படர்தாமரையில் எத்தனை வகைகள்?

By கு.கணேசன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

தொடை இடுக்கு படை

சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் தொடை இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுகிறது. பாமர மக்கள் இதை ‘கக்கூஸ் பத்து’ என்றும் ‘வண்ணான் படை’ என்றும் அழைக்கின்றனர்.

நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்குத் தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். காரணம், இங்கு ஏற்படுகின்ற அரிப்பு இரவு நேரத்தில்தான் ரொம்பவும் தீவிரமாக இருக்கும்.

தூக்கத்தில் அதை சொரியச் சொரிய நகங்களில் இருக்கிற பாக்டீரியாக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். இது ரத்தச் சர்க்கரையை இன்னும் அதிகரித்துவிடும். இதனால் நோய் தீவிரமடையும். ரத்தச் சர்க்கரையைச் சரியாக வைத்திருக்காவிட்டால், நோய் குணமாக அதிக நாள் ஆகும். அதிலும் கோடையில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

வழக்கமாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், தொப்புள், இடுப்பு, தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி, விரல் இடுக்குகள்... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு அதிகமாகத் தெரியும். இந்த இடங்களில் பாக்டீரியா தொற்றும்போது ஏற்படும் நோயை ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) என்கிறோம். பொதுவாக இந்த இடங்களில் உராய்வு அதிகமாக இருக்கும் என்பதால், மேல் தோல் அடிக்கடி சிதைந்துவிடும். இதன் வழியாகக் காளான் கிருமிகள் உடலுக்குள் நுழைவது எளிதாகிவிடும். இது தோல் மடிப்பு நோய்க்கு வழிவிடும்.

நகப் படை

இது பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் மட்டுமே ஏற்படுகிறது. நகத்தின் கடினமான பகுதியைக் காளான் கிருமிகள் பாதிக்கும்போது, நகம் தன் இயற்கை நிறத்தை இழக்கிறது. மினுமினுப்புத் தன்மையும் கடினத் தன்மையும் குறைகின்றன.

நகம், முதலில் வெள்ளையாகவும் அதைத் தொடர்ந்து மாநிறம் அல்லது கறுப்பு நிறத்துக்கும் மாறிச் சொத்தை ஆகிறது. இதனால் எளிதில் உடைந்துவிடுகிறது. இந்த நோய்க்குப் பொறுமையாகச் சிகிச்சைபெற வேண்டும். கை விரல் நகப் படைக்கு ஆறு மாதங்கள்வரைக்கும் கால் விரல் நகப் படைக்கு ஒரு வருடம்வரைக்கும் தொடர்ந்து சிகிச்சை எடுத்தால்தான் நோய் குணமாகும்.

கால் படை

‘சேற்றுப் புண்’ (Athlete’s foot) எனப் பாமரர்களால் அழைக்கப்படும் காளான் நோய் இது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பும் வலியும் தொல்லை தரும். கொப்புளங்கள் வெடித்துப் புண் உண்டாகும். சிலருக்கு இது கை விரல் இடுக்குகளில் ஏற்படுகிறது. ஈரமான இடத்தில் அதிக நேரம் கால்களை வைத்திருப்பதாலும் கை விரல்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகிறது. பெரும்பாலும் தண்ணீரில் அதிகம் புழங்கும் விவசாயிகள், தோட்ட வேலை, பண்ணை வேலை செய்கிறவர்கள் இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

என்ன சிகிச்சை?

எல்லாக் காளான் நோய்களுக்கும் தேமலுக்குச் சொன்னதுபோல் காளான் படைக் களிம்புகளை / பவுடர் களைத் தொடர்ந்து பூசி, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தகுந்த மாத்திரைகளைச் சாப்பிட்டுவந்தால் குணப்படுத்திவிடலாம். சிலருக்கு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தேவைப்படலாம்.

தடுக்க என்ன வழி?

சுயச் சுத்தம் மிக முக்கியம். தினமும் இரண்டு முறை சோப்பு போட்டுக் குளிக்க வேண்டியது அவசியம்.

முதல் நாள் உடுத்திய உடைகளைச் சோப்பு போட்டுத் துவைத்து, வெயிலில் உலர வைத்து, இஸ்திரி போட்டு மறுபடியும் உடுத்த வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர் உடுத்திய உடைகளை உடுத்தக்கூடாது.

அடுத்தவரின் சோப்பு, சீப்பு, ஷாம்பு, கைக்குட்டை போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது

இறுக்கமான கால் சட்டைகள், உள்ளாடைகளை அணியக்கூடாது.

பருத்தித் துணியாலான ஆடைகளே நல்லது.

வியர்வையை விரைவில் வெளியேற்ற முடியாத செயற்கை இழைகளால் ஆன ஆடைகளைஅணியக்கூடாது.

மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், நனைந்த ஆடைகளை உடனே களைந்துவிட்டு, உடலைச் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும். அதிக ஈரத்துடன் ரொம்ப நேரம் இருக்கக் கூடாது.

இறுக்கமான காலணிகள்/ காலுறை கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

கம்பளியில் தயாரிக்கப்பட்ட உடைகள், காலணிகளைத் தேவை யில்லாமல் அணிய வேண்டாம்.

அசுத்தமான இடங்களில் குழந்தை களை விளையாடவிடக் கூடாது.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவை எப்போதும் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கை, கால் விரல் இடுக்குகளில் அதிகம் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

காளான் படை உள்ளவர்களைத் தொட்டுப் பழகுவதும் நெருங்கிப் பழகுவதும் கூடாது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்