பெண்கள் 360: எளிமையான எழுத்தின் அரசி

By முகமது ஹுசைன்

பிரேசிலில் வாழ்ந்த கிளாரிஸ் லிஸ்பெக்டர் 20-ம் நூற்றாண்டில் மிகவும் கொண்டாடப்பட்ட எழுத்தாளர். பிரேசிலில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் தனது எழுத்தால் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது எழுத்துநடை தனித்துவமானது. அடர்த்தியான சிந்தனைச் செறிவே அதற்குக் காரணம். கதாபாத்திரங்களின் ஆழ்மன உணர்வுகளைத் தீவிரமாக ஆராய்வதன் மூலம் வாழ்வின் அர்த்தத்தை அவர் தேட முயல்வார்.

doodle-2jpg

1920 டிசம்பர் 10 அன்று உக்ரைனில் பிறந்த அவர், யூத இனத்தைச் சேர்ந்தவர். யூதர்களுக்கு எதிரான வன்முறைகளாலும் கிளர்ச்சியாலும் அவரது குடும்பம் பிரேசிலில் குடியேறியது. ஏழு வயதிலேயே அவர் எழுதத் தொடங்கிவிட்டார். சட்டப்படிப்பு படித்தபோது நாளிதழ்களில் எழுதத் தொடங்கினார். அவரது முதல் நாவலான ‘கட்டற்ற இதயத்துக்கு அருகில்’ 23 வயதில் வெளியானது.

ஓர் இளம்பெண்ணின் தனியுரை மூலமாக அவளது உணர்வுகளை வெளிக்கொணரும் அவரது முயற்சி அந்தக் காலகட்டத்தில் வெகுவாகப் புகழப்பட்டது. நவநாகரிக வாழ்க்கையுடன் ஒட்ட முடியாமல் தவிக்கும் சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை லிஸ்பெக்டர் அளவுக்கு யாரும் பதிவு செய்ததில்லை. 1973-ல் வெளிவந்த ‘தி ஸ்டீரிம் ஆஃப் லைஃப்’ நாவலே அவரது படைப்புலகின் உச்சம்.

அவரது 85-வது நாவலான ‘பாடி ஆஃப் வொர்க்’கில் இளம் வயதிலிருந்து முதுமை வரையிலான ஒரு பெண்ணின் உள்ளுணர்வை அழுத்தமாகப் பதிவுசெய்திருப்பார். ஒருவிதத்தில் இதைச் சுயசரிதை எனலாம். இவரது 98-வது பிறந்தநாளையொட்டி கடந்த திங்கள் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

மகளிர் ஹெல்ப் லைன் 181

பெண்களுக்கு உதவுவதற்காக 181 ஹெல்ப் லைன் திட்டத்தைத் தமிழக அரசு கடந்த திங்கள் அன்று தொடங்கியது. பாலியல் சீண்டல், மன அழுத்தம், குடும்பப் பிரச்சினை, காவல் - மருத்துவ உதவி எனப் பெண்களுக்காகப் பிரத்யேக உதவி மையமாக இது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

181-க்குப் பெண்கள் போன்செய்து புகார் தெரிவித்தால், அந்தப் புகார்களின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேவையான காவல் உதவியோ மருத்துவ உதவியோ கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த எண்ணை அழைக்கலாம். 181 ஹெல்ப்லைன் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் 5,500 அழைப்புகள் இந்த மையத்துக்கு வந்துள்ளன.

இதில் 2 ஆயிரம் பெண்களுக்கு, அவர்களது பிரச்சினைகளைக் களைய  ஆலோசனை வழங்கப்பட்டது. 300 பெண்களுக்குத் தேவையான உதவிகள் உடனடியாகச் செய்யப்பட்டன.

ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் பழநியைச் சேர்ந்த கெளசல்யாவும் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 2015-ல் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாதி இந்துக்களான கௌசல்யாவின் பெற்றோர் இத்திருமணத்தை எதிர்த்தனர். 2016 மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

கௌசல்யாவுக்குக் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் சமீபத்தில் மறுமணம் நடந்தது. பறை இசை முழங்க நடந்த அந்தத் திருமணத்தில் சங்கரின் தந்தை வேலுச்சாமியும் சங்கரின் சகோதரர்களும் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். இனி, “சாதி ஒழிப்புக் களத்தில் கணவருடன் இணைந்து செயல்படுவேன். ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்றப் போராடுவேன்” என்று உறுதியுடன் கௌசல்யா கூறினார்.

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்

உலகின் செல்வாக்கு நிறைந்த ஆண்கள், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிகச் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்தார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ennamumjpgright

இந்தப் பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, கிரன் மஜும்தார் ஷா, ஷோபனா பார்தியா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகிய நான்கு இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ரோஷ்னி நாடார், சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 51-வது இடத்தில் இருக்கிறார். கிரன் மஜும்தார் ஷா 60-வது இடத்திலும், சோபனா பார்தியா 88-வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 94-வது இடத்தைப் பிடித்தார்.

எண்ணமும் சொல்லும்: ஆண்களுக்கும் பரிந்துரையுங்கள்

ஹானா இயோ (Hannah Yeoh) மலேசியாவின் மகளிர், குடும்பம், சமூக வளர்ச்சி துணையமைச்சர். அலுவலகத்துக்குச் செல்லும்போது உதட்டுச் சாயம் பூசினால்தான் அவர் அமைச்சரைப் போன்று தோற்றமளிப்பார் என ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டார். அதற்கு ஹானா, “பரிந்துரைக்கு நன்றி! உதட்டுச் சாயம் பூசிக்கொள்வது எனது விருப்பம். அடுத்தவரின் கட்டாயத்துக்காக நான் சாயம் பூச வேண்டிய தேவையில்லை. முகத்துக்கு என்ன பூச வேண்டும் என்று ஆண் அமைச்சர்களுக்கு ஏன் நீங்கள் பரிந்துரைப்பதில்லை?” எனப் பதிலளித்தார். இது இணையத்தில் வைரலானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

12 mins ago

உலகம்

10 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

23 mins ago

சினிமா

29 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

54 mins ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்