முதுமையும் சுகமே 03: எழும்போதும் கவனம் அவசியம்

By செய்திப்பிரிவு

அது ஒரு மழைக்காலம், ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆற்றின் மறுகரைக்கு செல்வதற்கு ஆற்றின் மேல் ஒரு பழைய மரப்பாலம் இருந்தது. மரப்பாலத்தில் பேரனும் தாத்தாவும் செல்கிறார்கள்… காற்றில் பாலம் ஆடுகிறது. “என் கைகளை பிடித்துக் கொள்” என தாத்தா பேரனிடம் சொல்கிறார்.

“மாட்டேன்! நீ என் கைகளை பிடித்துக்கொள். ஏன் என்னை பிடித்துக் கொள்ள சொல்கிறாய்?” என்று கேட்கிறான் பேரன்.

பிறகு “தாத்தா, நான் உன் கையைப் பிடித்தால், காற்றின் வேகத்தில் மரப்பாலத்தின் ஆட்டத்தில் என் கையின் பிடிமானம் தளர்ந்துவிடும், ஆனால் நீ என் கைகளை பற்றிக் கொண்டால், எந்த சூழலிலும் நீ என்னை விட்டுவிட மாட்டாய்…” என்கிறான்.

அப்போது தாத்தாவின் கண்கள் பெருமிதத்தில் நனைந்தன. பேரனின் நம்பிக்கை கண்டு அவருடைய உள்ளம் வானத்துப் பறவையாய் லேசானது.

உடலில் நிகழும் மாற்றங்கள்

முதியோர் முதலில் முதுமையில் தங்கள் உடலில், உடல் இயங்கு இயலில் நிகழும் மாற்றங்களை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.

முதுமையில் மத்திய நரம்பு மண்டலத்தில், மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்றால், மூளை செல்களால் நியூரான்களின் எண்ணிக்கை குறைவதால் நினைவாற்றலில் தடுமாற்றம், குழப்பம் ஏற்படலாம்.

செவித்திறன் இழப்பு, கண்களில் உள்ள லென்ஸில் விரைப்புத்தன்மை ஏற்படுவதால் பார்வை மங்குதல், கண்புரை, தண்டுவட நரம்புக் கற்றைகளில் உள்ள செல்களான Anterior horn cells, Dorsal column cells போன்றவற்றிந் எண்ணிக்கையில் இழப்பு ஏற்படுவதால் தசைகளில் பலவீனம், தளர்வு, தேய்மானம் போன்றவை அதிகரிக்கும்.

இரண்டாம் வகை தசைநார் இழப்பு, தசை செல்களின் (Muscle satellite cell) எண்ணிக்கை குறைபாட்டால் தரையில் சமநிலையில் நிற்க முடியாமல் சிறு தடுமாற்றமும் விழவேண்டிய நிலைமையும் ஏற்படலாம்.

இதயம் பத்திரம்

இதய மண்டலத்தை எடுத்துக்கொண்டால் இதயத் துடிப்பு குறைந்து போவதால் உடற்பயிற்சியின் திறனும் குறைந்து போகிறது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இதய ஆரோக்கியம் நன்றாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

வயது ஏறஏற ரத்தக்குழாய்களின் உட்புற சுவரில் (Tunica media and endothelial layer) தடிப்பும் விரைப்பும் ஏற்படுவதால் உயர் ரத்தஅழுத்தம், வென்ட்ரிகிள் அறைப் பருமனாதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத் தசை செல்களின் (cardiac myocytes) இழப்பால், இதய தசைகளின் இயக்கமும் குறைந்து போகிறது,

இந்த இடத்தில் முதியோர் முக்கியமாக கவனிக்க வேண்டியது படுக்கையில் படுத்திருந்தால் எழவேண்டிய தேவை வந்தால், தடாலடியாக எழுந்து நிற்க கூடாது. இதனால் ரத்தஅழுத்தத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். அதாவது கால் பகுதிகளுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அடர்த்தி குறைந்து போவதால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரலாம். இதற்கு பெயர்தான் Postural Hypotension.

பார்த்துச் செல்லுங்கள்

குறிப்பாக, இந்திய முறைக் கழிவறைகளை பயன்படுத்துவோர், உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். முடிந்தவரையில் நடுஇரவில் கழிப்பறை செல்பவர் துணையுடன் செல்ல வேண்டும் (அ) கழிவறை கதவுகளைத் தாழிட கூடாது.

நடு இரவு (அ) அதிகாலை வேளைகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவர்களை அடிக்கடி மருத்துவமனைகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கியக் காரணம் மேலே சொன்னவைதான்.

அது மட்டுமல்ல, இன்றைக்கு ஓசைப்படாமல் குடும்பங்களின் நிம்மதியை குலைத்து, பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்க வைப்பது சிறுநீரகச் செயல் இழப்புத்தான். 20-ம் நூற்றாண்டிலும் உடல் உறுப்புகளுக்குள்ளும் நாம் காட்டும் பாகுபாடுதான் இதற்கு காரணம்.

சிறுநீரகத்துக்கு கூடுதல் கவனம்

மூளைக்கும் இதயத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலின் கழிவை வெளியேற்றும் சிறுநீரகங்களுக்கு கொடுப்பதில்லை. எப்படி ஊரையே துப்புரவு செய்யும் துப்புரவு தொழிலாளரை மட்டமாக பார்க்கிறோமோ அப்படி.த்தான் சிறுநீரகத்தையும் நடத்துகிறோம்.

சிறுநீரகத்தின் செயல்பாடு 80% பாதிக்கப்படும் போதுதான் அறிகுறிகள் வெளியே தெரிகின்றன. எனவே, நீரிழிவு நோயாளர், ரத்த அழுத்த நோயாளர், அதிக அளவு மருந்துகளை உட்கொள்பவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிறுநீரகத்தின் செயல்திறன் அறியும் எளிய பரிசோதனைகளை செய்துபார்த்துக்கொள்வதன் மூலம் கண்கெட்ட பிறகு தவிக்கும் புலம்பலில் இருந்து தப்பிக்கலாம்.

சிறுநீரகங்களில் உள்ள நெப்ரான்கள் என்கிற வடிகட்டிகளின் எண்ணிக்கை முதுமையில் குறையும். அதேபோல GFR என்கிற Glomerular Filteration Rate குறைந்து போவதால் உடலில் தாதுநீர் சத்துக்களில் இழப்போ, அதிகப்படியான நீர் உடல் திசுக்களில் தங்கி வெளியேற முடியாமல் போவதோ நடக்கலாம்.

அதேபோல நெப்ரான்களில் உள்ள Tubular செயல்திறன் குறைவதால் உட்கொள்ளும் மருந்துகளின் நச்சை வெளித்தள்ள முடியாமலும் போகலாம். இதயம், மூளையைப் போலவே சிறுநீரகங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

(தொடர்ந்து பேசுவோம் )

- டாக்டர் சி. அசோக்

கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்

தொடர்புக்கு: drashokshpl@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

12 mins ago

சினிமா

15 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

13 mins ago

சினிமா

31 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

25 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

39 mins ago

வலைஞர் பக்கம்

43 mins ago

சினிமா

48 mins ago

மேலும்