இல்லம் சங்கீதம் 18: தாம்பத்திய சமன்பாடுகள்

By எஸ்.எஸ்.லெனின்

விஷப் பாம்பொன்று

என் மீதேறி

நிதானமாக

கடந்து போகிறது

புரிதலற்ற உன்

பார்வைகளைச்

சந்திக்கும்போதெல்லாம்

- அ.வெண்ணிலா

னைவி பைரவியின் ஒற்றைக் கேள்வி கதிரேசனை உலுக்கிப்போட்டது. அதுவரை வாயாடிக்கொண்டிருந்தவன் சட்டென அடங்கினான். கதிரேசன் மட்டுமல்ல; உடன் அமர்ந்திருந்த பைரவியின் பெற்றோரும் மகள் இப்படியும் பேசுவாளா எனத் திகைத்திருந்தனர். பைரவியும் ஒரு கணம் நாவைக் கடித்துக்கொண்டாலும் நீண்ட நாட்களாக அவள் மனதை அறுத்துக்கொண்டிருந்த அந்தக் கேள்வி வெளியே வெடித்ததில் ஆசுவாசமடைந்தாள்.

உலுக்கிய ஒற்றைக் கேள்வி

“உங்கள் மாப்பிள்ளைக்கு நானென்ன விலைமாதுவா?”- பைரவி கேட்ட அந்தக் கேள்வி தரையில் விழுந்த மீனாக இன்னமும் துள்ளிக்கொண்டிருக்கிறது. அவள் அதை ஆங்கிலத்தில் நாசூக்காகக் கேட்டுவைத்தாலும், அனைவரும் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதாக அரண்டிருந்தனர்.

பைரவியுடைய தந்தை, மகளின் அழகுக்கும் படிப்புக்கும் உகந்த மாப்பிள்ளை என்று எங்கெங்கோ விசாரித்து கதிரேசனைக் கண்டடைந்தார். மூன்றாண்டு இல்லறத்தின் பரிசாக அந்தத் தம்பதிக்கு பைரவியின் குண்டுக் கண்களுடன் இரண்டு வயதில் குட்டிப் பாப்பாவும் உண்டு. மூத்த மகளுக்கு நிறைவான வாழ்க்கை அமைத்துக்கொடுத்த மகிழ்ச்சியில் இளைய மகளுக்கான திருமண ஏற்பாடுகளில் அந்தப் பெற்றோர் மும்முரமாகி இருந்தனர். திருமணப் பட்டுத் தேர்வுக்காக பைரவி, கதிரேசனையும் அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் செல்லும் யோசனையில் மகள் வீடு வந்தவர்களை, குடும்பப் பஞ்சாயத்தைக் கூட்டி மருமகன் உட்காரவைத்துவிட்டார்.

பதிலற்ற கேள்விகள்

‘எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசுகிறாள். எப்போதும் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறாள். அப்படியென்ன என்னிடம் குறை கண்டாள்? வசதிக்கும் வனப்புக்கும் என்ன குறை வைத்தேன்? உங்கள் மகளால் நிம்மதி போச்சு..’ இப்படி ஆரம்பித்து கதிரேசன் நீண்ட புகாரை வாசித்தான். அவனது அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பைரவி அசாத்திய மௌனம் காத்தாள். மகளின் அழுத்தமான மௌனத்தையும் கலங்கிய கண்களையும் பார்த்து பைரவியுடைய தந்தைக்குத் தோள் உயர்ந்தது. வார்த்தையை விடக் கூடாதென்று அவருடைய மனைவி கண்களால் அதட்டிக்கொண்டிருந்தார். உடன் வசிக்கும் தங்களுக்கே தெரியாமல் மகனுக்கும் மருமகளுக்கும் அப்படியென்ன அந்தரங்கப் பிரச்சினை என்று ஆரம்பம் முதலே கதிரேசனின் பெற்றோர் அமைதி காத்திருந்தனர். கதிரேசனின் குற்றச்சாட்டுகள் ஓயாமல் தொடர, அதற்குப் பதிலடியாகத்தான் பைரவி அப்படி வெடித்தாள். கதிரேசன் உட்பட யாருக்கும் அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. இது பேசித் தீர்க்கும் பிரச்சினை அல்ல என்பது பெரியோருக்கு உறைத்ததும் பேசி வைக்காத ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தனர். பெண்கள் சுதாரித்துக்கொண்டு இரவு உணவு தயாரிப்பில் இறங்க, ஆண்கள் டிவியில் செய்தி பார்த்தபடி அரசியல் பேசினர். இவற்றை எதிர்பாராதவர்களாகத் தனித்து விடப்பட்ட பைரவியும் கதிரேசனும் அலங்க மலங்க விழித்தனர்.

இளம் தம்பதியர் இடையே அப்படி என்னதான் நடந்திருக்கும்? மனைவி மீது கதிரேசன் குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் அவனால் ஏன் பிரச்சினையின் மையத்தை அணுக முடியவில்லை? பைரவி ஏன் நீண்ட மௌனம் காத்தாள்? இப்படிப் பல கேள்விகளுடன் காத்திருந்த குடும்பப் பெரியவர்கள் பைரவியின் ஒற்றைக் கேள்விக்கு இப்போது தெறித்து விலகியது கதிரேசனுக்குப் புரியவில்லை. அவனிடம் இன்னும் குற்றச்சாட்டுகள் மீதமிருந்தன. ஆண் நீட்டி முழக்கியும் விளங்கிக்கொள்ளாத பெற்றோர்கள், பெண் முன்வைத்த ஒற்றைக் கேள்வியில் அப்படியென்ன புரிந்துகொண்டார்கள் என்று அவன் குழம்பினான்.

ஆளுமைப் பிரச்சினை

இவர்களின் கேள்விகளுக்கு விடை தேடுவதில் ஆண், பெண் இடையிலான பாலியல் ஈர்ப்பு சமன்பாடுகள் குறுக்கிடுகின்றன. ஆண் மீதான பெண்ணின் காதல் உள்ளார்ந்து இதயபூர்வமான தேடல்களைக் கொண்டிருப்பதும், ஆண் தனது காதலைப் பெரும்பாலும் தேகபூர்வமாக அடையாளம் காண்பதும் இவற்றில் அடங்கும். இருவரும் சென்று சேருமிடம் ஒன்றானாலும் பாதைகள் வேறு. பாலியல் வேட்கையில் ஆணைவிடப் பெண் பலமடங்கு தீவிரமானவள் என்று ஆய்வுகளின் தரவுகள் சுட்டிக்காட்டினாலும் பாசம், நேசம், அரவணைப்பு உள்ளிட்டவற்றின் வாயிலாகவே அவள் தாம்பத்தியத்தை அதிகம் அடையாளம் காண்கிறாள். மேலும், ஆதிகாலம் தொட்டு பெண்ணை எதிர்கொள்வதில் ஆணைப் படுத்தியெடுக்கும் ஆளுமைப் பிரச்சினைகளும் தனியாக உண்டு. அவற்றில் முக்கியமானது மேலாதிக்கப் போட்டி. பெண்ணிடம் தனது அதிகாரத்தைப் பாலியலிலும் நிலைநிறுத்தும் தவிப்பும் தடுமாற்றமும் ஆணை எப்போதும் அலைகழித்துக்கொண்டிருக்கின்றன. இதனாலும் மென்மையான உணர்வுகளையும் அவற்றையொட்டிய இணையின் எதிர்பார்ப்புகளையும் புறந்தள்ளி பால் சார்ந்தவற்றையே அவன் அதிகம் முன்னிறுத்த முற்படுகிறான்.

பெண் பார்வை

கதிரேசன் - பைரவி தம்பதியின் நிறைவான தாம்பத்திய வாழ்க்கையில் மகள் பிறந்த பிறகான சில மாற்றங்களும் தடுமாற்றங்களும் இந்தச் சமன்பாடுகளில்தான் இடறின. அதுவரை கணவனைக் கொண்டாடிக்கொண்டிருந்த பைரவி, அதன் பின்னர் அவனைப் பின்தள்ளி மகளைச் சீராட்ட ஆரம்பித்தாள். தனக்கு முக்கியத்துவம் குறைந்ததன் நியாயத்தை கதிரேசன் ஆழ்ந்து உணராதிருந்தான். அவனுக்கு எப்போதும் போல மனைவியின் நெருக்கம் தேவைப்பட்டது. பைரவிக்கு சுகப் பிரசவமானாலும் சிசுவைக் கொடி சுற்றிக்கொண்டது என்று சிசேரியனுக்குக் குறைவில்லாத வலியை அனுபவித்திருந்தாள். தாயிடமும் பகிரத் தயங்கும் தனது வலியைப் படித்த கணவன் உணர முன்வராததுடன், புது மாப்பிள்ளையாய் அவனது தொடரும் ஆட்டம் பைரவியின் பிரசவ வைராக்கியத்தை நீட்டிக்கச் செய்தது.

ஆண் பார்வை

கதிரேசனைப் பொறுத்தவரையில் பைரவியுடனான ஏற்பாட்டுத் திருமணத்தில், மகள் பிறந்த பின்னரே மனைவியைத் தீவிரமாக நேசிக்க ஆரம்பித்திருந்தான். கணவன் என்ற ஆணாக அவளை மும்முரமாய் ஆக்கிரமித்துத் தன் காதலைச் சொல்ல முன்வந்தான். திருமணத்தின் தொடக்க மாதங்களிலேயே மனைவி சூலுற்றதும் மனைவிக்குப் பரிசுகளை வாரி வழங்கினான். உச்சப் பரிசுக்கான கருவியாகத் தன்னைக்கொண்டே அவளை ஆராதிக்கவும் ஆரம்பித்தான். நல்ல மருத்துவ வசதிகளுக்கு நகரமே சிறந்தது எனப் பிரசவத்துக்கு மனைவியை அவளது கிராமத்துக்கு அனுப்பும் கோரிக்கையையும் நிராகரித்தான். இப்படித் தன்னளவிலான நியாயங்களில் கதிரேசன் தொங்கிக்கொண்டிருக்க, அவை எதுவும் அவசியப்படாத பைரவி கணவனின் புரிந்துகொள்ளாமையில் படிப்படியாக எரிச்சலுற்றாள்.

இரவும் பகலும் விழித்திருந்து குழந்தையைப் பராமரிக்கும் சிரமத்துடன் அடங்காத கணவனையும் சகித்துக்கொள்ளும் அவளது பொறுமை சரியத் தொடங்கியது. அவளது எரிச்சல் எதிர்வினைகளை கதிரேசன் குதர்க்கமாகப் புரிந்துகொண்டான்.

தீர்வு கண்ட பெரியவர்கள்

வாழ்ந்து கழித்த பெரியவர்கள், இளந்தம்பதியர் இடையிலான தாம்பத்திய தடுமாற்றங்களைப் பூடகமாக உணர்ந்தனர். பேசித் தீர்க்கும் முயற்சியில் வடுக்களை உருவாக்குவதைத் தவிர்க்கவும் முடிவுசெய்தனர். நடைமுறை சார்ந்த தீர்வாக, விடிந்ததும் நாடகத்தின் அடுத்த காட்சிக்கு அவர்கள் நகர்ந்திருந்தனர். பைரவியின் தாயார் திடீர் மூட்டு வலியென முடங்கிக்கொள்ள, தந்தையோ இரவு உணவு ஒத்துக்கொள்ளவில்லை எனப் படுக்கையை விட்டு எழவில்லை. இப்படியாக காஞ்சிபுரம் பட்டுத் தேர்வுக்கு கதிரேசன் - பைரவியை அனைவரும் நெட்டித் தள்ளினர். திருமண வேலை என்பதால் அந்த ஜோடியும் எதிர்மறையாக எதுவும் சொல்லாமல் கிளம்ப வேண்டியதானது. பெரியவர்கள் முன்னிலையில் முட்டிக்கொண்டவர்கள் அதில் பயனில்லாமல்போக, தங்களுக்குள் அடுத்தவர் எதிர்பார்ப்புகளை ஆராய ஆரம்பித்திருந்தனர். இடமாற்றமும் திடீர்ப் பயணமும் அதற்கு வடிகால் செய்தன. முதிர்ச்சியான அணுகுமுறையில் இளஞ்ஜோடிகளைத் தீர்வு நோக்கித் தள்ளிய பெரியவர்களின் முயற்சிக்குப் பலனும் கிடைத்தது. இரண்டு நாள் கழித்துத் திருமண ஜவுளி கொள்முதல் வீடு வந்தபோது, மணப்பெண்ணுக்குரியதைவிடச் சிறப்பான பட்டுப்புடவையை கதிரேசன் மனைவிக்கு வாங்கி வந்திருந்ததையும் அதை பைரவி பொறுப்பாகப் பத்திரப்படுத்தியதையும் பெரியவர்கள் கண்டும் காணாதிருந்தனர்.

(மெல்லிசை ஒலிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்