நலம்தானா 11: மருந்துகளைத் திடீரென நிறுத்தலாமா?

By டாக்டர் சு.முத்துச் செல்லக் குமார்

நீரிழிவு, தைராய்டு, கொலஸ்ட் ரால் போன்ற பல்வேறு தொற்றா நோய்களைக் கொண்ட நோயாளிகளில் பலர், மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் தாங்களாகவே மருந்துகளை நிறுத்திவிடுகிறார்கள். இதுபோல் நீண்டகால நோய்களுக்கான மருந்துகளைத் திடீரென நிறுத்திவிடுவது சர்வசாதாரணமாக இருக்கிறது. பிறகு பிரச்சினை அதிகமானவுடன் மருத்துவரைச் சந்தித்துப் புகார் சொல்வார்கள்.

இதைப் போன்றே காச நோய்க்கு 3-4 மருந்துகளைப் பல மாதங்கள் தொடர்ந்து தொய்வின்றிச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குணமடைய முடியும். எய்ட்ஸ் நோய்க்குப் பல மருந்துகளைக் கூட்டுமருந்துகளாகத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்த இரண்டு நோய்களுமே சிலருக்கு இருக்கலாம். அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த நோய்களுக்கான மருந்துகளில் ஏதாவது ஒன்று கிடைக்கவில்லை என்று நிறுத்திவிடக் கூடாது. சிலர் எவ்வளவு காலம்தான் இவ்வளவு மருந்துகளையும் சாப்பிடுவது என்று சலித்துப் போய் முழுவதுமாகக்கூட நிறுத்திவிடுவார்கள்.இது மிகவும் ஆபத்தான போக்கு. இதனால் நோய் நிலைமை மோசமடைந்து, உடல்நிலை சீர்கெட்டு உயிருக்குப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

வரவேற்கும் ஆபத்துகள்

காச நோய், எய்ட்ஸ் மட்டு மல்லாமல் நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு, இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் போன்ற நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் எந்தக் கட்டத்திலும் மருந்து மூலம் தரப்படும் சிகிச்சையைத் திடீரென நிறுத்திவிடக் கூடாது.

இதுபோன்ற நோய்களுக்கு மருந்து உட்கொள்ளும்போது நோய் கட்டுப் பாட்டில் இருக்கும். பரிசோதனை செய்துபார்த்தால் நார்மலாக இருக்கும். அதற்காக நோய் சரியாகிவிட்டது, குணமாகிவிட்டது என்று அர்த்தமில்லை. மருந்துகளை நிறுத்தும்போது மீண்டும் நோய் தீவிரமடையும்.

திடீரென மருந்தை நிறுத்துவது நோயின் தன்மை அதிகரிக்கவும், உடல் நிலை மோசமாவதற்கும், உயிருக்கு ஆபத்தாகும் நிலையில் அவசர சிகிச்சைக்கும்கூட வழிவகுத்துவிடும்.

சிகிச்சைக்கு விரோதம்

சிலர் விரதம், நோன்பு இருப்பார்கள். அந்த நிலையில் எத்தனை மணிக்கு உண்கிறார்கள் என்பதை முன்பே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களது உணவு முறைக்கு ஏற்ப நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு, கொலஸ்ட்ரால், இதய, சிறுநீரக நோய்களுக்கு மருந்துகளில் சிறிது மாற்றம் செய்து மருத்துவர்கள் கொடுப்பார்கள்.

ஆனால், சிலரோ நாம்தான் உணவே சாப்பிடவில்லையே அதனால் மருந்துகள் எதுவும் தேவையில்லையெனத் தாங்களாகவே நிறுத்திக்கொள்வார்கள். அது பிரச்சினைக்குக் காரணமாகும்.

அதைப் போன்றே சிலர், விருந்துக்குப் போய் எல்லா உணவு வகை களையும் ஒன்று விடாமல் ஒரு கை பார்த்துவிடுவார்கள். பிறகு அவர்களே மருந்தை அதிகமாகப் போட்டுக்கொள்வார்கள். இரண்டுமே தவறு.

நீண்டகால நோய் உள்ளவர்கள், மருந்துகளைத் திடீரென நிறுத்தக் கூடாது, இடைவெளி விடக் கூடாது, அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

நீண்ட கால நோய்கள் கட்டுப்பாடின்றி இருக்கும் எந்த நோயாளியும் விரதம், விருந்து ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. அத்துடன் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டு மருந்து சார்ந்த சிகிச்சையில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்