மூலிகையே மருந்து 29: நோய் உருவும் நாயுருவி!

By டாக்டர் வி.விக்ரம்குமார்

மேகக் கூட்டங்கள் ஒன்றுகூடி மழைநீரைத் துளிர்க்கும் கார்காலம்… கூட்டமாய் முளைத்திருக்கும் சில அடி உயரத்திலான ‘நாயுருவி’ தாவரங்கள்… அந்தப் பகுதியில் நடமாடும்போது, கொக்கி போன்ற அதன் விதைகள் ஆடைகளில் ஒட்டிக்கொண்டு உறவாடும் பாசப்பிணைப்பை, பலர் அனுபவித்திருக்கலாம்.

ஒட்டிய உறவைத் (விதைகளை) தட்டிவிட நாம் ஆசைப்பட்டாலும், அவ்வளவு விரைவில் நம்மைவிட்டு விலகாமல் தனது அன்பை ஆழமாக உணர்த்தும். மழையின் ஊட்டத்தைப் பெற்றுக்கொண்டு, மற்ற பயிர்களினூடே பசுமையாய் நாயுருவி உயிர்த்தெழுவதைப் பார்க்க முடியும்.

நோய் நீக்கும் நாயுருவி இலைகள் சேர்ந்த கலவைக் கீரை சமையல், முன்பெல்லாம் பிரசித்தமாக இருந்திருக்கிறது. களைக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட பல மருத்துவக் குணமிக்க மூலிகைகளுள் நாயுருவியும் ஒன்று!

பெயர்க் காரணம்: அபமார்க்கி, நாய்க்குருவி, சரமஞ்சரி, சனம், சுவானம், சேகரி, மாமுனி போன்ற வேறு பெயர்கள் நாயுருவிக்கு இருக்கின்றன. விதைகள் (அரிசி) கொண்ட சிறு நெற்‘கதிர்’ போல காணப்படுவதால் ‘கதிரி’ என அழைக்கப்படுகிறது. நாட்டினத்தைக் குறிக்க ‘நாய்’ எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் தாவரத்திலிருந்து ‘உருவி’ உடலில் ஒட்டிக்கொள்வதால், ‘நாயுருவி’ என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

அடையாளம்: சிறுசெடி வகையைச் சார்ந்தது. மென்மையான ரோம வளரிகளைக்கொண்ட இதன் இலைகள், தலைகீழ் முட்டை வடிவத்தில் காணப்படும். இலைகளும் தண்டும் சிவந்து காணப்படுவது செந்நாயுருவி வகை. ‘அகைராந்தஸ் அஸ்பெரா’ (Achyranthes aspera) என்பது இதன் தாவரவியல் பெயர். ‘அமரந்தேசியே’ (Amaranthaceae) குடும்பத்தைச் சார்ந்தது. அகைராந்தைன் (Achyranthine), பிடைன் (Betaine), பீட்டா கரோடீன் (Beta-Carotene), வைட்டமின் – சி, கால்சியம் ஆகிய பொருட்களைக் கொண்டது.

உணவாக: இதன் விதையைச் சிறிதளவு அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உட்கொண்டு வர, மூலம், ஆசன வாய் சார்ந்த நோய்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். பாசிப்பருப்பை மெலிதாக வேகவைத்து, அதில் தக்காளி, வெங்காயம், பூண்டு, உப்பு, நாயுருவி இலைகளைப் போட்டு வதக்கி, கூட்டு போலச் செய்து அரிசி சாதத்தில் பிசைந்து சாப்பிட, நாவில் சுவையும் உடலில் ஊட்டங்களும் அதிகரிக்கும். இதன் இலைகளைப் பொரியல் போலவும் செய்து சாப்பிடலாம்.

மழைக் காலத்தில் துளிர்விடும் இளம் இலைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. இருமலைத் தடுக்க, சவ்வாது மலைவாசிகள் இதன் வேர்ப்பொடியோடு, மிளகு சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிடுகின்றனர். சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் தன்மை உடையதால் வீக்கம், நீரடைப்பு போன்ற நோய் நிலைகளில் நாயுருவி சிறந்த மருந்து. வயிற்றுப் புண்ணைக் குணமாக்க, நாயுருவி, மிளகு, மண்டூரம் சேர்த்துச் செய்யப்படும் மருந்து, சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

மருந்தாக: ஹீமோகுளோபின், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாயுருவி உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை இதிலுள்ள ஃப்ளேவனாய்ட்கள் கட்டுப்படுத்துகின்றன. சித்த மருந்துகளை வழங்கும்போது, இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘உப்பை’ சேர்த்துக் கொடுக்க, மருந்தின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும்.

ரத்தக் குழாய்களில் வீக்கமோ பாதிப்போ ஏற்படாமல் நாயுருவி பார்த்துக்கொள்ளும். ‘அலாக்ஸான்’ வேதிப்பொருளைக் கொடுத்து நீரிழிவு உண்டாக்கப்பட்ட எலிகளுக்கு, நாயுருவியின் சத்துக்களைக் கொடுத்துப் பார்த்ததில், சர்க்கரையின் அளவு வெகுவாகக் குறைந்திருந்தது.

வீட்டு மருந்தாக: வேம்பு, கருவேல் வரிசையில் நாயுருவி வேரைக் கொண்டு பல் துலக்க, பற்கள் பலமாவதோடு நுண்கிருமிகளின் தாக்கமும் குறையும். இதன் வேரைப் பற்குச்சியாகப் பயன்படுத்தினால் ‘முகத்தில் வசீகரம் உண்டாகும்’ என்கிறது சித்தர் பாடல். உடலில் அரிப்பு அதிகமாக இருக்கும்போது, நாயுருவி இலைகளோடு, குப்பைமேனியைச் சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இலைச் சாற்றை நீரில் கலந்து, சிறிதளவு உட்கொள்வதாலும் தோல் நோய்கள் குணமாகும்.

பேதியை நிறுத்த நாயுருவி இலைகளை அரைத்து மோரில் கலந்து சாப்பிட உடனடியாகக் கட்டுப்படும். முழுச் செடியையும் நெருப்பில் பொசுக்கி உண்டாகும் சாம்பலைப் பாலில் கலந்து முகத்தில் பூச, பொலிவு கிடைக்கும். சாம்பலைக் கஞ்சியில் கலந்து விஷக்கடிகளுக்கான மருந்தாக மலைப் பகுதிகளில் பயன்படுத்துகின்றனர்.

நாயுருவி முழுத் தாவரத்தை அரைத்துக் குடிநீராக்கி, பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு வழங்க, குழந்தை பெற்ற பின் கருப்பையில் தேங்கிய அழுக்குகள் (குருதி, நஞ்சுப்பை) முழுவதுமாக வெளியேறும்.  பிரசவத்துக்குப் பின் சுரம் ஏற்படாமல் பாதுகாக்க, மிளகு, பூண்டு, நாயுருவி இலைகள் சேர்த்துச் செய்யப்படும், சுரம் போக்கும் மருந்து  புழக்கத்திலிருக்கிறது.

நாயுருவி அரிசியை ஒன்றிரண்டாக இடித்துக் கொண்டு, ஒரு கைப்பிடி அளவு சாப்பிட, சில நாட்களுக்குப் பசி உணர்வு இருக்காது என்பதால், நீண்ட நாட்கள் தியானத்தில் இருப்பவர்கள் இதன் அரிசியைப் பயன்படுத்துவார்களாம். இதை அடிப்படையாக வைத்து எடைக்குறைப்பு சிகிச்சையில் இதன் பலன் குறித்து நிறைய ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருக்கின்றன.

நோயுருவி…!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

30 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்