நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு

By டாக்டர் வி.விக்ரம்குமார்

“எனக்கெல்லாம் காய்ச்சல் வந்து பத்து வருஷம் இருக்கும்! இப்போதான் திரும்ப வந்திருக்கு” எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, “எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே!” என நடுங்கிக்கொண்டே பிதற்றும்போது, ‘அது போன மாசம், இது இந்த மாசம்' எனக் கிண்டலடிக்கும் அளவுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நம் உடலில் குறைந்துவருகிறது.

உணவே அடிப்படை

ஆசைக்காக, ஆனந்தமாக மழையில் நனைந்துவிட்டு ‘ஹச்-ஹச்’ எனத் தும்மாமலும், `லொக்-லொக்’ என்று இருமாமலும் யாராவது இருக்கிறார்களா?

ஆனால், கேழ்வரகுக் கூழையும் கம்பஞ்சோற்றையும் சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே நாத்து நட்ட விவசாயிகளுக்குத் தும்மலும் இருமலும் அவ்வளவு சீக்கிரமாக ஏன் வரவில்லை? இயற்கை உணவே காரணம். நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே, நோய் எதிர்ப்பாற்றல் எனும் அஸ்திவாரம் உருவாகிறது என்பதை அறிந்து சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதே இதற்கான முதல் படி.

எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது எப்படி?

நோய் வராமல் இருப்பதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் முறைகளைப் பின்பற்றினாலே போதும். இரவு நேரத்தில் நன்றாக உறங்கி, காலை உணவைத் தவிர்க்காமல் இருந்தாலே நோய் எதிர்ப்பாற்றல் இயல்பாக அதிகரிக்கும். ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Menta# Stress) ஏற்படும்போது, ‘Cortisol’ ஹார்மோனின் அளவு அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவு குறைகிறது. எனவே, தேவையற்ற கவலைகளை மறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

`நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் அண்டாது’ என மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே, பல நோய்கள் தலைகாட்டாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

கருப்பட்டி

சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், வணிக வியூகத்தால் பிரபலப்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரையிடம் அடிமையாகக் கிடக்கிறோம். வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட்ட சில மணி நேரத்துக்கு, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, சர்க்கரை பயன்பாட்டை அறவே தவிர்த்து, பனங் கருப்பட்டியை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது.

`சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று காந்தி முன்மொழிந்த வார்த்தைகளே, கருப்பட்டியின் பயன்களை விளக்கப் போதுமானது.

சுக்குக் காபி, இஞ்சி டீ

“குளிர்காலம் வந்துட்டா போதும், இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்ல `சுக்கு, இஞ்சினு’ தொல்லை பண்ண ஆரம்பிச்சிடும்” எனப் பாட்டியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, மழைக் காலங்களில் சுக்கு காப்பி, இஞ்சி டீயை அடிக்கடி குடிப்பதன் பயனைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். இவற்றைக் குடிப்பதன் மூலம் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாவதால் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. நோய்களைத் தடுக்கத் துணைசெய்கிறது இஞ்சி என்பது சமீபத்திய கண்டறிதல்! இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி சொல்லைத் தட்டாமல் கேட்போம்!

மஞ்சள் மகிமை

மஞ்சள் தூளை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட மஞ்சள், டி.என்.ஏ. பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cel# membrane) செயலாற்றி, நோய் எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துகிறது.

வண்ண வண்ணப் பழங்கள்

பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற `சிட்ரஸ்’ வகைப் பழங்களில் உள்ள Hesperidin மற்றும் Quercetin போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களையும் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

பிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெரு நெல்லிக்காய் உடல் செல்களைப் பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாற்றை அவ்வப்போது அருந்தலாம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை எப்போதும் தக்கவைக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சித்த மருத்துவ மருந்தான நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம்.

தீனிகளுக்கு விடை கொடுப்போம்

மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பல வகையான காய்கறி சூப்பில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அருந்தலாம். மிளகும் ஏலக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. காய்கறிகள், கீரைகளை அன்றாடம் சாப்பிட்டுவந்தால், எந்த நோய்க்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாகவே குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் சற்றுக் குறைவாகவே இருக்கும். சிறிய குழந்தைகளிடம் காட்டும் அதே அக்கறையை, மீண்டும் குழந்தைகளாக மாறிவிட்ட வயதானவர்களிடமும் செலுத்தத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுக்க மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சத்தான உணவைச் சாப்பிட்டு, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வழிகளைக் கண்டறிந்து நோயில்லாமல் நிம்மதியாய் வாழப் பழகுவோம்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்