உணவுப் பழக்கத்தை மாற்ற முடியும்

By செய்திப்பிரிவு

தொகுப்பு: கௌரி

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை ஒரே நாளில் அனைவராலும் கைவிட்டுவிட முடியாது. ஆனால், ஒரு நாள் ஒரு சிறிய முயற்சி என்ற அளவில் உங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மாற்றுவதை இவ்வளவு பெரிய விஷயமாகப் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். நாள் ஒன்றுக்கு உணவுப் பழக்கத்தில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்துவந்தாலே, நாளடைவில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பேண ஆரம்பித்துவிடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

போதுமான தூக்கம்

உணவுப் பழக்கங்களை மாற்றுவதற்கும் போதுமான தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. போதுமான தூக்கம் இல்லாமல் சோர்வாக இருக்கும்போது, கவனக்குறைவுடன் அதிகமான அளவில் ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுவதற்கு சாத்தியம் அதிகம். அத்துடன், போதுமான தூக்கம் இல்லாதது ஹார்மோன்களின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது பல வகையான உடற்கோளாறுகளை உருவாக்கும். அதனால், ஒரு நாளில் ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.

காலை உணவை மறக்கக் கூடாது

காலை உணவை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக் கூடாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க நினைப்பவர்கள் அன்றாடம் காலை உணவு உண்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு நாள் முழுக்கச் சீரான உடல் செயல்பாடுகள் வேண்டுமென்றால், நிச்சயமாகக் காலை உணவை உண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

புரதம், நார்ச்சத்து, குறைவான சர்க்கரை இருக்கும் உணவைக் காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் சேர்க்கப்பட்ட முட்டை ஆம்லேட், முழு தானியங்கள், வெண்ணெய், தயிர் போன்றவற்றைக் காலை உணவாகக் கொள்ளலாம்.

தண்ணீருடன் தொடங்குங்கள்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேநீர், காஃபி அருந்துவதற்குப் பதிலாக, ஒரு டம்ளர் தண்ணீருடன் நாளைத் தொடங்குவது சிறந்தது. வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். உடலின் கழிவை அகற்றுவதற்கும் மனத்துக்குப் புத்துணர்வு அளிப்பதற்கும் இது உதவும். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லாவிட்டால் அதைப் பழக்கிக்கொள்வது சிறந்தது.

மதிய உணவைக் கொண்டுவாருங்கள்

மதிய உணவை வீட்டிலிருந்து கொண்டுவந்து சாப்பிடுவதுதான் உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் காக்கலாம். இரவு உணவை முடித்தவுடன் அடுத்த நாள் மதிய உணவுக்கு என்ன கொண்டுசெல்லலாம் என்று திட்டமிடுவது கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க உதவும். காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை ஏதோவொரு வகையில் மதிய உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

நொறுக்குத்தீனியில் கவனம்

நொறுக்குத்தீனி சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நீங்கள் சாப்பிடும் நொறுக்குத்தீனி ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கிறதா என்பது முக்கியம். சிப்ஸ், பிரெஞ்சு பிரைஸ் போன்ற நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாகக் கைநிறைய பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பசிக்கும்போது, ஆப்பிள் அல்லது பாதாம் பருப்புகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது சிறந்தது. இந்த உணவு வகைகள் ரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் புரதம், நார்ச்சத்தை அதிகரிக்கின்றன.

திட்டம் நல்லது

ஒருவேளை, அலுவலகதுக்கு உணவு கொண்டுவர முடியாமல், உணவகத்துக்குச் சாப்பிட செல்வதாக இருந்தாலும், அங்கே சென்று என்ன சாப்பிடலாம் என்று யோசிக்க வேண்டாம்; உணவகத்துக்கு உள்ளே செல்வதற்கு ஐந்து நிமிடம் முன், ஆரோக்கியமான உணவு ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டுச் செல்வது நல்லது. இதன்மூலம் திட்டமின்றி, ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.

நாள் முழுவதும் தண்ணீர்

நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். எப்போதும் உடல் நீரேற்றத்துடன் இருந்தால், உணவைச் சரியான அளவில் எடுத்துக்கொள்வீர்கள். ஒருவேளை, உடலில் போதுமான நீர் இல்லையென்றால், பசி எடுப்பதைப் போன்ற போலித் தோற்றத்தை உருவாக்கி உங்களை அதிக உணவை எடுத்துக்கொள்ளத் தூண்டும்.

சிறியதே அழகு

எப்போதும் சிறிய தட்டிலோ கிண்ணத்திலோ உணவு உண்பதைப் பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், பெரிய தட்டு, கிண்ணத்தில் சாப்பிடும்போது உங்களை அறியாமல் அதிகமான உணவை உட்கொண்டுவிடுவீர்கள். அதனால், பெரும்பாலும் சிறிய அளவில் சரியான இடைவெளியில் உணவு உண்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

பொருட்கள் வாங்குவதில் கவனம்

உணவுப் பொருட்கள் வாங்கும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்ப்பது உங்கள் பழக்கமாக இருந்தால், கடைக்குச் செல்வதற்கு முன்னாலேயே சிப்ஸ் வாங்கக் கூடாது என்று முடிவு எடுத்துவிட்டுச் செல்லுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான புரத உணவு உங்கள் பையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

உணவுப் பழக்கங்களை எழுதலாம்

உங்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் என்னவென்பதைத் தெரிந்துகொண்டால்தான் அவற்றை ஆரோக்கியமானதாக மாற்றுவது எளிமையாக இருக்கும். அதனால், உங்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை முதலில் பட்டியலிடுவது சிறந்தது.

பசிக்கும்போது சாப்பிடாமல் இருப்பது, காலை உணவுக்குப் போதிய நேரம் ஒதுக்காமல் இருப்பது, அன்றாடம் வெளியே சாப்பிடுவது, பசிக்காமல் சாப்பிடுவது, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது என இவை எல்லாமே ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள்தாம். இந்த ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களின் பட்டியலுக்கு அருகிலேயே அவற்றை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்பதையும் எழுதிவையுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்