செயலி என்ன செய்யும்? 10 - மால்வேருக்கு முடிவு கட்ட முடியுமா..?

By வினோத் ஆறுமுகம்

திட்டமிட்டு, செயலிகளின் உதவியுடன் சமூக விரோதிகள் நம் தகவல்களை எப்படித் திருடுகிறார்கள்,  நம் ஸ்மார்ட்போன்களுக்கு எப்படிப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள், அதிலிருந்து  எப்படித் தற்காத்துக்கொள்வது?

டிஜிட்டல்  கருவிகள் அனைத்துமே நிரல்களால் (புரோகிராமிங்) இயங்குபவை.  நிரல்கள் என்றால் கணினி மொழியில் கணினிகளுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை.  ‘இந்த உள்ளீடு (இன்புட்) வந்தால், இப்படி இயங்கு’ என்பது ஓர் அறிவுரை (இன்ஸ்ட்ரக்‌ஷன்). இப்படிப்பட்ட அறிவுரைகளின் தொகுப்புதான் ஒரு நிரல். இப்படியான நிரல்களின் தொகுப்புதான் ஒரு மென்பொருள்.  டிஜிட்டல் கருவிகள் அனைத்தும் இப்படியான மென்பொருட்களால் இயங்குகின்றன.

மாயம் காட்டும் மால்வேர்

சில விஷமிகள், இது மாதிரியான கணினி நிரல்கள் எழுதுவதில்  சாமர்த்தியசாலிகள்.  அவர்கள் நமது கணினி, கைப்பேசிகளை ‘ஹேக்’ செய்யும் திட்டத்துடன் உருவாக்கும் மிக மோசமான நிரல்களைத்தான் ‘மால்வேர்’ என்கிறோம்.

ஒரு மால்வேர் என்பது டிஜிட்டல் வைரஸாகவோ தகவலாகவோ இருக்கலாம். அது உங்கள் கைப்பேசியைச் செயலிழக்க வைக்கும் நிரலாகவோ உங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தி தங்களுக்கான வேலைகளைச் செய்துகொள்ளும் நிரலாகவோ இருக்கலாம்.  எப்படிப் பார்த்தாலும் ஒரு மால்வேர் என்பது ஆபத்தானது.

நீங்கள் பணப் பரிவர்த்தனைக்காக ஏதேனும் செயலியைப் பயன்படுத்துகிறீர்களா?

அந்தச் செயலியைப் போன்று, போலிச்  செயலி ஒன்றை விஷமிகள் உருவாக்குவார்கள்.  உண்மையான செயலியைப் போலவே அனைத்துவித ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும் இந்தப் போலிச் செயலியில், உங்கள் வங்கிக் கணக்குகளை அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பும் ஒரு நிரலை எழுதி இருப்பார்கள்.

இதைத்தான்  ‘மால்வேர்’ என்பார்கள். இப்போது கூகுள் ‘பிளே ஸ்டோரில்’ இந்தச் செயலியைப் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். அதைப் பலரும் தவறுதலாகத் தரவிறக்கம் செய்துகொள்வார்கள்.  இந்தச் செயலியைப் பயன்படுத்தி நீங்கள் பணப் பரிவர்த்தனை செய்யும்போது உங்களின் தகவல்கள் அனைத்தும் இந்தப் போலிச் செயலியை உருவாக்கியவரின் கைக்குச்  சென்றுவிடும்.

பணயத் தொகை கேட்கும் ‘ரான்சம்!’

இதுபோன்ற ஒரு மால்வேர்தான் ‘ரான்சம்வேர்’ (Ransomware). சில வருடங்களுக்கு முன்பு உலகத்தையே உலுக்கியது. இது எளிதான ஒரு மால்வேர்.  ஒரு அழகான ஒளிப்படம் அல்லது ஒரு வீடியோ உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். உடனே நீங்கள் அதை ‘கிளிக்’ செய்வீர்கள். அது உங்கள் கணினி / கைப்பேசிக்குள் தரவிறக்கப்படும். அவ்வளவுதான். அந்த நிரல் எளிய வேலையைத்தான் செய்யும்.

உங்களின் அந்தரங்கத் தகவல்கள் முழுவதையும் இணையத்தின் உதவியுடன் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பிவிடும். இல்லை என்றால் உங்களின் சாதனத்தை அது மூடிவிடும். நீங்கள் உள்ளே நுழைய முற்பட்டால் பாஸ்வேர்டு கேட்கும்.  நிச்சயம் உங்களுக்கு அந்த பாஸ்வேர்டு தெரியாது. அது அந்த மால்வேரை உருவாக்கிய விஷமிகளுக்கு மட்டுமே தெரியும்.

நீங்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் வேளையில், அவர்கள் உங்களுடன் தொடர்புகொள்ள ஒரு சிறிய மெஸெஞ்சர் மாத்திரம் இருக்கும். அதில் அவர்கள் பணம் கேட்பார்கள். நீங்கள் அந்தப் பணத்தைக்  கட்டிவிட்டால் போதும், உங்களுக்கான பாஸ்வேர்டை அனுப்பிவிடுவார்கள்.

இப்படியாக, செயலிகளைக்கொண்டு நம் தகவல்களைத் திருடும் மால்வேர்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.

தப்பிப்பது எப்படி?

ஒரு செயலியைத் தரவிறக்கும்போது அந்தச் செயலி ‘வெரிஃபைட்’ (verified) செய்யப்பட்டதுதானா  என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.  உதாரணத்துக்கு, உங்களுக்கு ஒரு வங்கியின் செயலியைப் பற்றிய சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட அந்த வங்கியைத் தொடர்புகொண்டு அவர்களின் செயலிதானா என்பதை உறுதிசெய்துகொண்டு பயன்படுத்துங்கள்.

சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். அவை மால்வேர்களைக் கண்டுபிடித்து அழித்துவிடும்.

சந்தேகப்படும்படியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றில் தரப்பட்டிருக்கும் ‘லிங்க்’குகளை உடனடியாக அழுத்தாதீர்கள். அதேபோலச் சந்தேகப்படும்படியான வீடியோ அல்லது ஒளிப்படங்களைத் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

நீங்கள் தகவல்களைச் சேமிக்கும்போதும், பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும் முடிந்த அளவு ‘டூ ஃபேக்டர் ஆத்தெண்டிகேஷன்’ (two factor authentication) எனும் ‘இருமுறை நுழைவை’ப் பயன்படுத்துங்கள். இதனால் முடிந்தவரை மால்வேர்களிலிருந்து தப்பிக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் செயலியிலும் இதுபோன்ற முறை இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

appjpg100 

பேரிடர் காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும் சில செயலிகளைப் பற்றிய தொகுப்பைச் சென்ற வாரம் பார்த்தோம்.  அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டுப் பலரும் என்னைத் தொடர்புகொண்டு ‘TN SMART’ எனும் செயலியைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.  இந்தச் செயலி இலவசமாகவே கிடைக்கிறது.

தமிழக அரசின் ‘மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்’ உருவாக்கியிருக்கும் செயலி இது. ஆனால் அரசு இதை முறையாக வெளியிடவில்லை. அதனால் பலருக்கும் இப்படி ஒரு செயலி இருப்பது தெரியவில்லை. இந்தச் செயலியின் உதவியுடன் பேரிடர்களைப் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் பெறலாம்.

https://play.google.com/store/apps/details?id=int_.rimes.tnsmart&hl=en

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்