றோரோ தங்கள் மகள் காவல் துறையில் சேர்ந்தால் பல்வேறு வகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுமோ எனப் பயந்தனர்.

காவல் துறையைச் சேர்ந்த விஷ்ணுப்பிரியாவின் மரணமும் அவர்களது தயக்கத்துக்குக் காரணம். மற்றொரு கசப்பான சம்பவமும் எங்களை வேதனையில் ஆழ்த்தியது. என் பேத்தியின் தோழியினுடைய அக்காவுக்கு முனைவர் பட்டம் பெறுவதே லட்சியம். அதற்காகத் தன் பெற்றோரிடம் சம்மதம் பெற்று, முனைவர் பட்டம் பெற்ற ஒருவரை ஆய்வு வழிகாட்டியாகத் தேர்வுசெய்தார்.

ஆய்வு வழிகாட்டியின் பேச்சு ஆரம்பத்திலிருந்தே அநாகரிகமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் அவரது செயல்பாடுகள் எல்லைமீறத் தொடங்கின. தன் விருப்பத்துக்கு இணங்க மறுத்தால் இரண்டு

வருட ஆய்வை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடப்போவதாக அந்தப் பெண்ணை ஆய்வு வழிகாட்டி மிரட்டியிருக்கிறார். அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தன் வாழ்க்கையையே முடித்துக்கொண்டாள். ஆய்வு மாணவிகளிடம் எல்லை மீறும் ஆய்வு வழிகாட்டிகளைப் பற்றிப் பல்கலைக்கழக மாணவிகள் ‘#மீடூ’ பரப்புரையை முன்னெடுத்ததையும் மறக்க முடியாது.

அறிவியல் துறையில் மட்டுமல்ல; எல்லாத் துறைகளிலுமே பெண்களின் உயர்நிலையை இவர்களைப் போன்ற சில கறுப்பு ஆடுகள் கேள்விக்குறியாக்கிவிடுகின்றனர். இந்த நிலை மாறினால்தான் பெண்கள் சாதிக்க முடியும்.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

44 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்