வானவில் பெண்கள்: பூக்களால் மலரும் வாழ்வு

By வி.சுந்தர்ராஜ்

காலையில் அரக்கப் பறக்க எழுந்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, கணவருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் மதிய உணவைத் தயாரித்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகளை முதுகு ஒடிய முடித்துவிட்டு அப்பாடா என்று நிமிர பிற்பகல் மூன்று மணியாகிவிடும். நிதானமாக, காலை நீட்டி உட்கார்வதற்குள் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்துவிடுவார்கள். பிறகு இரவுச் சாப்பாடு, வழக்கமான வேலைகள் என  நாள்தோறும் மணிக்கணக்கில் வீட்டு வேலைகளுக்குள் புதைந்திருந்தபோதுதான் விஜியின் அறிமுகம் செளமியாவுக்குக் கிடைத்தது.

பிற்பகல் மூன்று மணிக்கு மேல் கிடைக்கும் நேரத்தில் இருவரும் பேசிக்கொள்வார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருந்த நாள் ஒன்றில்தான் இருவருக்கும் ஓர் எண்ணம் தோன்றியது. தினமும் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தைப் பொன்னான நேரமாக மாற்ற முடிவுசெய்தனர். இருவரது குடும்பமுமே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவை என்பதால் தங்கள் பொருளாதாரப் பலத்துக்கு ஏற்ற வகையில் ஏதாவது செய்யலாம் என யோசித்தனர்.

விஜியின் கணவர் சங்கரநாராயணன், ரோட்டரி கிளப்பில் இருந்ததால் மாதந்தோறும் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்குத் தருவதற்காகப் பூங்கொத்து வாங்கச் சிரமப்பட்டிருக்கிறார்.  கும்பகோணத்தில் பூங்கொத்து கிடைக்காததால் பக்கத்து ஊர்களுக்குச் சென்று வாங்க வேண்டியிருந்தது. வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலைசெய்ய நினைத்த தோழிகளுக்குப் பூங்கொத்து செய்யும் தொழில் குறித்து அவர் சொன்னார்.

முன்மொழியப்பட்ட யோசனையை வழிமொழிய விஜியும் சௌமியாவும் விரும்பினர். பூங்கொத்து செய்வதற்கான பயிற்சியை மதுரையில் பயின்றனர்.

16 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஆரம்பித்ததுதான் இவர்களது வியாபாரம். பிற்பகலில் கிடைத்த ஓய்வு நேரத்தில் சின்ன சின்னப் பூக்களை வைத்துப் பூங்கொத்து செய்யத் தொடங்கி, இன்று கும்பகோணம் பகுதியில் ‘பொக்கே’ என்றாலே செளமியாவையும் விஜியையும் தேடிவரும் அளவுக்குப் பிரபலமாகியுள்ளனர்.

கும்பகோணம் மட்டுமில்லாமல் சென்னைக்குக்கூட இவர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் பொக்கே வாங்கிச் செல்கின்றனர். அந்த அளவுக்குத் தொழில் நேர்த்தி யுடனும் விதவிதமான வடிவமைப்பு களுடனும் பூங்கொத்து செய்கின்றனர்.

புதுத் தொழில் தொடங்கிய தோழிகள்

கும்பகோணம் டபீர் நடுத்தெருவைச் சேர்ந்த செளமியா, நகராட்சிக் கவுன்சில ராக இருந்தவர். இதனால் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் இவர்களுக்குக் கிடைத்தது.  பிறகு இவர்கள் உருவாக்கும் பூங்கொத்துகளின் நேர்த்தி, வாடிக்கையாளர்களின் எண்ணிக் கையை அதிகரித்தது. பூங்கொத்துகளை மட்டுமே உருவாக்கி வந்த செளமியாவும் விஜியும் இன்று விழா ஏற்பாட்டாளர்களாக முன்னேறியிருக்கின்றனர்.

எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் வாழை மரம் கட்டுவதில் தொடங்கி பலூன் அலங்காரம், மணப்பெண் அலங்காரம், கோலமிடுதல், மின் விளக்கு அலங்காரம், நாகஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தல், மேடை அலங்காரம், மணமாலையைத் தொடுத்தல், ஆரத்தித் தட்டுகள், சீர்வரிசைத் தட்டுகளை அலங்கரித்தல், உணவு ஏற்பாடு என அனைத்தையும் கச்சிதமாகச் செய்து கொடுக்கிறார்கள்.

“ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற நினைத்தோம். அப்படித்தான் பொக்கே செய்வதைத் தொடங்கினோம். 16 ஆண்டுகளாக இருவரும் ஒரே இடத்தில் இதைச் செய்துவருகிறோம்.

பொக்கேவுக்குத் தேவையான பூக்களை பெங்களூரு, ஓசூர் நகரங்களிலிருந்து தினமும் பேருந்தில் வரவழைக்கிறோம். நாங்கள் செய்யும் பொக்கே, ஒரு வாரம்வரையும் வாடாது. கும்பகோணத்தில் உள்ள வங்கிகள், அரசுப் போக்குவரத்துக் கழகம், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் எனப் பலரும் எங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருப்பதால், எங்கள் வியாபாரம் தொய்வடையாமல் இருக்கு. 50 ரூபாய் முதல் ஐந்தாயிரம் வரையிலான பூங்கொத்துகளைச் செய்து தருகிறோம். பணம் கிடைக்கிறது என்பதைவிட மனநிறைவு கிடைக்கிறது.

எங்களது பொக்கேவைப் பார்த்த பலரும்  மேடை அலங்கார மும் செய்யணும்னு கேட்டுக்கிட்டாங்க. அப்படித் தொடங்கியது தான்  மேரேஜ் காண்ட்ராக்ட் தொழில். ஆண்கள் மட்டுமே செய்துவந்த மேரேஜ் காண்ட்ராக்ட் தொழிலை நாங்க செய்யறதைப் பார்த்துப் பலரும் ஆச்சரியப்பட்டிருக்காங்க. எங்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் கிடைக்குது. கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர்னு நிறைய பகுதிகளுக்கு டோர் டெலிவரியும் செய்யறோம்” என்று இருவரும் சொல்கின்றனர்.

பெருகும் வாடிக்கையாளர்கள்

இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் வீடியோக்களைப் பார்த்து விதவிதமான பூங்கொத்து வடிவமைப்புகளை இருவரும் கற்றுக் கொள்கின்றனர். காலத்துக்கு ஏற்ப நவீன வடிவங்களில் பூங்கொத்து செய்துதருவதால் பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதுடன் புதுப்புது வாடிக்கை யாளர்களையும் இவர்கள் பெறுகிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவத்திலும் பூங்கொத்துகளை வடிவமைத்துத் தருகிறார்கள்.

தனியாகக் கடை வைத்து நடத்தாமல் வீட்டில் இருந்தபடியே இந்தத் தொழிலைச் செய்வது இவர்களது இன்னுமொரு சிறப்பு. வீட்டைக் கவனித்தபடியே தொழிலையும் தொய்வின்றித் தொடர முடிகிறது.

கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் பிரமுகர்களைச் சந்திக்கச் செல்கிறவர்கள் இவர்களிடம் பூங்கொத்துகளை வாங்கிச் செல்கின்றனர்.

“பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்குத் தருவதற்காக எங்களிடம் அதிக அளவில் பொக்கே வாங்கியிருக்கிறார்கள். அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் கும்ப கோணத்திலிருந்து தொடர்ந்து பொக்கே செய்து கொடுத்துவருகிறோம்.

ஜெயலலிதா, கூடை வடிவிலான பொக்கேவைத்தான் அதிகம் விரும்புவார். அவருக்குக் கொடுக்க நாங்க விதவிதமான பூக்களைக் கொண்டு நிறைய பொக்கே செய்து கொடுத்திருக்கோம்.

ஏதோ விளையாட்டா ஆரம்பிச்ச வேலை மாதிரி இருக்கு. இப்போ மேரேஜ் காண்ட்ராக்ட் வேலையும் செய்யறதால பொறுப்பு அதிகரிச்சிருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி எங்க குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து ஆலோசித்து எல்லாத்தையும் செய்யறோம்” என்று சொல்கின்றனர் இந்தத் தோழிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

20 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

18 mins ago

சினிமா

36 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

30 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

44 mins ago

வலைஞர் பக்கம்

48 mins ago

சினிமா

53 mins ago

மேலும்