முகங்கள்: ஆர்வமே மூலதனம்

By எல்.ரேணுகா தேவி

 

டந்துபோன தருணங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை ஒளிப்படங்களுக்கு உண்டு. பல்கிப் பெருகிவிட்ட ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் பலரும் ஒளிப்படக் கலைஞர்களாக மாறுவதில் வியப்பில்லை. ஆனால், திருமணங்கள், வளைகாப்பு, பிறந்தநாள், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட முக்கிய வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் பொது விழாக்களுக்கும் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர்களைத்தான் பலரும் நாடுகின்றனர். படம் பிடிப்பதில் மட்டுமல்ல; அவற்றை நேர்த்தியாக வடிவமைப்பதிலும் ஒளிப்படங்களின் மகத்துவம் அடங்கியிருக்கிறது. பெரும்பாலும் ஆண்களே கோலோச்சும் இந்தத் தொழிலில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார் சென்னையைச் சேர்ந்த கோமதி.

ஆர்வத்துக்குக் கிடைத்த பரிசு

சென்னை எல்லீஸ் சாலையில் உள்ள ஒளிப்படக் கடையில் வேலை செய்துவருகிறார் கோமதி. நாம் கடைக்குச் சென்றபோது கணினியில் ஒளிப்படங்களை வடிவமைக்கும் பணியில் மூழ்கியிருந்தார். யாராவது ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டால் ஒளிப்படக் கலைஞராகவும் மாறிவிடுகிறார். அழகிய ஆல்பங்கள், ஃபிரேம்கள் கோமதியின் கைவண்ணத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கிறார்.

“போட்டோகிராஃபிக்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. வரவேற்பாளராகத்தான் இந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் வேலைக்குச் சேர்ந்து சில நாட்களிலேயே எப்படி போட்டோ எடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் தோன்றியது. என்னுடைய ஆர்வத்துக்குத் துணையாக இருந்தவர் கடையின் உரிமையாளர் பாபு சார். ஒரு ஒளிப்படத்தை எப்படி எடுப்பது, கேமராவை எவ்வாறு கையாள்வது, எப்படி பிரிண்ட் போடுவது, அதற்குத் தேவையான கணினித் தொழில்நுட்பம் என இந்தத் துறை சார்ந்த எல்லா விஷயங்களையும் எனக்குக் கற்றுக்கொடுத்த குரு அவர்.

இந்தத் தொழிலை வெளியில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவாகும். ஆனால், என் ஆர்வத்துக்குச் சரியான மதிப்பளித்த பாபு சாரால் பல விஷயங்களை என்னால் கற்றுக்கொள்ள முடிந்துள்ளது. ஒருகாலத்தில் என்னுடைய பெயரைக்கூட எனக்குச் சரியாக எழுதத் தெரியாது” என்று சொல்லும் கோமதி இன்று விரல் நுனியில் ஒளிப்பட வித்தைகள் புரிகிறார்.

08CHLRD_GOMATHY_2கண் பார்த்ததைக் கை செய்யணும்

விடாமுயற்சிதான் கோமதியை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. “கேமரா ரோலில் இருந்து ஒளிப்படங்களை டெவலப் செய்வதைத்தான் முதலில் கற்றேன். ஒளிப்படக்காரர்கள் கொண்டுவந்து கொடுக்கும் ரோலில் ஒன்று, இரண்டு ஃபிரேம்கள் மீதமாக இருக்கும். அவற்றை கேமராவில் போட்டு அலுவலகத்தில் உள்ளவர்களைப் படம் பிடித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஒளிப்படத் தொழில் டிஜிட்டலானபோது கணினியில் எப்படி டிசைன்கள் செய்கிறார்கள் எனப் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த டிசைனர் உணவு இடைவேளைக்குச் சென்றுவிட்டால் அவர் செய்ததுபோல் நானும் செய்து பார்ப்பேன். ஒரு விஷயத்தை மற்றவர்கள் செய்யும்போது கண்கள் பார்க்க வேண்டும். அந்த வேலையை கைகள் தானாகச் செய்யத் தொடங்கிவிடும்” எனத் தான் தொழிலில் தேர்ச்சிபெற்றதைக் கூறுகிறார்.

“நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம் என்பதற்கு அர்த்தம் அதில் நடக்கும் சிறு சிறு தவறுகள்தான். போட்டோக்களை ஆல்பங்களாகச் செய்யும் பல நேரங்களில் தவறு நிகழ்ந்துள்ளது. ஆனால், அதே தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். இப்போது எனக்குத் தனியாக ஒரு ஒளிப்படக் கடையை நடத்தும் அளவுக்குத் திறமை உள்ளது. எதிர்காலத்தில் இந்த ஆசை நிறைவேறினால் மகிழ்ச்சிதான்” என்கிறார் பெருமிதப் புன்னகையோடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்