என் பாதையில்: சாதிக் கடலில் ஒரு காதல் படகு

By செய்திப்பிரிவு

மு

ப்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். ஒன்பது ஆண்டுகளாக ஒருவரைக் காதலித்துவருகிறேன். அவரையே திருமணம் செய்ய நினைக்கிறேன். அவர், நான் பிறந்த சாதியில் பிறந்தவரல்ல. இதுதான் என் மன உளைச்சலுக்குக் காரணம்.

திருமணம் செய்துகொள்வதுதான் பிறவிப் பயனை அடைவது என்ற நோக்கத்தோடுதான் இங்கே பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணுக்கு முப்பது வயது ஆன பிறகும் திருமணம் நடக்கவில்லை என்றால் அவளைச் சுற்றியிருப்பவர்கள் தரும் நெருக்கடிகள் ஏராளம். கல்லூரியில் படித்தபோது எனக்குக் காதல் ஏற்பட்டது. படிப்பு முடிந்து வேலைக்காக வெளியூர் சென்றேன். அவ்வப்போது அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நாட்கள் நிம்மதியாகச் சென்றன. காதலை என் வீட்டில் சொல்ல நேரம் பார்த்துக் காத்திருந்தோம்.

ஒரு நாள் திருமணம் பற்றிப் பேசியபோது எங்கள் காதலை அம்மாவிடம் சொன்னேன். உடனே அவரது சாதி குறித்துக் கேட்டார்கள். மறுநாளே அம்மாவிடம் இருந்து போன். “இது நமக்குச் சரிப்பட்டு வராது, விட்டுவிடு” என்றார். அடுத்த சில மாதங்களில் எனக்குப் பல வழிகளிலும் மன உளைச்சலை உண்டாக்கி வேலையை விடவைத்தார்கள்.

வீட்டுக்குச் சென்ற சில நாட்களில் அம்மாவின் சம்மதத்தைப் பெற்றுவிட்டேன். அம்மாவே என் அப்பாவையும் வீட்டிலுள்ளவர்களையும் சமாதானம் செய்வதாகச் சொன்னார். ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரே வாரத்தில் கலைந்துவிட்டது. காரணம், சொந்தங்கள் என்ன சொல்லுமோ என்ற பயம். சில மாதங்கள் அப்படியே ஓடின. பின்பு வீட்டில் சண்டை பிடித்து ஒருவழியாக என் கடைசி மாதச் சம்பளத்தை வைத்து அரசு வேலைக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். வார இறுதி நாட்களில் பயிற்சி வகுப்புக்குச் செல்வது ஆறுதலாக இருந்தது. சண்டைகளுக்கு மத்தியில் தேர்வெழுதினேன்.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஒரு தேர்வில் இறுதிக் கட்டம் வரை சென்று அழைப்புக் கடிதத்துக்காகக் காத்திருக்கிறேன். அவரைப் பார்த்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கலந்தாய்வுக்குத் தனியாகத்தான் சென்றுவந்தேன். ஆனால், பயத்தால் நாங்கள் சந்திக்கவில்லை. ஏதேனும் வெளிமாவட்டத்தில் வேலை கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். அப்பொழுதுதான் சாதித் தொல்லைகளிடமிருந்து தப்பிக்க முடியும்.

இந்த இரண்டரை ஆண்டுகளில் என் பெற்றோர் என் மனதை மாற்றப் பல வழிகளிலும் முயன்றுவருகிறார்கள். குற்றவாளி போலத்தான் என்னை நடத்துகிறார்கள். பெற்றோர் அமைதியாக இருந்தால்கூட யாராவது, ‘உங்கள் மகளுக்கு வயதாகிவிட்டது; எப்போ கல்யாணம்’ என்று கேட்டுவிட்டால்போதும். எனக்கு அன்று அர்ச்சனைதான். என்னையும் என் காதலையும் யாரும் ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. தாங்கள் சொல்லும் பையனைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் செத்துவிடுவதாக மிரட்டுகிறார் அம்மா. அவர்களுக்கு உயிரைவிட சாதிதான் பெரிது.

நான் என் பெற்றோரைக் குறைசொல்லவில்லை. ஏழ்மை நிலையிலும் என்னைச் சிரமப்பட்டுப் படிக்கவைத்தார்கள். அன்போடு வளர்த்தனர். எனக்கும் என் குடும்பத்தின்மீது அளவற்ற அன்பும் பாசமும் உள்ளது. ஆனால், அவர்கள் அறியாமையை நினைத்துதான் கோபம் வருகிறது. சாதி என்னும் மாயை அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறது. ஒன்றுமில்லாத கௌரவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டது. நம்மிலிருந்துதான் நமது சமூகம் உருவாகிறது என்பதைச் சொன்னால் என்னை முட்டாள் என்கிறார்கள். நான் அவரைத் திருமணம் செய்தால் சொந்தபந்தங்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்பதுதான் அவர்களின் கவலை.

நாங்கள் முக்கியமா அவன் முக்கியமா என்று கேட்கிறார்கள். பெற்றோர் எவ்வளவு முக்கியமோ எனக்காக 9 ஆண்டுகளாகக் காத்திருக்கும் அவரும் முக்கியம். சிறு வயதிலேயே தாயை இழந்தவர், தன் தங்கையின் குடும்பத்துடன் வசித்துவருகிறார். நான்தான் அவரிடம் காதலைத் தெரிவித்தேன். அவரது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேனோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது.

இத்தனை ஆண்டுகளில் அவர் என்னிடம் ஒருமுறைகூட கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதில்லை. நான் சம்பந்தப்பட்ட எந்த முடிவானாலும் என்னையே எடுக்கச் சொல்வார். பெண் என்பதால் என்னை எப்போதும் அடக்க நினைத்ததில்லை. சக மனுஷியாக என்னை மதித்து, என் எண்ணங்களுக்கு மரியாதை கொடுப்பவர். என்னை என் இயல்போடு ஏற்றுக்கொள்பவர். ஆனால், இன்று அவரே நம்பிக்கை இழந்து பேசுவது எனக்கு வேதனையாக இருக்கிறது. என்றோ யாரோ தவறாகக் கட்டமைத்த சாதி என்னும் அமைப்புக்காக இவரை நான் இழக்க விரும்பவில்லை.

ஆணவக்கொலையும் என் பெற்றோரின் தற்கொலை மிரட்டலும் எங்கள் பயத்துக்கான காரணங்கள். இந்த இரண்டில் ஒன்று நடந்தாலும் எங்களால் வாழ முடியாது. சாதி ஆணவக்கொலை செய்யும் அளவு என் பெற்றோர் கொடூரமானவர்கள் இல்லை என்றாலும், தாங்கள் சார்ந்த சாதி சமூகத்தால் அவர்கள் தூண்டிவிடப்பட்டால் என்ன செய்வது? இதுவரை தமிழகத்தில் நடந்த சாதி ஆணவக்கொலைகளின் எண்ணிக்கையை நினைத்தால் மனம் பதற்றமடைகிறது. நான் என் குடும்பத்தை நினைத்து மட்டுமல்ல; சாதியை ஆதரிக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தை நினைத்தும்தான் பயப்படுகிறேன்.

சாதி ஒழிப்பு குறித்துப் பல விவாதங்களும் மேடைப்பேச்சுக்களும் நடந்தாலும் சாதி அமைப்பின் வேராக இருக்கும் கிராமங்களில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் இவர்கள் மாறப்போவதில்லை என்றே தோன்றுகிறது. பெரியார் நம் காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாதா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்