சென்னை 376: ஆரோக்கியம் காப்பதில் என்றும் முதலிடம்

By டி. கார்த்திக்

இந்தியாவின் முதல் அலோபதி மருத்துவமனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே கம்பீரமாக நிற்கும் அரசு பொது மருத்துவமனைதான். இதன் ஒரு பகுதியான எம்.எம்.சி. எனப்படும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, நாட்டின் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. இந்தக் கல்லூரியின் வயது 180. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் விதை விதைக்கப்பட்டு இன்று பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்திருக்கும் இந்த மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் ஏராளமான வரலாற்றுச் சுவடுகளை உள்ளடக்கியவை. தேசிய அளவில் மதிக்கப்படும் முன்மாதிரிகளும்கூட.

தரமான ஒரு மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி இன்றைக்குப் புகழ்பெற்றதாக இருந்தாலும், அதற்கான முதல் அடி சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் வைக்கப் பட்டது. மருத்துவக் கல்லூரியின் இன்றைய வயதைப் போல இரண்டு மடங்கு பழமையானது அரசு மருத்துவ மனை. இதன் வயது 351 ஆண்டுகள்!

கோட்டை மருத்துவமனை

சென்னை நகரில் ஆங்கிலேயர்களின் தடம் பதிந்த முதல் இடம், புனித ஜார்ஜ் கோட்டை. இந்தக் கோட்டையைச் சுற்றித்தான் அந்தக் காலச் சென்னை வளர ஆரம்பித்தது. சென்னையின் மருத்துவ வளர்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டதும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகம்தான்.

நோயுறும் ஆங்கிலேய சிப்பாய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் 1664-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி சிறிய மருத்துவமனை ஒன்றை ஆங்கிலேயர்கள் அமைத்தார்கள். 1690-களில் சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த எலிஹு யேல், மருத்துவமனைக்குப் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

1700-களின் மத்தியில் பிரெஞ்சுப் படையினர் சென்னையைக் கைப்பற்ற ஆங்கிலேயர்களுடன் போரிட்டனர். புனித ஜார்ஜ் கோட்டை மீதும் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இந்த மருத்துவமனை, தற்போது உள்ள சென்ட்ரல் ரயில்வே நிலையத்துக்கு எதிரே இடம் மாற்றப்பட்டு, பொது மருத்துவ மனையாகச் செயல்படத் தொடங்கியது.

மருத்துவக் கல்லூரி சின்னம்

முறைப்படுத்திய மார்டிமர்

அந்தக் காலகட்டத்தில் இந்த மருத்துவமனையில்தான் ஏராளமான ஐரோப்பியர்கள் மருத்துவப் பயிற்சி யும், அலோபதி மருந்து தயாரிக்கும் பயிற்சிகளையும் பெற்றார்கள். சிறப்பாகப் பயிற்சி பெற்றவர்கள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவியாக மெட்ராஸ் மாகாணத்துக்கு உட்பட்ட மற்ற மருத்துவ மையங்கள், மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1820-ம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி இந்த மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக அங்கீகரித்தது. 1827-ம் ஆண்டு மருத்துவமனையின் கண்காணிப் பாளராக டாக்டர் மார்டிமார் நியமிக்கப் பட்டார். இவர்தான் இதை மருத்துவப் பயிற்சிப் பள்ளியாக முறைப்படுத்தி உருவாக்கினார். அப்படி உருவான இந்த மருத்துவப் பயிற்சிப் பள்ளியை அப்போதைய மெட்ராஸ் மாகாண ஆளுநர் சர் பிரெட்ரிக் ஆடம்ஸ், 1835-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி திறந்து வைத்தார்.

வந்தது கல்லூரி

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே இங்கே மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 1842-ம் ஆண்டில் இந்தியர்களும் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் மருத்துவப் பயிற்சிப் பள்ளியில் மருத்துவம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டார்கள். மருத்துவப் படிப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான காலம் 5 ஆண்டு என, அப்போதுதான் வரையறுக்கப்பட்டது.

இந்த மருத்துவப் பள்ளியை மருத்துவக் கல்லூரியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று 1850-ம் ஆண்டில் பள்ளி நிர்வாகம் ஆங்கிலேய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதை அரசும் ஏற்றுக்கொள்ள, 1850-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் இருந்து மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இங்கே படித்த முதல் பேட்ஜ் மாணவர்கள் 1852-ம் ஆண்டில் மருத்துவப் பட்டயம் பெற்றார்கள்.

பெண்களுக்கு ஏற்றம்

இதன்பிறகு 1857-ம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டது. அப்போது முதல் சிறப்பு மருத்துவம், அறுவைச் சிகிச்சை மருத்துவப் படிப்புகளும் தொடங்கப்பட்டன. 1870-களில் மருத்துவக் கல்லூரியில் சேர பெண்களும் அனுமதிக்கப்பட்டார்கள். பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஷார்லீப் என்ற பெண் இந்த மருத்துவக் கல்லூரியில் முதலில் சேர்ந்தார். அதன் பின்னர் மிசஸ் ஒயிட், பீலே மற்றும் மிஷேல் ஆகிய மூன்று ஆங்கிலோ - இந்தியப் பெண்களும் இந்தக் கல்லூரியில் மருத்துவம் பயின்றனர். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி இங்கே மருத்துவம் பயின்று 1912-ம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

நவீன வளர்ச்சி

சுதந்திரத்துக்குப் பிறகு 1988-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்துடன் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி இணைக்கப்பட்டது. 180 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி கோலோச்சி வருகிறது. அதேநேரம், இக்கல்லூரியுடன் இணைக்கப்பட்ட அரசு பொது மருத்துவமனையின் பெயர் மாறிவிட்டது. 1991-ம் ஆண்டில் பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உடல், இங்குக் கொண்டு வரப்பட்டுப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் நினைவாக, 2011-ல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டது. கல்லூரியின் பெயர் மாறவில்லை.

சென்னை மத்தியச் சிறைச்சாலையின் அனைத்துப் பிரிவுகளும் புழல் சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, பழைய மத்தியச் சிறைச்சாலை இடிக்கப்பட்டு அந்த இடம் மருத்துவக் கல்லூரி விரிவாக்கத்துக்காக அளிக்கப்பட்டது. இங்கு 3,25,000 சதுர அடியில் 6 அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மிகப் பழமையான மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி தேசிய அளவில் மதிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக, இன்றைக்கும் விளங்கிவருகிறது. ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாமல், சகல தரப்பினரும் தரமான சிகிச்சை பெறும் உயர்தர அரசு மருத்துவமனையாக இந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்