வேலையால் காது மந்தம்

By டாக்டர் எல்.மகாதேவன்

தொழிற்சாலை ஒன்றில் 15 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். எனக்குச் சில நாட்களாகக் காதில் அதிகச் சத்தம் கேட்கிறது, சில நேரங்களில் காது கேட்பதில்லை. இதற்கு ஆயுர்வேதத் தீர்வு என்ன?

குமரேசன், துவாக்குடி.

செவித்திறன் நரம்பு பாதிப்பால், கேட்கும் திறன் குறையும் நிலைக்கு Sensorineural deafness என்று பெயர். இதில் காதின் உட்பகுதியில் உள்ள நரம்பு மண்டலம் (Auditory nerve) பாதிக்கப்பட்டு ஒருவருக்குச் செவித்திறன் குறைகிறது. கண் தெரியாதவர்களை இந்தச் சமூகம் வருத்தத்துடன் பார்க்கும். ஆனால், காது கேட்கவில்லை என்றால் சிரிக்கும். இந்த நோயாளிகளுக்குச் சில சத்தங்கள் மிகுந்த ஒலியுடன் கேட்கும். இரண்டு அல்லது மூன்று மனிதர்கள் சேர்ந்து பேசும்போது, புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். அதிக ஓசை உள்ள இடங்களில் செவித்திறன் குறையும். அதிக ஓசையுடைய சத்தங்களைக் கேட்பதிலும் சிரமம் ஏற்படும். பின்னணியில் சத்தம் இருந்தால், தொலைபேசி ஓசையையும் கேட்கச் சிரமம் ஏற்படும்.

மேலும் இவர்களுக்குத் தள்ளாட்டம், தலைச்சுற்றல் போன்றவை வரலாம். காதுக்குள்ளே கர்ணநாதம் என்று சொல்லும் வண்டு முழங்குவது போன்றோ, மணி அடிப்பது போன்றோ சத்தம் கேட்கும். இதற்கு ஆங்கிலத்தில் tinnitus என்று பெயர். செவித்திறன் குறைந்து வாந்தி ஏற்பட்டு மயக்கத்தை உண்டாக்குகிற நோய் உண்டு. இதற்கு ஆங்கிலத்தில் meniere’s disease என்று பெயர். இது தவிர எட்டாவது நரம்பு செல்லும் பாதையில் ஏற்படுகிற கட்டிகளுக்கு acoustic neuroma என்று பெயர். நமது உள் காதில் மிகவும் நுண்ணிய முடியைப் போன்ற திசுக்கள் காணப்படுகின்றன. இவை ஓசையை மின்காந்த அலைகளாக மாற்றி மூளைக்குச் செலுத்துகின்றன. இந்தத் திசுக்கள் பாதிக்கப்படும்போதோ, இந்த நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போதோ செவித்திறன் குறைகிறது.

சிகிச்சை

சிலருக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்படுகிறது. தாய்க்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் சில நேரம் காதைச் செவிடாக்கலாம். சிலருக்கு வயதாகும்போது செவித்திறன் குறையும். சிலருக்கு ரத்த நாள நோய்களால், செவித்திறன் குறையும். சத்தமான ஒலிகளைக் கேட்டல், ஒரு சில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல், மிகுந்த ஓசையுடைய இடங்களில் தொடர்ந்து வேலைபார்த்தல் போன்றவை எல்லாம் இதற்குக் காரணங்கள். இப்போது செவித்திறனை அதிகரிக்க மிஷின்களும், cochlear implant போன்ற அறுவை சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன.

ஆயுர்வேதத்தில் காது, ஆகாச பூதத்தின் இருப்பிடமாகும். அங்கு வாத, பித்த, கபங்களில் வாயுவின் சஞ்சாரம் இருக்கிறது. இந்த வெற்றிடத்தில் இருந்தே சத்தம் உருவாகிறது. வாதத்தின் வறட்சியாலும், குளிர்ச்சியாலும் ஒருவருக்கு வாத காலத்தில் செவித்திறன் குறைகிறது. எனவே, வாதத்தைத் தணிக்கும் மருந்துகள் சிறந்தவை.

ஆயுர்வேத மருந்துகள்

l பால் முதப்பன் கிழங்கால் காய்ச்சப்பட்ட பால் கஷாயம், அதில் க்ஷீரபலா 101 ஆவர்த்தி சேர்த்துச் சாப்பிடலாம்.

l அஸ்வகந்தா லேகியம் காலை, இரவு இரண்டு நேரமும் சாப்பிட்ட பிறகு பாலுடன் அருந்தலாம்.

l சிறுதேக்கால் காய்ச்சப்பட்ட நெய் (பத்ரதார்வாதி கிருதம்) இரவில் உறங்குவதற்கு முன் சாப்பிடலாம்.

l தலைக்கு பலாஅஸ்வகந்தா லாக்ஷாதி தைலம் தேய்த்துக் குளித்துவரலாம்.

l காதில் ஓட்டை இல்லையென்றால், சீழ் இல்லை என்றால் வசா லசூனாதி தைலம் என்கிற வசம்பு பூண்டால் காய்ச்சப்பட்ட தைலமும், ஏரண்ட சிக்ருவாதி தைலம் என்கிற ஆமணக்கு, முருங்கையால் காய்ச்சப்பட்ட எண்ணெயும் ஒன்றிரண்டு துளிவிட வேண்டும். சுமார் 3 நிமிடங்கள் வைத்திருந்து, பஞ்சால் துடைத்து எடுக்க வேண்டும்.

நவீன மருத்துவம் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆயுர்வேதத்தில் இதைச் செய்து வருகிறோம். குளிக்கும்போது பாதத்திலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதை பாத அப்யங்கம் என்று சொல்வார்கள். உளுந்து பதார்த்தங்களை, எண்ணெய் பதார்த்தங்களை, தயிர் போன்ற உணவு வகைகளை அதிகம் சாப்பிடக் கூடாது.

பொதுவாகவே கோயில்கள், வழிப்பாட்டுத் தலங்கள், பொது நிகழ்வு போன்ற இடங்களில் ஒலியை ரொம்பச் சத்தமாக வைக்கிறார்கள். அதிகாலையில் கோயில்கள், சர்ச், மசூதி போன்றவற்றிலிருந்து வரும் ஒலி, அந்தப் பகுதியின் இயற்கையான அமைதியைக் கெடுத்துவிடுகிறது. ஒலியின் அளவைக் குறைத்து வைக்க அரசு அறிவுறுத்த வேண்டும்.

என்னென்ன காரணங்கள்?

சிலருக்குப் பிறவியிலேயே காது கேட்காது. காதில் சீழ் வரும். வலி வரும், திடீரென்று அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்காமலேயே போய்விடும். சிறு வயதில் காதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், நாளடைவில் அது சீழாக மாறும். காதின் அடியில் உள்ள வர்மத்தில் அடிபட்டாலும் அது சீழாக மாறலாம். ஜலதோஷம் வந்து சிகிச்சை செய்யாமல் விட்டாலும் காது பாதிக்கப்படலாம். சிலருக்குக் காதில் எலும்பு அரிப்பு நோய் (Cholesteatoma) வரலாம். இது மூளைக்குக்கூடப் பரவலாம். சொந்தத்தில் திருமணம் முடித்தாலோ, மரபணு காரணமாகவோ பிறவிக் காது கேளாமை ஏற்படலாம். கர்ப்பக் காலத்தில் ஒரு சில மருந்துகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்குக் காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டு.

பிறந்தவுடன் குழந்தை அழாமல் இருந்தால் உடனே சிகிச்சையளிக்க வேண்டும். காதுக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் உண்டு. காது நன்றாக இருந்தால்தான் பேச முடியும். இப்போது நவீன மருத்துவத்தில் cochlear implant வந்துள்ளது. காதில் மெழுகு சேர்ந்து இருந்தாலும், தண்ணீர் புகுந்து இருந்தாலும் அதைச் சுத்தம் செய்யலாம். நோயாளிகள் அதிகச் சத்தத்தைக் கேட்கக் கூடாது. வாக்மேன் பயன்படுத்தக் கூடாது. செல்போனை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஜலதோஷத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. காதில் குச்சி, பேனா போன்றவற்றைப் பயன்படுத்தி குடையக் கூடாது.

இனி இந்த நோய்க்கான கைமருந்துகளைப் பார்ப்போம்.

l வெங்காயச் சாறு காது வலிக்குச் சிறந்த மருந்து. அதை எண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.

l கடுகை அரைத்துக் காதின் பின்புறத்தில் போட்டால் காதுவலியும், பழுப்பு வருவதும் குறையும்.

l கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், தேவதாரம், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், அமுக்கரா, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தேய்த்துவர காதுகளுக்கும் புலன்களுக்கும் பலன் கிடைக்கும்.

l கருஞ்சீரகப் பொடியை வெற்றிலைச் சாற்றில் அரைத்துக் காதைச் சுற்றிப் போட வலி, வீக்கம் குறையும். காதில் ஏற்படும் முழக்கத்தையும் குறைக்கும்.

l சுக்குப்பால் கஷாயம் காதின் முழக்கத்தைக் குறைக்கும்.

l பூண்டைத் தோல் நீக்கித் தலைப் பகுதியைக் கிள்ளிவிட்டுக் காதில் வைக்க, காது வலி குறையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்