பெண் சக்தி: ரஹிமாவின் அசைக்க முடியாத உறுதி!

By முகமது ஹுசைன்

அன்பைப் போதிப்பதுதான் மதங்களின் அடிப்படை நோக்கம். ஆனால், அந்த அன்பில் எது சிறந்தது என்ற போட்டியில் அதைப் பின்பற்றும் மனங்களால் அந்த அன்பே காவு வாங்கப்படும் நிலை இன்றும் தொடர்கிறது. மனதின் கசடுகளையும் கழிவுகளையும் மறைப்பதில் இன்று நாம் தேர்ந்திருக்கலாம். நம் நடை, உடை, பாவனையில் நாகரிகம் மிளிரலாம். அறிவுத் திமிரில் கூரையின் மேல் நின்று நம் மேன்மைகளை உரக்கக் கூவலாம். ஆனால், அவற்றையெல்லாம் மீறி நாம் மனிதர்கள்தானா என்ற கேள்வியை எழுப்பும் ரஹிமாவின் குரல் நம் ஆன்மாவை உலுக்குகிறது.

யார் இந்த ரஹிமா?

நம் வீடுகளிலும் வீதிகளிலும் பள்ளிகளிலும் உற்சாகமாகச் சுற்றித் திரியும் பதினைந்து வயது இளம் பெண்களில் ரஹிமாவும் ஒருத்தி. அவளுக்கும் அன்பான குடும்பம் இருந்தது. அவளைப் பாசத்தில் மூழ்கடிக்கப் பெற்றோர்கள் இருந்தார்கள். செல்லச் சண்டை போட ஒரு தங்கையும் இருந்தாள். ஆனால், எல்லாமே கடந்த ஆண்டு செப்டம்பர்வரைதான் இருந்தது. மனித வரலாற்றில் நிரந்தரக் கறை ஏற்படுத்திய ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் அவள் வாழ்வு மொத்தமும் இருண்டுபோனது.

இன்று அவளுக்கு ஆதரவற்றவர், அகதி ஆகிய இரண்டு முகங்கள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன. மனிதத் தன்மையற்ற கொடூரர்களால் உருவான கருவைக் கலைத்த வலியை அவளது தளர்ந்த உடல் பிரதிபலிக்கிறது. ஆனால், அதையும் மீறி வாழ வேண்டும் என்ற துடிப்பைக் கண்களில் பீறிடும் ஒளி உணர்த்துகிறது.

வலி அளித்த துணிவு

இழப்புகள் தந்த சோகமும் வலிகள் தந்த வேதனையும் வயதுக்கு மீறிய மன முதிர்ச்சியை ரஹிமாவுக்கு அளித்துள்ளன. உயிரைத் தவிர இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலை வாழ்வை எதிர்கொள்ளும் துணிச்சலை அவளுக்கு அளித்துள்ளது. தீர்க்கமாகவும் தெளிவாகவும் பேசுகிறாள். சிறு வயதில் தன் பார்வையைவிட்டு அகலாமல் ரஹிமாவை அவருடைய அப்பா பார்த்துக்கொள்வாராம்.

நிமோனியா நோயால் அவளுடைய தந்தை கடுமையான பாதிப்புக்கு உள்ளானார். நெடிய போராட்டம் ஐந்து மாதங்களுக்கு முன்பு முடிவுற்றது. வெளியுலகை அறியாத ரஹிமாவின் அம்மா அதன் பிறகு மிகவும் சிரமப்பட்டார். அப்பாவின் பாதுகாப்பு வளையத்தை இப்போது அம்மாவின் விழிகள் ஏற்றுக்கொண்டன. அந்தக் காலகட்டம் மிகவும் சவால் மிக்கதாகவும் இன்னல் நிறைந்ததாகவும் இருந்திருக்கிறது. இருப்பினும், அவளுக்கென இருந்த அவளது குடும்பம் ரஹிமாவுக்குச் சற்று நிம்மதி அளித்தது.

திட்டமிட்ட அழிப்பு

2017 செப்டம்பரில் மியான்மார் ராணுவம் மேற்கு மியான்மரிலிருக்கும் ரோஹிங்கியாவில் நிகழ்த்திய தாக்குதல் அங்கிருக்கும் இனத்தையே அழிக்கும் விதமாக இருந்தது. ஆண்கள் அடித்து விரட்டப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். துணிந்து எதிர்த்த ஆண்கள் கொல்லப்பட்டார்கள். கெஞ்சிய ஆண்களின் கண்முன்னே அவர்கள் வீட்டுப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள்.

அந்தப் படைவீரர்களின் உண்மையான நோக்கம் இன அழிப்பு. அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்தாம் இந்தக் கொலைகளும் வல்லுறவுகளும் சித்திரவதைகளும். ராணுவ வீர்கள் விரும்பியது நிறைவேறியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், அங்கிருந்த மக்கள் தங்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றும் முனைப்பில் அந்தப் பகுதியைவிட்டு அருகில் இருந்த காடுகளை நோக்கி ஓடினர்.

வலியை மறக்கடித்த உறுதி

அங்கே ஓடும் வழியில் புத்த மதப் பாதுகாவலராகத் தன்னையே அறிவித்துக்கொண்ட ஒருவனால் ரஹிமாவின் அம்மா கொல்லப்பட்டார். அப்போது கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவளுடைய தங்கையும் பலியானாள். இவையெல்லாம் ரஹிமாவின் கண்முன்னே நிகழ்ந்தன. துக்கமும் அச்சமும் நிரம்பிய அந்தத் தருணத்திலும் ரஹிமா நிற்காமல் காட்டுக்குள் ஓடினாள். அப்படித் தப்பி வருபவர்களைச் சீரழிக்கக் காத்துக்கொண்டிருந்த ராணுவ வீரர்களிடம் சிக்கிக்கொண்டாள். அந்தத் தருணத்தில் ரஹிமா ஒரு முடிவைத் தீர்க்கமாகத் தன்னையறியாமலேயே எடுத்தாள். உடலை இழந்தாலும் ஒருபோதும் உயிரை இழக்கக் கூடாது என்பதுதான் அந்த முடிவு.

எனவே, ரஹிமா அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அதனால் அங்கிருந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு ரஹிமா இரையானாள். இரண்டு நாட்களாகத் தொடர்ந்த கொடுமையின் வலியில் இருந்து மீள அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் போதை வஸ்துவையும் பயன்படுத்தியிருக்கிறாள். அவர்கள் சலிப்படையும்வரை ரஹிமாவை வதைத்தார்கள். அதன் பின் மரத்துப்போன உடலையும் உடைந்துபோன மனதையும் சுமந்துகொண்டு காடுகளையும் ஆறுகளையும் கடந்து வங்கதேசத்தில் இருக்கும் குடுபாலாங் அகதி முகாமில் அவள் தஞ்சமடைந்தாள்.

அகதி வாழ்க்கை

தென்கிழக்கு வங்க தேசத்தில் இருக்கும் குடுபாலாங்தான் இன்று உலகின் மிகப் பெரிய அகதி முகாம்கள் இருக்குமிடம். ரஹிமா வசிக்கும் முகாமின் பரப்பளவு ஒரு சதுர கிலோமீட்டர் இருக்கும். ஆனால், அந்தக் குறுகிய இடத்தில் சுமார் ஒரு லட்சம் அகதிகள் மூச்சுத் திணற வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

தந்தையின் மீது இன்று தான் கோபமாக இருப்பதாகச் சொல்கிறாள். நிரந்தரமற்ற உலகில் அவரோ அவர் பாதுகாப்போ நிரந்தரமில்லை என்பது அவருக்குத் தெரியாதா? இந்த உலகைத் தனியாக எதிர்கொள்வது எப்படி என்பதைத்தானே அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்று ரஹிமா ஆதங்கத்துடன் கேட்கிறாள். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குத் தனியாக அருகிலிருக்கும் காடுகளில் ஒதுங்கப் பயந்து சிலநாட்கள் சாப்பிடாமலேயே இருந்ததாகச் சொல்கிறாள்.

ரஹிமாவை போன்று அனாதைகளாக்கப்பட்ட பெண்கள் பலர் அங்கிருக்கிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை அங்கே குறைவாகவே உள்ளது. பெண்கள் பலர் பாதுகாப்புக்காகத் தங்களைவிட வயதில் மூத்த நபர்களைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரஹிமாவுக்கு இந்த இரண்டிலும் விருப்பமில்லை. அவள் வீட்டு வேலைக்குச் சென்று தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறாள்.

ரஹிமாவின் முகத்தில் விகாரமான ஒரு தழும்பு இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி என்னவென்று கேட்டபோது, “என்னை ஏன் அவன் இப்படிக் கடித்தான் எனத் தெரியவில்லை” என அப்பாவியாகச் சொல்கிறாள். தன்னை ஒளிப்படம் எடுத்த நபரை ரஹிமா அருவருப்புடன் பார்த்தாள். அந்தப் பார்வை ஒட்டுமொத்த ஆண் இனத்தையே தலைகுனிய வைப்பதாக இருந்தது.

மாற்றத்தைத் தொடங்குவோம்

நம் நாட்டில் மதம், இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும்போதெல்லாம் பலரும் கொந்தளிக்கிறோம்.

ஆனால் இந்த மாதிரியான இழிசெயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் யார்? அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? அவர்களுக்கும் ஒரு அன்னை இருப்பார்தானே. அவர்களுக்கும் ரஹிமாவைப் போல ஒரு சதோதரியோ மகளோ இருக்கலாம் அல்லவா? இத்தகைய கொடிய செயல்களைப் புரிந்த பின் அவர்களால் மீண்டும் தங்கள் குடும்பத்தை எப்படி எதிர்கொள்ள முடிகிறது?

இத்தகைய மனிதர்களை நம்மிடையே கொண்ட நாம் எப்படி விலங்குகளைவிட மேன்மையானவர்களாக இருக்க முடியும்? இனிமேலாவது எதிர்ப்பு என்ற பெயரில் மெழுகுவர்த்தியை ஏந்தி அதன் ஒளியைத் திறந்தவெளிகளில் வீணடிக்காமல் நமது வீட்டினுள் இருப்போரின் மனதில் அந்த ஒளியைப் பரவச் செய்ய முயல்வோம்.

“நாளை என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் உயிருடன் இருக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்று சொல்லும் ரஹிமாவுக்காகவாவது இதை நாம் செய்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

வலைஞர் பக்கம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்