முதுமையும் சுகமே 07: கூட்டு மருத்துவம் தரும் கூடுதல் பலன்

By டாக்டர் சி.அசோக்

வறுமையில் வாழ்க்கையைத் தொடங்கி சுய உழைப்பால் வாழ்க்கையை வசந்தமாக்கிக்கொண்ட பலரில் ஆனந்தகுமாரும் (72) ஒருவர். ஆனால், பெயருக்கு ஏற்றாற்போல் அவருடைய வாழ்க்கை அப்படி ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை என அவர் பேசியதில் இருந்தே புரிந்துகொள்ள முடிந்தது.

வழக்கமான சொத்துப் பிரச்சினைதான். ‘சொத்தைப் பிரிக்க அப்படி ஒன்றும் அவசரமில்லையே’ என்று அவர் சொன்னதிலிருந்து, தேர்வடம்போல் முறுக்கிக்கொண்டன ரத்த சொந்தங்கள்.

“பத்துத் தெரு தள்ளி இருந்தாலும் வாரிசுகளும் வருவதில்லை, பேரப்பிள்ளைகளையும் அனுப்புவதில்லை டாக்டர்..." என்று அவர் சொன்னபோது, ஆனந்தகுமாரின் மனைவிக்குக் கடைக்கண்களில் கரைபுரண்ட கண்ணீர் காதருகே உள்ள நரைமுடிக்குள் புகுந்தது.

‘வீட்டுக்கு வீடு வாசப்படிபோல்' இந்தப் பிரச்சினை இன்று பரவலாகிவிட்டது. ஆனந்தகுமாருக்கு மூளை நடுக்குவாதமும் இருந்தது.

ஏன் வருகிறது?

காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் மனதைப் பக்குவப்படுத்துவதிலும், வந்திருக்கும் நோய் பற்றிய முழுமையான புரிதலிலும்தான் முதுமையைச் சுகமாக்கிக்கொள்ள முடியும். மூளை நடுக்குவாதம் நம்மையும் பாதிக்காமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.

மூளை நடுக்குவாத நோய் 70 வயதிலிருந்து 80 வயதுக்கு மேலேதான் அதிகப் பாதிப்பைத் தருகிறது. நடுக்குவாதம் வர இன்ன காரணம் என்று தெளிவாகச் சொல்ல முடியாவிட்டாலும், மனநல நோய்கள், வலிப்பு நோய்கள், தூக்க விழிப்பு போன்றவற்றுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் காரணமாக இருக்கலாம்.

மறதிநோய் (Dementia), மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்தோ, பரம்பரை மரபணு குறைபாடு சார்ந்த நோய்களாலோ, விபத்துக்களைத் தொடர்ந்து ஏற்படும் மூளை பாதிப்புகளாலோ இந்த நோய் ஏற்படலாம்.

மருந்துக்குக்கூட உடலைக் கவனிக்காமல் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை என வாழ்பவர்களுக்கு, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உருவாகும் MPTP என்கிற Methyl phenyl tetrahydropyridine நச்சுக்களாலும், சில புரத மூலக்கூறுகள் (synuclein lewy bodies) போன்றவற்றால் நடுக்குவாத நோய் வரலாம்.

எப்படி அறிவது?

எனக்கு நடுக்குவாத நோய் இருக்குமோ? எப்படித் தெரிந்துக் கொள்வது?

சாதாரணப் பரிசோதனைகளில் தெரிந்துகொள்வது சற்றுக் கடினம்தான்! சிறப்புப் பரிசோதனை களான SPECT / PET ஸ்கேன், மரபணுப் பரிசோதனைகளில் தெரிந்துகொள்ளலாம். இவை சற்று விலை கூடிய பரிசோதனைகள்! அதேநேரம், ஒரு தேர்ந்த மருத்துவரால் நோயாளியின் அறிகுறிகளை வைத்தே நோயைக் கண்டுபிடித்துவிட முடியும். அதேபோல அரசு சிறப்பு மருத்துவமனைகளில் இருக்கும் நரம்பியல் நிபுணர்களை அணுகி சந்தேகத்துக்கான தெளிவையும் சிகிச்சையையும் நாடலாம்.

பூனைக்காலி, அமுக்கரா போன்ற பல சித்த மருந்துகள் நவீன மருத்துவத்தைக் காட்டிலும் பாங்கான பலனை நடுக்குவாதத்துக்குத் தரக்கூடியவை. கூடவே யோகப் பயிற்சி சேர்ந்த ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளும் நடுக்குவாத நோயாளர்களின் உடலுக்கு உரம் தரும்.

என்ன சாப்பிடலாம்?

உணவில் கூடுதல் அக்கறை தேவை. குறிப்பாக, புரத உணவும் நடுக்குவாத மருந்துகளும் கலந்து உறவாடுவதில் கவனம் வேண்டும்.

நவீன மருந்தான L-Dopa எடுத்துக்கொள்பவர்கள் காலை, மதிய உணவில் அதிக புரதச்சத்தைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறி, கீரைகளைத் தேவையான அளவு உட்கொள்வது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.

Vit B6 தாங்கிய பைரிடாக்சின் உணவுகளான உருளை, வாழைப்பழம், தானியங்களின் அளவைக் குறைக்க வேண்டும். கூடவே மாங்கனீசு உள்ள பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட் வகைக் காய்களையும், மஞ்சள், திராட்சைப் பழம் (கொட்டையுடன் உள்ள பன்னீர் வகை), ஆரஞ்சு, கிரீன்டீ, அமுக்கரா கிழங்கு, Ginkgo biloba தாங்கிய சத்து பானங்கள், வைட்டமின் D3, வைட்டமின் E தாங்கிய உணவு வகைகளை உட்கொள்ளலாம்.

ஏற்கெனவே ஒருவருக்கு உள்ள நோய்களைக் கருத்தில் கொண்டு மருந்துகளையும், உணவுத்திட்டத்தையும், மருத்துவமுறையையும் மாற்றுவது நோயாளர்களுக்கு உடல் அளவிலும் மன அளவிலும் ஆறுதலைத் தரும்.

 

என்ன செய்ய வேண்டும்?கூட்டு-மருத்துவம்-தரும்-கூடுதல்-பலன்

# 60 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

# மருத்துவர் ஆலோசனைப்படி தகுந்த உடற்பயிற்சியைத் தினசரி 1 மணி நேரம் கட்டாயம் செய்ய வேண்டும்

# மனதை உரமாக்கும் மனப்பயிற்சிகள் அவசியம். குறிப்பாக, மருத்துவர் ஆலோசனைப்படி யோகப் பயிற்சி

# பச்சைக் காய்கறிகள், பழங்கள், பருப்பு-விதை வகைகள் தினசரி உணவில் இருக்க வேண்டும்

# சித்த மருந்துகள் சிறந்த பலனைத் தரும்

# நரம்பியல் நிபுணரிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்

 

கட்டுரையாளர்,

குடும்ப நல - முதியோர்

மருத்துவ ஆலோசகர்

தொடர்புக்கு: drashokshpl@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

வலைஞர் பக்கம்

41 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்