முடக்குவாதத்தை நீக்கும் செயற்கைத் தண்டுவடம்

By ம.சுசித்ரா

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு அசைவற்ற நிலையில் இருப்பவர்களைச் சகஜமாக நடமாட வைக்கும் அதிசயக் கருவி ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவு கண்டிருப்போம். ‘பயானிக் ஸ்பைன்’ என்ற செயற்கைத் தண்டுவடம் மூலம், இனிமேல் அது சாத்தியப்படும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் மெல்போர்ன் மருத்துவமனை, மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஃபிளாரே நரம்பு அறிவியல் மற்றும் மனநல நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளனர்.

சிக்கலற்ற சிகிச்சை

வெறும் 3 சென்டிமீட்டர் நீளம் மட்டுமே இருக்கிறது இந்த ‘செயற்கைத் தண்டுவடம்’. பார்ப்பதற்குக் கொஞ்சம் நீண்ட பால்பாய்ன்ட் பேனா ஸ்பிரிங்போல இருக்கிறது. பின் கழுத்தில் சிறிய துளையை ஏற்படுத்தி ரத்த நாளங்கள் வழியாக இதை மூளைக்குள் செலுத்த முடியும். எனவே, சிக்கல் மிகுந்த மூளை அறுவைசிகிச்சைக்கு இதில் அவசியம் இல்லை. சுருள் வில் போல இருப்பதால், நெளிவு சுளிவு கொண்ட ரத்த நாளங்களுக்குள்ளும் இந்தக் கருவி ஊடுருவிச் செல்லும். எந்தப் பகுதியில் பொருத்த வேண்டுமோ அங்கே இதைக் கொண்டு செல்லலாம்.

தன்னிச்சையான தசை இயக்கங்களுக்கு நரம்புகளைத் தூண்டக் காரணமாக இருக்கும் மூளையின் மோட்டார் கார்டெக்ஸ் பகுதியில் செயற்கைத் தண்டுவடம் பொருத்தப்படும். செயற்கை தண்டுவடத்துக்கு வெளியே இணைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகள் கை, கால் தசைகளின் தன்னிச்சையான செயல்பாட்டை ஊக்குவிக்கும் மூளை நரம்புகளின் சமிக்ஞைகளைக் கண்காணிக்கும். பிறகு அந்தச் சமிக்ஞைகளைத் தோள்பட்டையில் உள்ள சிறிய கருவிக்கு அனுப்பும். இந்தச் செயற்கை தண்டுவடம் தனக்குக் கிடைக்கும் சமிக்ஞைகளை உத்தரவுகளாக மாற்றி, புளூடூத் வசதி மூலம் வெளியில் இருக்கும் செயற்கை உறுப்புகளை இயக்கும்.

ராயல் மெல்போர்ன் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவரான பேராசிரியர் டெர்ரி ஓ பிரெய்ன் இதைத் தெரிவிக்கிறார்.

நடக்கச் சொல்லும் ஆழ்மனம்

இதற்கு முன்னதாகப் பயானிக் மூட்டு என்னும் கண்டுபிடிப்பு மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளைச் சென்சார் தொழில்நுட்பத்தின் வழியாக மூட்டுகளுக்குக் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு ரோபோவை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்குவதுபோலச் செயற்கையாகப் பொருத்தப்பட்ட கால், கைகளைச் சென்சார் மூலம் இயக்க முடிந்தது. ஆனால் இந்த அதிநவீனச் செயற்கைத் தண்டுவடமோ, முந்தைய கண்டுபிடிப்பையும் மிஞ்சிவிட்டது.

இந்தப் புதிய கருவி ஆழ்மனச் சிந்தனையை வசப்படுத்தும் ஆற்றலைக் கொண்டது. நம் உடல் அங்கங்கள் பழுதடைந்தாலும், எதுவும் கெட்டுப் போய்விடவில்லை என்று சொல்லும் வல்லமை படைத்தது ஆழ்மனம். அதனால் செயற்கையாகப் பொருத்தப்பட்ட கை, கால்களை அனிச்சையாகச் செயல்பட ஆழ்மனம் எப்போதும் கட்டளை விதிக்கும். இந்த ஆற்றலைதான் பயானிக் பயன்படுத்திக் கொள்கிறது.

மாற்றுப் பாதை இருக்கிறதே

தசைகளை இயக்குவதற்கு மூளையிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞையின் வழித்தடத்தைப் பழுது பார்க்கக்கூடிய திறன் செயற்கைத் தண்டுவடத்துக்குக் கிடையாது. அதற்குப் பதிலாக மாற்றுப் பாதையைத் தேட இந்தக் கருவி தூண்டுகிறது. உதாரணமாக, வலதுகை பழக்கம் உள்ள ஒருவருக்குச் செல்பேசி அழைப்பு வரும்போது வலது கை செயலிழந்து இருந்தால், உடனடியாக இடது கையைக் கொண்டு செல்லை எடுத்துவிடுவார் அல்லவா? அப்போது வழக்கமான தசை செயல்பாடு முடக்கப்பட்டிருந்தாலும் மாற்று வழியை மூளை தேடிக்கொள்கிறது. அது போலத்தான் அனிச்சையான இயக்கத்தை ஊக்குவிக்கும் நரம்புகளின் சமிக்ஞையை உடல் பாகங்களுக்குச் செயற்கைத் தண்டுவடம் அனுப்புகிறது. இடையில் பழுதான வழித்தடத்தைத் தாண்டி சென்றுவிடுகிறது.

இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் அறுவைசிகிச்சை இன்றி நரம்பியல் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்கின்றனர் இதை வடிவமைத்த ஆஸ்திரேலிய நிபுணர்கள். இதுவரை செம்மறியாடுகள் மீது மட்டுமே இந்தக் கருவி பரிசோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது. 2017-ல் மனித உடலில் செயற்கைத் தண்டுவடத்தைப் பொருத்திப் பரிசோதிக்க இருப்பதாக ராயல் மெல்போர்ன் மருத்துவமனை அறிவித்துள்ளது.

ஆஸ்டின் சுகாதாரத் தண்டுவடப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களிலிருந்து மூன்று பேர் இந்தச் சிகிச்சைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இந்தப் பரிசோதனையில் செயற்கைத் தண்டுவடம் வெற்றிகரமாக இயங்கினால், முடக்குவாத நோயாளிகளுக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக அது திகழும்!

நன்றி: தி கார்டியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்