எசப்பாட்டு 16: சலுகை எல்லாம் காதல் வரையே!

By ச.தமிழ்ச்செல்வன்

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி

காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ...

- கண்ணதாசனின் இந்தப் பாடல் ‘பாத காணிக்கை’ படத்தில் வரும். அந்தப் பாடலில் உறவுகளின் தீர்மானிக்கப்பட்ட இடங்கள் பற்றிய பட்டியல் வந்துகொண்டே இருக்கும். ‘தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, கெட்ட பின்பு ஞானி!” என்று பாடல் அடுக்கிச் செல்லும். ஓர் ஆணை மையமாகக்கொண்டுதான் இந்த உறவுகள் பட்டியலாகின்றன. ஆனால், ஒரு பெண்ணுக்கு இந்த உறவுகளெல்லாம் எப்படி அர்த்தமாகின்றன? என் வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் கண்ட பல காட்சிகள் மனத்திரையில் ஓடுகின்றன.

நிறுத்தப்பட்ட அன்பு

எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு தம்பதியருக்கு ஒரே செல்ல மகள். அன்பைப் பொழிந்து வளர்த்தார்கள். அவள் விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். விரும்பிய கல்லூரியில் சேர்த்தார்கள். தாத்தா, பாட்டி, அத்தைகள், சித்திகள், சித்தப்பாக்கள், மாமாக்கள் என ஒட்டுமொத்தக் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக அவள் வளர்ந்தாள். அவர்களது வம்சத்தில் பெண் குழந்தைகள் அபூர்வம் என்பதும் கூடுதல் அன்புக்குக் காரணம். ஆனால், அவள் விரும்பிய மாப்பிள்ளை தம் சாதி இல்லை என்றதும் ஒட்டுமொத்தக் குடும்பமும் அவளை நிராதரவாகக் கைவிட்டுவிட்டது. குடும்பத்துக்குள் இந்தக் குழப்பம் நிலவிய காலகட்டத்தில் ஒருநாள் நான் உள்ளே நுழைந்தேன். அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அத்தனை பேரின் அன்பையும் பெற்ற பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்கி ஒளி சிந்தும் அந்த முகம் இருண்டு கிடந்தது. முகத்தில் ஏக்கம் தேங்கி நிற்கும் நிராதரவான குழந்தையாக அவளைக் கண்டேன்.

அவர்கள் யாரும் அவளைத் திட்டவில்லை, அடிக்கவில்லை, செல்போனைப் பறித்து வைத்துக்கொண்டு அறைக்குள் அடைத்துப் பூட்டவில்லை, வேலைக்குப் போவதைத் தடுக்கவில்லை. வழக்கமான அப்பாக்கள் செய்யும் எதையும் அவர்கள் செய்யவில்லை. ஆனால் மழையெனப் பொழிந்த அன்பையும் அக்கறையையும் சட்டென நிறுத்திவிட்டார்கள். உறவுக்காரப் பையன் ஒருவனை அவர்கள் அவளுக்கு முன்மொழிந்தார்கள். ‘இதற்கு ஒப்புக்கொண்டால் எப்பவும்போல எங்கள் அன்பு மழை மீண்டும் பொழியும். அல்லது உன் விருப்பம். நீயே உன் வாழ்வைத் தேர்வுசெய்துகொள்’ என்று சொல்லாமல் சொன்னார்கள்.

“மனதில் ஒருவரை நினைத்துக்கொண்டு இன்னொரு ஆணுடன் எப்படி மாமா நான் வாழ முடியும்?” என்று அவள் என்னிடம் விசும்பி வெடித்துச் சொன்ன வார்த்தைகளுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. நண்பரிடம் பேசிப் பார்த்தால் அவர், “நாங்க ஒண்ணும் அவள் காதலுக்குக் குறுக்கே நிற்கவில்லையே. எங்க சொந்த சாதி சனமெல்லாம் அவ்வளவு முற்போக்கா இன்னும் மாறலையே சார். அவுங்க புறக்கணிப்பை எப்படி எங்களாலே தாங்க முடியும் சொல்லுங்க. அவ்வளவுதான், அதுக்கு மேலே அவள் விருப்பம்” என்று கத்தரித்துப் பேசினார். தூக்கி வளர்த்த அருமைத் தாத்தா தன் காலில் விழுந்து கெஞ்சிய காட்சியை அவள் தாங்க முடியாத வேதனையுடன் சொல்லி அழுதாள்.

நிபந்தனைகளுக்கு உட்பட்ட அரவணைப்பு

இன்னொரு காட்சி. ஒரு கருத்தரங்கில் மருத்துவர் கு.சிவராமன் விவரித்த, அவரது குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு. அவருடைய அக்கா ஒருவர் படித்து நல்ல வேலையில் இருந்தவர். ஒருநாள் தன் நீண்ட கூந்தலைக் கத்தரித்து பாப் வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். ஒட்டுமொத்த வீடும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேச மறுத்துவிட்டதாம்.

எங்கள் தெருவில் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண், மாணவர் சங்கத்தில் சேர்ந்து கல்லூரியில் செயலாளராகிவிட்டாள். அதையெல்லாம் அவளது வீடு தடுக்கவில்லை. மாநில அளவில் நடக்கவிருந்த சங்கப் பயிலரங்கில் பங்கேற்க அவள் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டபோதும் அதை மறுக்கவில்லை. ஆனால், “தம்பியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போ” என்றார்கள். அவளோ, “நாங்க எல்லோரும் பெண்களாகச் சேர்ந்துதான் போகிறோம். அதெல்லாம் ஒரு பயமும் இல்லை. எப்போதான் நானும் தனிப் பயணத்துக்குப் பழகுவது? துணைக்கு ஆள் கூட்டிட்டுப் போனால் தோழிகள் சிரிப்பார்கள். மானக்கேடாக இருக்கும்” என்று பலவாறாகச் சொல்லிப் பார்த்தாள். ஆனால், குடும்பத்தார் மசியவில்லை.

இன்னொரு கல்யாணக் காட்சி. இருவரும் ஒரே துறையில் பணிபுரிகிறவர்கள். சாதி மறுத்த காதல் திருமணம். இருவீட்டாரும் சம்மதித்தனர். சாதி மறுத்த, சடங்கு மறுத்த குறிப்பாகக் கழுத்தில் தாலி ஏறாத திருமணமாகத்தான் தன் திருமணம் நடக்கணும் என்பது பெண்ணின் நெடுங்காலக் கனவு. அறிவுடைய பெண்களின் இயல்பான கனவுதானே. ஆனால், எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்ட மாப்பிள்ளையின் பெற்றோர் தாலி கட்டாமல் திருமணம் என்பதை மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. மண்டபம்வரை வந்த அவர்கள் அந்த ஒரு ஆட்சேபனையுடன் மண்டபத்து வாசலிலேயே நின்றார்கள். உள்ளே வர மறுத்தார்கள்.

உறவுகள் தரும் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும்தான் பெண் வளர்கிறாள். ஆனால், சுற்றத்தாரின் அந்த அன்பும் அரவணைப்பும் நிபந்தனையற்ற உணர்வுகள் அல்ல. இந்தச் சமூகம் பெண்ணுக்குக் குடும்பத்திலும் பொதுவெளியிலும் என்ன இடம் என்று தீர்மானித்திருக்கிறதோ, அவள் எப்படி வாழ வேண்டும் என்று கட்டமைத்திருக்கிறதோ, அவள் எந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறதோ அதைச் செயல்படுத்தும் அமலாக்க அதிகாரிகளாகவே உறவுகள் செயல்படுகின்றன. விதி மீறும் ஆணுக்கு இதில் விதிவிலக்கும் அங்கீகாரமும் எளிதாகக் கிடைத்துவிடுகின்றன.

உரிமைகளைத் தடுக்கும் அரண்கள்

சிறு வயதில் கடைக்குப் போக, லாரியில் தண்ணீர் பிடித்து வர என்று பல சின்னச் சின்ன வீட்டு வேலைகளை எரிச்சலுடன் செய்யும் பையன்கள் பெரியவர்களாகும்போது ‘இதையெல்லாம் செய்ய வேண்டாம்’ என்று குடும்பமே சொல்லிவிடுகிறது. வளர வளர ஆணுக்கு வீட்டிலும் வெளியிலும் கிடைக்கும் சுதந்திரத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், பெண் குழந்தை பெரியவளாகப் பெரியவளாக அவள் சுதந்திரம் குறுக்கப்படுகிறது. குடும்ப வன்முறை அவளை ஒடுக்கி, நிச்சயிக்கப்பட்ட கதாபாத்திரக் கூட்டுக்குள் அவள் தன்னைத்தானே அடைத்துக்கொண்டு பூட்டுப் போட்டுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. இதை உத்தரவாதப்படுத்தும் கடமைதான் அவளுடைய நெருங்கிய உறவுகளுக்குத் தரப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும்போதும் தன் தனித்துவத்துக்காகவும் தன் விருப்பப்படியான வாழ்க்கைத் தேர்வுகளுக்காகவும் அவள் இந்த நாட்டின் ஜனநாயக ஏற்பாடுகளையும் சட்டங்களையும் நோக்கித்தான் உதவிக்கரம் நீட்ட வேண்டியிருக்கிறது. சட்டம் உத்தரவாதம் செய்துள்ள பல உரிமைகளை இயல்பாகப் பெறவிடாமல் தடுக்கும் அரண்களாக அவளது சுற்றமும் உறவும் நிற்கின்றன. சாதியும் மதமும் உள்ளூர்ப் பழக்க வழக்கம் என்னும் பண்பாட்டு அசைவுகளும் இந்த உறவுகளை இயக்கும் மாயக்கரங்களாகத் திகழ்கின்றன.

உறவுகள் என்னும்போது மாமியார், மருமகள், நாத்தனார் என்ற இந்த உறவுகள் பகை உறவுகளாகவே காலம் காலமாக நம் சமூகத்திலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டுவருகின்றன. ‘பெண்ணுக்குப் பெண்ணே எதிரி’ என்னும் புளித்துப்போன பழைய வசனத்தைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். கணவன் என்ற ஆணைச் சார்ந்தவைதான் இந்த உறவுகள் என்பது எப்போதும் சொல்லப்படுவதே இல்லை. அந்தச் சிக்கலிலிருந்தும் ஆணுக்கு விடுதலை கொடுத்துவிடுவார்கள்.

ஆணுக்கு ஒரு விதமாகவும் பெண்ணுக்கு ஒரு விதமாகவும் அர்த்தமாகிற இந்தச் சுற்றமும் நட்பும் பற்றி, உறவுகளின் மறுபக்கம் பற்றி பொதுவெளியில் பேசத் தொடங்க வேண்டும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர்,எழுத்தாளர்
தொடர்புக்கு:tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்